கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
இந்தியாவின் கிழக்கு கடற்கரையை ஒட்டி ஒரே தொடர்ச்சியாக இல்லாமல் பகுதி பகுதியாக அமைந்துள்ள மலைத்தொடர் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர் (Eastern Ghats)என்றழைக்கப்படுகிறது. இம்மலைத்தொடர் வடக்கில் மேற்கு வங்காளத்தில் தொடங்கி ஒடிசா மற்றும் ஆந்திரா வழியாக தமிழ்நாடு மற்றும் சிறுபகுதி கர்நாடகம் வரை பரவியுள்ளது. இம்மலைத்தொடரின் தொடர்ச்சி துண்டிக்கப்பட்டதற்கான காரணம், தீபகற்ப இந்தியாவின் நான்கு முக்கிய ஆறுகளான கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா, காவேரி ஆகிய ஆறுகள் இம்மலைத் தொடரின் ஊடாகப் பாய்ந்து ஏற்படுத்திய மண் அரிப்பு முக்கிய காரணமாகும். இம் மலைத்தொடர் வங்காளவிரி குடாவிற்கு இணையாக நீண்டிருக்கிறது. கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையில் கிழக்குத் தொடர்ச்சி மலைக்கு மேற்கில் தக்காண பீடபூமி அமைந்துள்ளது. கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் வங்காள விரிகுடாவுக்கும் இடையில் கடற்கரைச் சமவெளி காணப்படுகிறது. இத்தொடர் மேற்கு தொடர்ச்சி மலையைப் போன்று அவ்வளவு உயரமானதாக காணப்படவில்லை. [1]
