குருதிச் சிறுதட்டுக்கள்

குருதிச் சிறுதட்டுக்கள் அல்லது இரத்தத் தட்டு (platelet) அல்லது குருதி நுண் திப்பிகள் என்பது குருதியிலுள்ள உயிரணுக்களில் ஒரு வகையாகும். இத்தட்டுக்கள் குருதி உறைதலில் முதன்மையான பங்காற்றுகின்றன. இவற்றின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், இரத்த உறையாமை ஏற்பட்டு குருதிப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புண்டு. அதே நேரம், இவற்றின் எண்ணிக்கை தேவைக்கு அதிகமாக இருந்தால் - பொதுவாக, அறிகுறிகள் இல்லாமல் இருப்பினும் - இரத்தக் கட்டுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. இவற்ரின் வாழ்வுக்காலம் 5 - 9 நாட்களாகும்.

ஒளி நுண்ணோக்கியின் ஊடாக தெரியும், 40 X உருப்பெருக்கம் செய்யப்பட்ட குருதிப் பூச்சு ஒன்றின் தோற்றம். மென்சிவப்பு நிறத்தில் உள்ள செங்குருதியணுக்களுக்கு இடையில், குருதிச் சிறுதட்டுக்கள் ஊதா நிறத்தில் காணப்படுகின்றன. இடதுமேல் பகுதியில் மிகச்சிறிய குருதிச் சிறுதட்டு ஒன்றும், வேறு இரு ஓரளவு பெரிய குருதிச் சிறுதட்டுக்களும் ஊதா நிறத்தில் காணப்படுகின்றன.

அமைப்பு

இரத்தச் சிவப்பணுக்களைப் போன்று, இவையும் அணுக்கரு அற்றவை, மற்றும் தட்டையான வடிவம் கொண்டவை. ஒரு இரத்தத் தட்டின் விட்டம் சராசரியாக 1.5 முதல் 3.0 மைக்ரோ மீட்டர் வரை இருக்கும். பிற அணுக்களைக் காட்டிலும், இவற்றின் எண்ணிக்கை குறைவாதலால், எளிதில் உடல் இவற்றை இழக்க நேரிடும். முறையான அணுக்கரு இல்லாவிடினும், ரைபோ கரு அமிலம் மற்றும் பல கூறுகளும் இவற்றினுள் உண்டு. இவை, இரத்த உறைதல் தேவைப்படும்போது முக்கியப் பங்காற்றுகின்றன.

தோற்றம்

குருதிச் சிறுதட்டுக்கள் உருவாக்கம்

இவை எலும்பு மச்சையில் (bone marrow) உருவாக்கப்படுகின்றன. இவற்றின், தோற்ற முன்னோடி அணுக்கள் மெகாகேரியோசைட்டுக்கள் (Megakaryocytes) எனப்படும் பல அணுக்கருக்கள் கொண்ட அணுக்களாவன. பொதுவாக கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றால் சுரக்கப்படும் துரோம்போபொயட்டின் என்ற வளரூக்கி/இயக்குநீர் (hormone) இவற்றின் எண்ணிக்கையை சரியான அளவில் வைத்திருக்க உதவுகிறது. தட்டுக்களோடு இணைந்திருக்கும் இந்த இயக்குநீர், அவற்றின் எண்ணிக்கை குறையின், குருதியில் கொண்டு வரப்பட்டு, அது எலும்பு உள் திசுக்களுக்கு தூண்டுகோலாக அமைந்து எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்ளும்.

மற்றொருவருடைய உடலில் ஏற்றுவதற்காக ஒரு கொடையாளரிடமிருந்து சேகரிக்கப்பட்டுள்ள 250 மி.லி. இரத்தத் தட்டுக்கள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.