கேலிச் சித்திரம்

கேலிச் சித்திரங்கள் (cartoons) அல்லது கேலிப் படங்கள் எனப்படுபவை நகைச்சுவையைத் தூண்டும் வண்ணம் வரையப்படும் சித்திரங்கள் ஆகும். பல சொற்களில் தலையங்கம் எழுதி உணர்த்த முடியாத கருத்துக்களைக் கூடக் கேலிச் சித்திரங்களும் கருத்துப் படங்களும் எளிதாக உணர்த்துகின்றன. சமுதாயம், சமயம், அரசியல், பொருளாதாரத் துறைகளில் உள்ள குறைகளை நகைச்சுவையுடன் உணர்த்தும்படி கேலிப்படங்கள் அமைகின்றன.தமிழில் ஆனந்த விகடன், குமுதம், தினமணி போன்ற இதழ்களில் கேலிச் சித்திரங்கள் வெளி வருகின்றன. ஈழத்தில் சிரித்திரன் இதழில் வெளி வந்த கேலிச் சித்திரங்கள் புகழ் பெற்றவை.

கேலிச்சித்திரம் எப்படி வந்தது?

இத்தாலி மொழியில் Cartoon என்பது கெட்டியான காகிதத்தைக் குறிக்கும். கெட்டியான காகிதங்களில் தான் அப்போது அங்கே ஓவியங்கள் வரைவார்கள். 1921 ம் ஆண்டில் பிரிட்டனின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தை அலங்கரிக்க ஓவியர்களிடையே போட்டி ஒன்று நடாத்தப் பட்டது. அந்தப் போட்டிக்காக (கெட்டியான காகிதங்களில்) வரையப் பட்ட பல ஓவியங்கள் நிராகரிக்கப் பட்டன. கேலிச் சித்திரங்கள் போன்று இருந்த - நிராகரிக்கப் பட்ட சில ஓவியங்களை பஞ்ச் என்ற பத்திரிகை ஒன்று பஞ்ச் Cartoon என்ற தலைப்பில் ஒவ்வொன்றாகப் பிரசுரித்தது. காலப் போக்கில் இவ்வித கேலிச்சித்திரங்களுக்கு Cartoon என்ற பெயர் நிலைத்து விட்டது[1].

நோக்கம்

கேலிச்சித்திரங்கள் அதிகமாக சில மனிதர்களை, அவர்களின் கொள்கைகளைக் கேலி செய்யும் விதமாக வரையப்படுகின்றன. குறிப்பாக கேலி செய்யப்படுபவர்கள் படங்களை நகைச்சுவையுணர்வுடன் அவர்களின் உருவம் அனைவரும் அறியும் வழியில் வரையப்படுகிறது. இந்தக் கேலிச் சித்திரங்கள் பிறர் மனத்தைப் புண்படுத்தாத வழியில் வரையப்படுகிறது. வரையப்படும் படங்கள் உண்மையின் அடிப்படையிலும், மக்களுக்கு சில செய்திகளைக் கூறும் வகையில் அதே சமயம் சிந்திக்க வைக்கும் வகையில் வரையப்படுகிறது.

தமிழ்நாட்டின் முதல் கருத்துப்படம்

தமிழ்நாட்டில் முதன்முதலாக கருத்துப்படங்களை வெளியிட்டவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தான். இவர் ஆங்கிலேயர் ஆட்சியின் குறைகளை “இந்தியா” எனும் இதழில் கேலிச்சித்திரங்களின் மூலம் வெளியிட்டார்.[2]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. Punch.co.uk. "History of the Cartoon".
  2. டாக்டர். மா.பா. குருசாமி எழுதிய “இதழியல் கலை” நூல், பக்கம்.182.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.