குன்றூர் கிழார் மகனார்

குன்றூர் கிழார் மகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். நற்றிணை 332, புறநானூறு 338 ஆகிய இரண்டு பாடல்கள் இவரால் பாடப்பட்டனவாகச் சங்கநூல் தொகுப்பில் உள்ளன. இவரது பெயர் தெரியாத நிலையில் தந்தைப் பெயரைச் சொல்லி இன்னார் மகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

புறம் 338 செய்தி

  • துறை - மகட்பாற்காஞ்சி (அழகிய மகள் ஒருத்தியை மணக்க விரும்பியவரோடு காஞ்சிப்போர்)

மன்னன் ஒருவனின் ஓரெயில் கோட்டை கடலுக்கு நடுவில் காய்ந்து தோன்றும் மரக்கலம்(கப்பல்) போலத் தோன்றிற்று. அவன் மோந்தை போல் அழகுள்ள தன் மகளை மூவேந்தர் வந்து கேட்டாலும் பணிந்தால் அல்லது தரமாட்டானாம்.

மூவேந்தர் யாருக்கும் தலைவணங்குவதில்லை. இவனோ வணங்கினால்தான் தன் பெண்ணைத் தருவான். (இவள் நிலை என்ன ஆகுமோ) - என்கிறது பாடல்.

போந்தை

போந்தை ஏர் பரந்த புன்செய் வயல்களையும், நீர் பரந்த நன்செய் வயல்களையும், நெல் மலிந்த வீடுகளையும், பொன் மலிந்த தெருக்களையும், பூத்துக் குலுங்கும் பன்மலர்க் காடுகளையும் கொண்டு அழகுடன் திகழ்ந்தது.

போந்தை அரசன் நெடுவேள் ஆதன்

இக்காலத்துப் போத்தனூர் சங்ககாலத்தில் போந்தை என்னும் மரூஉப்பெயராலும் வழங்கப்பட்டது. நெல் விளையும் கழனியாக விளங்கிய இந்த ஊரைச் சங்ககாலத்தில் வேளிர்குடியைச் சேர்ந்த ஆதன் என்பவன் ஆண்டுவந்தான்.

மூவேந்தரின் குடிப் பூ

வேந்தர் தம் சென்னியில் வேம்பு, ஆர், போந்தை என்னும் மூன்று பூக்களைத் தம் குடியின் அடையாளப் பூக்களாக அணிவர். (பாண்டியனுக்கு வேம்பு. சோழனுக்கு ஆர் என்னும் ஆத்தி. சேரனுக்குப் போந்தை என்னும் பனை)

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.