குடை நிலை

தமிழ் இலக்கணத்தில் குடை நிலை என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். போருக்குப் புறப்பட எண்ணும் மன்னன், ஒரு நல்ல நேரம் பார்த்துத் தனது வெண்கொற்றக்குடையையோ தனது வாளையோ யானையின் மீது ஏற்றி வடதிசை நோக்கி அனுப்புவான். இது புறவீடு செய்தல் எனப்படுகிறது. இவ்வாறு குடையைப் புறவீடு செய்வதைக் கருப்பொருளாகக் கொண்ட இத்துறை "குடை நிலை" எனப்படும். இதை ஒரு துறையாகத் தொல்காப்பியம் கூறவில்லை. எனினும் புறப்பொருள் வெண்பாமாலையில் இதுவும் கூடுதலாகச் சேர்க்கப்பட்டு உள்ளது.

இதனை விளக்க, சூடிய மாலையில் வண்டினம் மொய்த்து ஒலியெழுப்பவும், புலவர்கள் புகழ் பாடவும், மாலை அணிந்த மன்னவன் தன் குடையைப் புறவீடு அனுப்புதல்[1] என்னும் பொருள்படும் பின்வரும் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது.

பெய்தாமம் சுரும்பிமிரப் பெரும்புலவர் புகழ்பாடக்
கொய்தார் மன்னவன் குடைநாள் கொண்டன்று

எடுத்துக்காட்டு

முன்னர் முரசுஇரங்க மூரிக் கடல்தானைத்
துன்னரும் துப்பில் தொழுதுஎழா - மன்னர்
உடைநாள் உலந்தனவால் ஓதநீர் வேலிக்
குடைநாள் இறைவன் கொள
- புறப்பொருள் வெண்பாமாலை 37.

குறிப்பு

  1. இராமசுப்பிரமணியன், வ. த., 2009. பக். 64, 65

உசாத்துணைகள்

  • இராமசுப்பிரமணியன், வ. த., புறப்பொருள் வெண்பாமாலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2009.
  • கௌரீஸ்வரி, எஸ். (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2005.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.