கேம் ஆஃப் த்ரோன்ஸ் (தொலைக்காட்சித் தொடர்)

‘அரண்மனை சதி’. வரலாற்றுப் புனைவுகளுக்கு மிக எளிதாக அமையக்கூடிய ப்ளாட் இதுவாக தான் இருக்கமுடியும். பெரும்பாலான புனைவுகள் இதை வைத்துதான் உருவாகி இருக்கின்றன. ஆட்சிக்கு உரித்தான ஒருவர் எங்கோ இருக்க, ஆட்சிக்கு சம்மந்தம் இல்லாத பலரும் சிம்மாசனத்திற்காக தந்திரம் செய்து அடித்துக் கொள்வதுதான் இந்த பிளாட். கேம் ஆப் த்ரோன்ஸ் நாடகமும் இந்த வகை தான். ஆனால் இது ஒரு ஃபேண்டஸி கதை. ஒரு காலத்தில் இங்கிலாந்தின் ராஜ்ஜியத்திற்காக லான்காஸ்டர் மற்றும் யார்க்குகளுக்கிடையே நடந்த யுத்தத்தை தழுவி நிறைய கற்பனையுடன் உருவாக்கப்பட்ட கதை இது.

Game of Thrones
Game of Thrones title card.jpg
வகை
  • கற்பனை
  • தொடர் நாடகம்
தயாரிப்பு
  • டேவிட் பெனியாஃப்
  • டி.பி .வீஸ்
நடிப்பு கேம் ஆஃப் த்ரோன்ஸ் கதாப்பாத்திரங்களை பார்க்க
முகப்பிசைஞர் ராமின் தவாதி
முகப்பிசை "Main Title"
இசைஞர் ராமின் தவாதி
நாடு அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
பருவங்கள் 8
இயல்கள் 74 (பகுதிப் பட்டியல்)
தயாரிப்பு
செயலாக்கம்
  • டேவிட் பெனியாஃப்
  • டி.பி .வீஸ்
  • கரோலின் ஸ்ட்ராஸ்
  • பிராங்க் டோல்கர்
  • பெர்னான்டெட் கால்பீல்டு
  • ஜார்ஜ் R.R.மார்ட்டின்
நிகழ்விடங்கள்
  • கனடா
  • க்ரோஷியா
  • ஐஸ்லாண்ட்
  • மால்டா
  • மொராக்கோ
  • ஸ்பெயின்
  • வடக்கு அயர்லாந்து
  • ஸ்காட்லாந்து
  • அமெரிக்கா
ஓட்டம்  50–80 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
  • டெலிவிஸன் 360
  • க்ரோக்! டெலிவிஸன்
  • ஜெனெரேட்டர் எண்டெர்டைன்மெண்ட்
  • ஸ்டார்ட்லிங்க் டெலிவிஸன்
  • பிக்ஹெட் லிட்டில்ஹெட்
வினியோகத்தர் வார்னர் ப்ரோஸ்.டெலிவிஸன் டெஸ்ட்ரிபியூஷன்
ஒளிபரப்பு
அலைவரிசை எச் பி ஓ
பட வடிவம் 1080i (16:9 HDTV)
ஒலி வடிவம் டால்பி டிஜிட்டல் 5.1
முதல் ஒளிபரப்பு ஏப்ரல் 17, 2011 (2011-04-17)
இறுதி ஒளிபரப்பு present
காலவரிசை
தொடர்பு ஆப்ட்டர் தி த்ரோன்ஸ்
திரோன் காஸ்ட்
புற இணைப்புகள்
வலைத்தளம்
தயாரிப்பாளர் வலைத்தளம்


ஏழு பெரும் தேசங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தி யார் என்று பலரும் சண்டையிட்டுக் கொள்வதே கதை. யார் சக்ரவர்த்தி என்று நாம் நம்புகிறோமோ அவர் இறந்துவிடுவார். அப்படி செய்தே அடுத்து யார் வரப் போகிறார், கதை என்ன என்ற க்யூரியாசிட்டியை தூண்டி விடுவார்கள். இந்த க்யூரியாசிட்டியும், கதை முழுக்க இருக்கும் எதிர்பாராத திருப்பங்களும்தான் திரைக்கதையை நகர்த்துகின்றன.

பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்கள் எதிர்பார்த்திருந்த ஒன்றையோ அல்லது எதிர்பார்க்கத் தவறிய ஒன்றையோ செய்துவிடுவதே இந்த உத்தி. பாட்ஷா படத்தில் மாணிக்கத்தை கட்டி வைத்து அடிக்கப் போவார்கள். அவர் சண்டை போடப் போகிறார் என்று தான் எதிர்பார்ப்போம். ஆனால் செய்ய மாட்டார். அப்படியே விட்டிருந்தால் அங்கே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்காது. அவருக்காக சண்டையிட அவர் நண்பர்கள் பல திசைகளில் இருந்து வருவார்கள். இது தான் பில்ட் அப். அவர்களை வர வேண்டாம் என்று சொல்லிவிடுவார். அடி வாங்குவார். ஏதாவது நடக்காதா என்ற எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு போய் எதுவும் செய்யாமல் காட்சியை முடித்துவிடுவார்கள். ஆனால் அடுத்து இடைவேளைக்கு முன்பு வரும் காட்சியில் யாரும் எதிர்பாராத நேரத்தில் வந்து சண்டை போடுவார். நேரடியாக இந்த காட்சியை வைத்திருந்தால் என்ன பில்ட் அப் இருந்திருக்கும்! அவர் திருப்பி அடிப்பார் என்பது நாம் எதிர்பார்த்த ஒன்று தான். ஆனால் நாம் எதிர்பார்க்காத தருணத்தில் அதை செய்கிறார். ரன் படத்திலும், கில்லி படத்திலும் இதுபோன்ற ஸ்வாரஸ்யமான  ஹீரோயிச காட்சிகளைப் பார்க்கலாம். க்யூரியாசிட்டியை கூட்டி நாம் எதிர்பார்த்ததை எதிர்பார்க்காத சமயத்தில் செய்யும் உத்தி இது.

தமிழில் நாகா இந்திரா சௌந்தர்ராஜன் கூட்டணியில் வந்த சீரியல்களை தரமானதொரு எண்டர்டெயின்மெண்ட் என்று சொல்லலாம். அவர்களின் ‘ருத்ரவீணை’ நாடகம் முழுக்க யார் ருத்ரன் என்பதுதான் கேள்வி, கேம் ஆப் த்ரோன்ஸ் கதையில் யார் சக்கரவர்த்தி என்ற கேள்வியை போல. ஆனால் நாம் யூகித்த யாரையும் ருத்ரனாக்காமல், யூகிக்க தவறிய, கதையில் முக்கியமற்று வந்துப் போகும் ஒரு கதாபாத்திரத்தை ருத்ரனாக்கி கதையை முடிப்பார்கள். அவன் ஏன் ருத்ரன் என்பதற்கு ஒரு ஃபிளாஷ்பேக்கும் இருக்கும். இது எதிர்பார்ப்பைக் கூட்டி எதிர்பார்க்கத் தவறிய ஒன்றை வைத்து காட்சியையோ கதையையோ முடிக்கும் உத்தி.

