கும்பகோணம் மகாமக குளம்

கும்பகோணம் மகாமகக் குளம், இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவில் குளம் ஆகும். இது தமிழ் நாட்டில் உள்ள பெரிய கோவில் குளங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. வருடந்தோறும் நடைபெறும் மாசி மகத் திருவிழாவில் 1 லட்சம் மக்களும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமக திருவிழாவில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேரும் பங்கு பெறுகிறார்கள்[1].

கும்பகோணம் மகாமகக் குளம்
Mahamaham Tank
கும்பகோணம் மகாமகக் குளம்
அமைவிடம்கும்பகோணம், தமிழ் நாடு, இந்தியா
ஆள்கூற்றுகள்10.960°N 79.38°E / 10.960; 79.38
கட்டிட முறைதிராவிடக் கட்டிடக்கலை
 இந்தியா
தமிழ் நாட்டில் அமைவிடம்

வரலாறு

ஒவ்வொரு முறை பிரம்மதேவன் தூங்கும் பொழுது பிரளயம் ஏற்படும் என நம்பப்படுகிறது. ஒரு முறை அவ்வாறு நடந்ததன் தொடர்ச்சியாகப் பிரளயத்திற்கு பின்பு கலியுகத்திற்கு முன்பு உயிர்களை உருவாக்கும் விதைகளையும் அமிர்தமும் கொண்ட பானை ஒன்று இங்கே இந்த குளத்தில் இருப்பதற்காக இங்கு வந்து சேர்ந்தது. சிவபெருமான் ஒரு வேடன் வேடமிட்டு அம்பெய்து இந்த பானையை உடைத்து உயிர்கள் ஜனிப்பதற்கு ஏது செய்தார். "கும்பம்" என்றால் பானை "கோணம்" என்றால் உருக்குலைந்து என்பதால் கும்பகோணம் பெயர் பெற்றது.

ஒருவர் செய்த பாவங்கள் புண்ணியத் தலங்களிலுள்ள தீர்த்தங்களில் நீராடினால் அகலும். அப்புண்ணியத் தலங்களில் வாழ்வோர் செய்த பாவங்கள் காசியிலுள்ள கங்கையில் நீராடினால் அகலும். காசியிலுள்ளோர் செய்த பாவங்கள் கும்பகோணம் தீர்த்தத்தில் நீராடினால் விலகும். கும்பகோணத்தில் இருப்பவர்கள் செய்த பாவங்கள் கும்பகோணத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடினால்தான் அகலும் என வடமொழி நூல் வலியுறுத்திக்கூறுகிறது. கும்பகோணத்திலுள்ள தீர்த்தம் மகாமக தீர்த்தம். அமுதத்தின் ஒரு பகுதி இங்கு தீர்த்தமானதால் அமுத தீர்த்தம் எனவும், பிரமன் இத் தீர்த்தத்தினால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து ஆராதித்ததால் பிரம தீர்த்தம் எனவும் பெயர் பெற்றது. மகாமகப் பெருவிழா வடபுலத்தில் நிகழும் கும்பமேளாவைப் போன்று பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. [2]


குளத்தை பற்றி

மகாமகக் குளத்தின் இரவுநேரத் தோற்றம்

இது 6.2 ஏக்கர் பரப்பளவில் கும்பகோணம் நகரின் மத்தியில் சரிவகம் வடிவில் அமைந்துள்ள குளம் ஆகும். இந்த குளத்தை சுற்றி 16 மண்டபங்களும் 21 கிணறுகளும் உள்ளன. இந்த கிணற்றின் பெயர்கள் ஒன்று சிவனுடைய பெயரையோ அல்லது இந்திய நதிகளின் பெயரையோ கொண்டுள்ளன.

கி.பி.16ஆம் நூற்றாண்டில் விசயநகர மன்னர் கிருட்டிணதேவராயர் இத்தலத்திற்கு வந்து நீராடியதாக நாகலாபுரம் கல்வெட்டு குறிக்கிறது. தஞ்சாவூரை சார்ந்த ரகுநாத நாயக்கரின் படைத்தலைவர் கோவிந்த தீட்சிதர் இந்த குளத்தைச் சுற்றி 16 மண்டபங்களையும் அதனைச் சார்ந்து படிகளையும் அமைத்துள்ளார்.[3]

