குருசாடே அருங்காட்சியகம், கொல்கத்தா
குருசாடே அருங்காட்சியகம் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தாவில் அமைந்துள்ள ஒரு நாட்டுப்புற கலை மற்றும் கைவினை அருங்காட்சியகமாகும்.
நிறுவப்பட்டது | 1963 |
---|---|
அமைவிடம் | கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
வரலாறு
புகழ்பெற்ற இந்திய ஐ.சி.எஸ் அதிகாரியான குருசாடே தத் 1905-1941 வரை தன் முழு பணிக்காலத்திலும் 3,000 க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை சேகரித்தார். இந்த கலைப்பொருட்களானவை 1929 மற்றும் 1939 ஆண்டுகளுக்கு இடையில் சேகரிக்கப்பட்டன.
அவர் காலமான பிறகு அவரது உடமைகள், குறிப்பாக கலைப்பொருட்கள் ஒரு எஸ்டேட்டில் சேகரித்து வைக்கப்பட்டன, அதில் ஒரு அறக்கட்டளையின் மேற்பார்வையில் வைக்கப்பட்டிருந்தது, அதன் அறங்காவலர்களாக இருவர் இருந்தனர். ஒருவர் குருசாடே தத்தின் மைத்துனரான மேஜர் (கெளரவ) பசந்த குமார் தே ஆவார், அவர் பிஎன்ஆர் நிறுவனத்தின் வணிக போக்குவரத்து மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்,[1] அவர் அக் குடும்பம் சார்பாக நியமிக்கப்பட்ட அறங்காவலர் ஆவார். மற்றொருவர் ஸ்ரீசுபிமால் ரே என்பவர். அவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின், முன்னாள் நீதிபதி ஆவார். அவர் அறக்கட்டளைக்கு சட்ட ஆலோசகராக இருந்தார் . தத்தின் மகனான பிரேந்திரசாதே தத் முன்னர் பர்மா ஷெல் நிறுவனத்தில் பணியாற்றியவர் ஆவார்.[2] அவர் இந்த கலைப்பொருட்களை நிர்வகிப்பதில் முக்கியமான பொறுப்பினை வகித்தார். அறக்கட்டளையின் இரண்டு உறுப்பினர்கள் மற்றும் அவரது மகன் தந்த பரிந்துரைகளின் அடிப்படையில் பெங்கால் பிரதாச்சாரி சொசைட்டியால் இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது.பின்னர், இந்த கலைப்பொருட்கள் கொல்கத்தாவின் ஜோகாவில் புதிதாக நிறுவப்பட்ட அருங்காட்சியகக் கட்டடத்திற்கு மாற்றப்பட்டன. 1961 ஆம் ஆண்டில் அப்போதைய மேற்கு வங்க முதல்வராக இருந்த டாக்டர் பிதன் சந்திர ரே முன்னிலையில் இந்த அருங்காட்சியக கட்டிடம் மற்றும் காட்சிக்கூடங்கள் திறந்து வைக்கப்பட்டன. மற்றும் 1963 ஆம் ஆண்டில் இந்திய கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் ஹுமாயூன் கபீர் முன்னிலையில் காட்சிக் கூடங்கள் திறக்கப்பட்டன.
இந்த அருங்காட்சியகத்தை தத்தின் மருமகள் அரோதி தத் நிர்வகித்து வந்தார், அவர் அந்த அருங்காட்சியகத்தின் நீண்ட காலத் தலைவர் பொறுப்பில் இருந்தவர் ஆவார். வரலாற்றாசிரியர், பருன் டி, பல ஆண்டுகளாக அருங்காட்சியகத்தின் குழுவில் குடும்பம் சார்பாக அமைக்கப்பட்ட வேட்பாளராக இருந்தார்.[3] இந்த அருங்காட்சியகம் ஒரு தன்னாட்சி அமைப்பாகும், இது 1984 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசின் ஜவுளி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டு வருகிறது.
சிறப்புகள்
இந்த அருங்காட்சியகமானது - பிரிக்கப்படாத வங்காளம் மற்றும் இந்தியாவின் நாட்டுப்புற மற்றும் பழங்குடி கலைகள் மற்றும் கைவினைகளின் தனித்துவமான தேசிய புதையலாக அமைந்துள்ளது. 1929 மற்றும் 1939 க்கு இடையில் ஐ.சி.எஸ் (1882-1941) ஸ்ரீ குருசாடே தத் அவர்களால் தனிப்பட்ட முறையில் சேகரிக்கப்பட்ட 2325 நேர்த்தியான மாதிரிகளுடன் இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. அப்போது அவர் வங்காளத்தின் தொலைதூர பகுதிகளில் மாவட்ட ஆட்சியராக இருந்தார். நாட்டுப்புற கலைகள் மற்றும் கைவினைகளின் 3300 க்கும் மேற்பட்ட நேர்த்தியான கண்காட்சிகளின் தொகுப்புகளைக் கொண்டு அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம், கிராமப்புற வாழ்க்கையின் வீரியத்தையும் உயிர்ப்பையும் பிரதிபலிக்கின்றன. மேலும் அது மற்றும் கலை மற்றும் சமூக மரபுகள், மத நம்பிக்கைகள், நடைமுறைகள் மற்றும் கருப்பொருள்கள் போன்றவற்றையும் எடுத்துரைக்கின்றன. ஒருங்கிணைந்த வங்காளத்தில் காணப்பட்ட அழகியல் ஒருங்கிணைப்பு மற்றும் கலாச்சார தாக்கங்கள் பற்றிய தெளிவான கருத்துகளையும் இங்கு காணமுடியும். குருசாடே தத்தின் கலைத் தொகுப்புகள் விலைமதிப்பற்றவை மற்றும் தனித்துவமானவை என்ற பெருமையினைக் கொண்டவையாகும். உலகின் எந்த அருங்காட்சியகங்களிலும் இத்தகு சிறப்பினைக் காண முடியாது.[4]
சேகரிப்புகள்
இந்த அருங்காட்சியக்தின் சேகரிப்பில் தொல்பொருள் பொருள்கள், தெய்வ உருவங்கள், கையெழுத்துப் பிரதிகள், முகமூடிகள், இசைக்கருவிகள், ஓவியங்கள், ஜவுளி மற்றும் மரவேலைப்பாடு கொண்ட பொருள்கள் ஆகியவை அடங்கும்.[5]
மேலும் காண்க
- பிர்லா தொழில்துறை, தொழில்நுட்ப அருங்காட்சியகம் - கொல்கத்தா
- இந்திய அருங்காட்சியகம் - கொல்கத்தா
- ரபீந்திர பாரதி அருங்காட்சியகம் - கொல்கத்தா
- கோச் பிகார் அரண்மனை அருங்காட்சியகம்
- அசர்துவாரி அரண்மனை அருங்காட்சியகம், முர்சிதாபாத்
- தொல்லியல் அருங்காட்சியகம், தம்லுக்
- தாகூர் மாளிகை, ஜோரசங்கோ
- இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்
- இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்களின் பட்டியல்