இந்த நாடகத்தின் மூல நாவலை பல ஆயிரம் பக்கங்கள் எழுதிய R.R. மார்ட்டின், பாயிண்ட் ஆஃப் வியூ (POV) உத்தி மிக முக்கியமானது என்கிறார். இரண்டாம் உலகப் போரை பற்றி பேச வேண்டுமெனில் ஹிட்லர் பார்வையிலும் கதை நகரவேண்டும், ஜப்பான் பார்வையிலும் கதை நகரவேண்டும், முசோலினியின் கண்ணோட்டத்தையும் காண்பிக்க வேண்டும், அப்போதுதான் கதை முழுமை அடையும் என்கிறார். இந்த நாடகத்தில் லேன்னிஸ்டர், ஸ்டார்க், டைரல், பராத்தியன் என பல வம்சாவெளியை சேர்ந்தவர்களும் முக்கிய பாத்திரங்களாக வருகிறார்கள். இவர்கள் எல்லோரின் கண்ணோட்டதிற்கும் முக்கியத்துவம் தரப்பட்டு, அவர்கள் எல்லோரின் மனநிலையும் விவரிக்கப்பட்டிருக்கும் என்பதை கவனிக்க வேண்டும்.

பொதுவாக நாவலில், கதையை நிறுத்தி கதையின் பின்னணியை, களத்தை விவரிக்க நிறைய அவகாசம் உண்டு. நாவலில் திடீரென்று கதையை யார் கண்ணோட்டத்தில் வேண்டுமானாலும் நகர்த்திடலாம்.  ஆனால் நாவலில் வரும் எல்லாவற்றையும் படத்தில் சொல்லிவிட முடியாதே! அதற்கு வாய்ஸ் ஓவர் பயன்படுத்திக்கொள்வது ஒரு உத்தி.

இங்கே அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி நாடகத்தை உதாரணமாக சொல்லலாம். அந்த நாடகத்தில் coven என்ற சீசனில் வாய்ஸ் ஓவர் இல்லாமல் நகர்ந்துக் கொண்டிருக்கும் கதையில், ஒரு கட்டத்திற்கு மேல் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் வாய்ஸ் ஓவர் வைத்து அதன் மனநிலையை விவரித்திருப்பார்கள். பாத்திரங்கள் அனைவரும் சூனியக்காரிகள். அவர்களுள் அடுத்த தலைவி யார் என்ற கேள்வி தான் கதை. அங்கே கதாபாத்திரங்களின் அறிமுகத்தில் வாய்ஸ் ஓவர் தேவைப் படவில்லை. ஆனால் ஒவ்வொரு பாத்திரமும் transformation புள்ளியை அடைந்த பிறகு, அவர்கள் தங்களை retrospect செய்யும் விதமாக வாய்ஸ் ஓவர் அமைந்திருக்கும்.

ஆனால் கேம் ஆஃப் த்ரோன்ஸ் கதையில் வாய்ஸ் ஓவர் பயன்படுத்த தாங்கள் விரும்பவில்லை என்று இந்த நாடகத்தின் திரைக்கதை ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். வாய்ஸ் ஓவருக்கு இணையாக கதாப்பாத்திரங்களின் மனநிலையை வெளிப்படுத்தும் இன்னொரு உத்தி ‘வசனம்’ என்கிறார்கள். இங்கே ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசும் வசனங்கள் தான் அவர்களின் மனநிலையை வெளிப்படுத்தும். எந்த கதையிலும் மனநிலைக்கு ஏற்பதானே ஒரு பாத்திரம் பேச போகிறது இதில் என்ன ஆச்சர்யம் என்று யோசிக்கலாம். அப்படி இல்லை. இங்கே சொல்வது காட்சிகளை மெருகேற்ற பயன்படும் ஸ்பெஷல் வசனங்கள் பற்றி. ஒரு கதாப்பாத்திரத்தின் மனநிலையை வெளிப்படுத்த வசனத்தில் இருக்கும் வீரியம் அதிகம் பயன்படும். அதனால், கதையை மெருகேற்ற வசனத்தை சேர்க்க முடிந்த இடத்தில் சேர்த்து விடலாம். வசனம் நீளமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் conveying-யாக இருக்கவேண்டும்.