குளத்தைச் சுற்றியுள்ள மண்டபங்களும் கிணறுகளும்

16 வகையான தானங்களை வலியுறுத்தும் வகையில் 16 கோயில்கள் (மண்டபங்கள்) காணப்படுகின்றன. ஒவ்வொரு கோயிலிலும் பிரம்மதீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தானேஸ்வரர், விருஷபேஸ்வரர், பரணேஸ்வரர், கோணேஸ்வரர், பக்திகேஸ்வரர், பைரேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியாசகேஸ்வரர், உமாபகேஸ்வரர், நிருதீஸ்வரர், பிரம்ளேஸ்வரர், கங்காதேஸ்வரர், முக்ததீர்த்தேஸ்வரர், சேஷஸ்தரபாலேஸ்வரர் என மொத்தம் 16 வகையான சிவலிங்கங்கள் குளத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்படங்களில் காணப்படுகின்றன. [4]இந்த குளத்தின் நடுவே அமைந்துள்ள தீர்த்தக் கிணறுகள் புனிதத்தன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.

தீர்த்தத்தின் பெயர் அதனை சார்ந்த தெய்வங்கள்
வாயு தீர்த்தம் வாயு (காற்று)
கங்கா தீர்த்தம் கங்கை (ஆறு)
பிரும்ம தீர்த்தம் பிரம்மா
யமுனா தீர்த்தம் யமுனா (ஆறு)
குபேர தீர்த்தம் குபேரன் (வான் சார்ந்த கடவுள்)
கோதாவரி தீர்த்தம் கோதாவரி (ஆறு)
ஈசான தீர்த்தம் சிவன்
நர்மதை தீர்த்தம் நர்மதை (ஆறு)
சரஸ்வதி தீர்த்தம் சரஸ்வதி (கடவுள்)
இந்திர தீர்த்தம் இந்திரன் (வான் சார்ந்த கடவுள்)
அக்னி தீர்த்தம் அக்னி (நெருப்பு)
காவிரி தீர்த்தம் காவிரி (ஆறு)
யம தீர்த்தம் யமன் (வான் சார்ந்த கடவுள்)
குமரி தீர்த்தம் பார்வதி (பெண்கடவுள்)
நிருதி தீர்த்தம் பார்வதி (பெண்கடவுள்)
பயோஷினி தீர்த்தம் பார்வதி (பெண்கடவுள்)
தேவ தீர்த்தம் சிவன் (கடவுள்)
வருண தீர்த்தம் வருணன் (வான் சார்ந்த கடவுள்)
சரயு தீர்த்தம் சரயு (ஆறு)
கன்யா தீர்த்தம் பார்வதி (பெண்கடவுள்)

இலக்கிய மேற்கோள்கள்

கி.பி. ஆறு- ஏழாம் நுற்றாண்டில் வாழ்ந்த அப்பர் பெருமான் கும்பகோணத்தைப் பற்றி பாடும் போது கீழ்க்காணுமாறுப் பாடியுள்ளார்.

தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை

சரஸ்வதிபொற் றாமரைபுட் கரணி தெண்ணீர்க்
கோவியோடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக்கீழ் கோட்டத்தெங் கூத்தனாரே"

அவ்வாறே சேக்கிழார் பெருமானும்

"பூமருவும் கங்கை முதல் புனிதமாம் பெருந்தீர்த்தம்
மாமகந்தான் ஆடுவதற்கு வந்து வழி படுங்கோவில்"

என்று பாடியுள்ளார்.

மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் மகாமகத்தைப் பற்றியும், கும்பகோணத்தைப் பற்றியும் பின்வருமாறு பாடியுள்ளார்.[2]

"பன்னிரு வருடந்தொரு முறைபகரும் பண்பமர்
மடங்களில் துலங்கும்
மன்னிய நல்லாண் டளப்பவன் முறையா
வந்திடும்போது வானவரோ
டன்னிய மில்லா வயனுமே போந்திங்
கழகுறச் செய்விழாக் காண
முன்னிய பேறு பெறவருள் குடந்தை முதல்வி"

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

  1. "Hi-tech rein on pilgrims". The Telegraph (March 6, 2004). பார்த்த நாள் December 5, 2011.
  2. எஸ்.காளிதாஸ், மகாமகப்பொய்கை, கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேசுவரர் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம், தெய்வத்திருமலர், 1985
  3. http://www.supremeclassifieds.com/places/?sgs=100&sT=2
  4. மகாமகம் : குடந்தைக் கோயில்களில் திருப்பணி தொடக்கம், தினமணி, 12.2.2015

இவற்றையும் காண்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.