குறிப்பேடு (நூல்)

குறிப்பேடு என்னும் பொது அறிவு நூலானது அந்நாளைய பொதுக்கல்வி இயக்குநரக நூலகரும் பின்னாளைய தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை இயக்குநருமான வே. தில்லைநாயகத்தால் 1961ஆம் ஆண்டில் முதன்முறையாக எழுதப்பட்டது. அதன் பின்னர் 1962, 1963ஆம் ஆண்டுகளில் இற்றைப்படுத்தப்பட்ட அடுத்தடுத்த பதிப்புகள் வெளிவந்தன. எனவே தமிழில் முதன்முதலாக வெளிவந்த ஆண்டு நூல் (Year Book) இதுவே எனக் கருதப்படுகிறது.

குறிப்பேடு (நூல்)
வகை:குறிப்புதவி நூல்
துறை:பொது அறிவு
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:முதற்பதிப்பு 512 இரண்டாம் பதிப்பு 604 மூன்றாம் பதிப்பு 580
பதிப்பகர்:மோகன் பதிப்பகம், சென்னை
பதிப்பு:முதற்பதிப்பு 1961 இரண்டாம் பதிப்பு 1962 மூன்றாம் பதிப்பு 1963

நோக்கம்

மக்கள் படிக்கும்போது – உரையாடும்போது – கட்டுரை வரையும்போது- வினாகள் எழுகின்றன. சில சமயம் தெரிந்தவரைக் கேட்டு அறிந்துகொள்கின்றனர். பெரும்பாலான சமயம் நூலகத்தையே நாடிச் செல்கின்றனர். நூலகரும் ஏடுகளைத் தேடித்துருவிப் பதிலிறுக்கிறார். ஆனால், அதற்குப் பிடிக்கும் நேரமும் வேலையும் அதிகம். இந்த வேலையைத் திறம்படச் செய்ய, குறைந்த முயற்சியில் செய்து முடிக்க இத்தகு குறிப்புகளையெல்லாம் ஒரு நூலில் தொகுத்துக் காணமுடியுமானால்..? அதுவும் இன்றையக் குறிப்புகளைத் தருமானால்..? – எவ்வளவு பயனுள்ளதாயிருக்கும்” [1] என்னும் எண்ணம் தனது உள்ளத்தில் தோன்றியதான் விளைவே குறிப்பேடு என்னும் இந்நூல் என அதன் முன்னுரையில் இந்நூலின் நோக்கத்தை எடுத்துரைக்கிறார் வே. தில்லைநாயகம்.

நூலாக்க நெறிமுறை

“அறிவு கணந்தோறும் வளர்ந்துகொண்டே, விரிந்துகொண்டே, மாறிக்கொண்டே இருக்கிறது. எனவே அறிவுநூல் பழையன கழித்து, புதியன கூட்டி காலத்திற்கேற்ப வெளிவர வேண்டும். அப்போதுதான் அந்நூல் பயனுள்ளதாயிருக்கும்.” [2]அம்முறையில் ஒவ்வோராண்டும் பழையன கழித்து, புதியன கூட்டிச் செப்பமுற நிகழ் நிலைக்கேற்ப படைக்கப்பட்டதே குறிப்பேடு என்னும் இந்நூல் என இதன் நூலாக்க நெறிமுறையை விளம்புகிறது இதன் பதிப்புரை.

பொருட்குறிப்பு

குறிப்பேடு என்னும் இந்நூலில் 1008 பதிவுகளை உடைய “சொற்குறிப்பு” என்னும் சொல்லவுடைவும் பின்வரும் பதினொரு இயல்களும் உள்ளடக்கமாக இருக்கின்றன: [3]

  1. அதிசய அண்டம்
  2. புதிராம் பூமி
  3. உலக நாடுகள்
  4. புதிய இந்தியா
  5. நமது தமிழகம்
  6. இலக்கிய இல்லம்
  7. அறிவியல் அரங்கு
  8. பொதுமேடை
  9. பெருமக்கள் மன்றம்
  10. நிகழ் நிலையம்
  11. சுருக்கமும் விரிவும்

சான்றடைவு

  1. வே.தில்லைநாயகம், குறிப்பேடு, இரண்டாம் பதிப்பு 1962, மோகன் பதிப்பக்கம் – சென்னை, பக்.iii
  2. வே.தில்லைநாயகம், குறிப்பேடு, இரண்டாம் பதிப்பு 1962, மோகன் பதிப்பக்கம் – சென்னை, பக்.iv
  3. வே.தில்லைநாயகம், குறிப்பேடு, இரண்டாம் பதிப்பு 1962, மோகன் பதிப்பக்கம் – சென்னை, பக்.v - x
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.