நல்லவரா கெட்டவரா என்ற கேள்விக்கு ‘தெரியல’ என்ற ஒரு வார்த்தைதான் அத்தனை வருடம் வாழ்ந்த வேலு நாயக்கரின் மனநிலை. அதுதான் அந்த கதையின், கதாப்பத்திரத்தின் முடிவு. அந்த வசனம் இல்லாமலேயே படத்தை முடித்திருக்கலாம். ஆனால் அந்த கதாபாத்திரத்தின் ஆர்க் முழுமை அடைய அங்கே சேர்க்கபட்ட அந்த வசனம் பயன்படுகிறது.

இதை தவிர ஒரு பெரிய ‘செட்டிங்’ பற்றி பார்வையாளர்களுக்கு விளக்கவும்  வசனம் பயன்படும். இதை exposition அல்லது establishing எனலாம். புதையலை தேடி போகும் ஒரு கதையில் அவர்கள் எதை தேடி போகிறார்கள் எங்கே போகிறார்கள் என்று வாய்ஸ் ஓவரில் சொல்வது ஒரு உத்தி எனில், படத்தில் ஆரம்பத்திலேயே அறிமுகம் ஆகும் இரண்டு பாத்திரங்கள் தங்களுக்குள்ளான உரையாடலின் மூலம் அதை விவரிப்பது இன்னொரு உத்தி. இந்த நாடகத்தில் அந்த உத்தி தான் அதிகம். ஆனால் இது பல எபிசோட்கள் கொண்ட நாடகம் என்பதால் அவர்கள் பேசிக்கொள்வது சுவாரஸ்யமற்று தோன்றுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் ஒரே படத்தில் பாத்திரங்கள் பேசிக் கொண்டே எல்லாவற்றையும் விவரிக்கிறார்கள் என்று வைப்பது சற்று சுவாரஸ்யக் குறைவை ஏற்படுத்தலாம். அதனால் காட்சிகளாக கதை சொல்ல முடிந்த இடத்தில் வசனங்களை திணிப்பதை தவிர்த்துவிடுவதே நல்லது.

வசனம் என்றதும் வசனத்திற்காகவே பெயர் பெற்ற டைரியன் லேன்னிஸ்டர் பாத்திரத்தை நினைவு கூற வேண்டும். பல முக்கியமான தத்துவங்களை பேசும் குள்ள கதாபாத்திரம் இது. பல இடங்களில் கதையின் போக்கையே மாற்றிடும் பாத்திரமும் இதுதான்.


இதில் ஏராளமான பாத்திரங்கள் இருந்தாலும் இவர்கள் எல்லோரையும் இவர்களுக்குள் எங்கோ மறைந்திருக்கும் மனிதத்தன்மை தான் இணைக்கிறது என்று R.R. மார்ட்டின் குறிப்பிடுகிறார். ஆம். அந்த மனித தன்மை தான் Theme element. மிக கொடிய கெட்டவர்களுக்குள்ளும் அந்த தன்மை உண்டு. கெட்டவர்களாக இருப்பவர்களும் ராஜ்ஜியம் நிலையாக இருந்தால்தான் மக்கள் நன்றாக வாழ்வார்கள் என்று நம்புகிறார்கள். உண்மையில் இவர்களில் யாரும் ஒரெடியாக கெட்டவர்கள் கிடையாது. இவர்களின் ஒரு முகம் தான் கெட்டதாக இருக்கிறது. மற்றபடி அவர்களுக்குள்ளும் பல தூய்மையான குணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதே போல் நல்லவர்களாக வருபவர்களும் சந்தர்ப்பங்களில் பிறருக்கு துரோகம் செய்கின்றனர். எல்லாவற்றையும் இந்த திரைக்கதை விலாவரியாக விவரிக்கிறது. அதற்கான அவகாசம் கதையில் இருக்கிறது. ஆனால் அவகாசம் இல்லாத பட்சத்தில் அவற்றை சுருக்கமாக சொல்லிடலாம். வில்லனை கொடூரமாகவே காண்பிக்கலாம் மற்றதெல்லாம் தேவையில்லை என்று எண்ணுவதை விட, வில்லனுக்கும் சில நல்ல குணங்கள் உண்டு என்று காண்பிப்பது நல்லது. அதே போல் மிக ஸ்ட்ரைட் ஃபார்வார்டாக இருக்கும் ஒரு  போலீஸ் கதாநாயகனும் சில நேரங்களில் தன் பிடியை தளர்த்திக் கொள்ளுகிறான் என்று காட்சிகளை வைக்கலாம். அப்படி கதாபாத்திரங்களை யதார்த்தமாக உருவாக்கும் போது அவர்களுடன் பார்வையாளர்களால் ரிலேட் செய்து கொள்ள முடியும். அவர்களை ஏற்றுக் கொள்ள முடியும்.

‘சீ ஆப் லவ்’ படத்தில் சட்டத்திடம் அகப்படாமல் தப்பிக்கும் குற்றவாளிகளை பிடிக்க முடிவு செய்யும் போலீஸ் நாயகன் ஒரு பொய் விழா எற்பாடு செய்து விளம்பரம் கொடுப்பான். விழா உண்மையானது என்று நம்பி வரும் குற்றவாளிகள் அனைவரும் அகபட்டுக் கொள்வார்கள். ஒரே ஒருவன் மட்டும் தன் குழந்தையுடன் வந்திருப்பான். அவனை மட்டும் கதாநாயகன் தப்பிக்க விட்டுவிடுவான். இது படத்தின் ஆர்ம்பத்தில் வரும் காட்சி. இங்கே ஒரே  காட்சியில் நீதியை நிலை நாட்ட நாயகன் எந்த திட்டத்தையும் கையாள்வான் என்பது விளங்கிவிடுகிறது. ஆனாலும் அவன் இறக்க குணம் உள்ளவன் என்பதும் விளங்கிவிடுகிறது.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஒரு ஃபேண்டஸி கதை என்பதால் இதன் மேக்கிங் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும். ஆனால் மேக்கிங்கை விடுத்தாலும், இதன் எழுத்தும், செறிவான வசனங்கள் மட்டுமே பிரம்மாண்ட உணர்வை தந்துவிடும் என்பதுதான் கவனிக்க வேண்டிய ஒன்று. ஒரு டைனசர் கதையில் அந்த மிருகத்தை உடனே காண்பிக்க தேவையில்லை. அது எவ்வளவு பெரியது எவ்வளவு கொடூரமானது என்பதை வசனத்தில் சொல்லியே ஸ்வாரஸ்யத்தை எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட முடியும். அது போன்ற பல உத்திகள் இந்த நாடகத்தில் பயன்படுத்தப் பட்டிருப்பதை கண்டுகொள்ளலாம். ஒருபுறம் ராஜ்ஜியத்திற்காக பலரும் எதிரிகளாக மாறி  அடித்துக் கொண்டாலும், மறுபுறம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து ‘வைட் வாக்கர்ஸ்’ வருகிறார்கள், ‘காட்டு வாசிகள்’ வருகிறார்கள் என மிரளுகிறார்கள். ஆனால் இவர்கள் எல்லோரும் உண்மையில் பயப்படுவது ‘குளிர்க்காலத்தை பார்த்து தான். குளிர் வந்தால் பல ஆண்டுகாலம் அது அந்த பூமியையை புரட்டி போட்டு விடும் என்று பயந்து நடுங்கி வசனம் பேசி, நம்மையும் பயம் கொள்ள செய்கிறார்கள். இந்த வசனத்தில் இருக்கும் விவரணை குளிர் வருவதற்கு முன்பே அந்த குளிர் பயங்கரமானது என்ற உணர்வை நம்முள் விதைக்குறது. கதையில் மீண்டும் மீண்டும் வந்து நம்மை பயமுறுத்தி, கதையின் போக்கை நிர்ணயிக்கும் அந்த ஒற்றை வரி வசனம், ‘Winter is coming’.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.