கிருனா

கிருனா (Kiruna, வட சமி மொழி: Giron, பின்னிய மொழி: Kiiruna) சுவீடனின் வடகோடியில் இலாப்லாந்து மாநிலத்தில் அமைந்துள்ள நகரம் ஆகும். இங்கு 2010 கணக்கெடுப்பின்படி 18,148 மக்கள் வாழ்கின்றனர்[1] இங்கு கிருனா நகராட்சியின் (2008இல் ம.தொகை. 23,099 )[2]) தலைமையகம் உள்ளது.

கிருனா - கிரோன்
மேலிருந்து வலச்சுற்றாக: கிருனா நகர இரவுக்காட்சி, கிருனா தேவாலயம், யுக்கசுயார்வியிலுள்ள ஐசோட்டல் (பனி தங்கும் விடுதி), எசுரேஞ்சில் ஏவூர்தி ஏற்றம், கிருனா தேவாலய மணிக்கோபுரம்.
நாடுசுவீடன்
மாநிலம்இலாப்லாந்து
மாவட்டம்நோர்போட்டன் கவுன்ட்டி
நகராட்சிகிருனா நகராட்சி
நகரத் தகுதிநிலை1948
பரப்பளவு[1]
  மொத்தம்16.53
மக்கள்தொகை (31 திசம்பர் 2010)[1]
  மொத்தம்18
  அடர்த்தி1,098
நேர வலயம்CET (ஒசநே+1)
  கோடை (பசேநே)CEST (ஒசநே+2)
இணையதளம்kiruna.se

இந்நகரின் பகுதிகளுக்கு உள்ளக சமி மக்களுடன் இணைந்த நீண்ட வரலாறு உள்ளது. குறைந்தது 6000 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு குடியிருந்ததற்கான சான்றுகள் உள்ளன. கிருனா நகரம் 1900இல் உருவானது. இங்கு இரும்புத் தாது அகழ்ந்தெடுத்தலும் கனிமச் சுரங்கங்களும் முதன்மையானத் தொழில்களாகும். இரண்டாம் உலகப் போரின் போது இங்கிருந்து பெருமளவு இரும்பு தொடருந்து வழியாக கிழக்குக் கடலோரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து செருமனிக்கு விற்பனையாயிற்று.

1964இல் கிருனாவில் எசுரேஞ்சு விண்வெளி மையம் நிறுவப்பட்டது. தவிரவும் விண்வெளி இயற்பியலுக்கானக் கழகமும் இங்கு அமைந்துள்ளது.[3] லூலியா தொழினுட்ப பல்கலைக்கழகத்தின் விண்வெளி அறிவியல் துறை இங்கு இயங்குகிறது.[4]

சுற்றுலாப் பயணிகளுக்கு இது மிகவும் புகழ்பெற்ற இடமாக விளங்குகிறது. இங்குள்ள பனி தங்குவிடுதி (ஐசு ஓட்டல்) மிகவும் புகழ்பெற்றது. வடதுருவத்திற்கு அண்மையில் உள்ளதால் நள்ளிரவுச் சூரியனையும் வடக்கு ஒளிகளையும் காண இது சிறந்த இடமாக உள்ளது.

நகரை நகர்த்த முடிவு

கிருனா நகரத்தில் மிகப் பெரிய தாது சுரங்கம் நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதனால் ஒட்டுமொத்த நகரமும் புதையுண்டு போகும் அபாயத்தில் நகரம் உள்ளதாக நிலவியல் வல்லுநர்கள் 2004ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர். இதையடுத்து, இந்த நகரில் உள்ள பழமையான வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், முழு நகரையும் மூன்று கிலோமீட்டர் தள்ளியுள்ள இடத்துக்கு இடம் மாற்ற அரசு முடிவெடுத்தது. 2014ஆம் ஆண்டு நகரை நகர்த்துவது தொடர்பான ஆய்வுகள் தொடங்கியது. அதன்பிறகு தற்போது வீடுகளை இடம்மாற்றும் பணிகள் துவங்கியுள்ளது. அடுத்த 16 ஆண்டுகளுக்குள் நகரை முழுமையாக மாற்றிவிட திட்டமிடப்பட்டுள்ளது.[5]

காட்சிக்கூடம்


மேற்சான்றுகள்

  1. "Tätorternas landareal, folkmängd och invånare per km2 2005 och 2010" (Swedish). Statistics Sweden (14 December 2011). மூல முகவரியிலிருந்து 10 January 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 10 January 2012.
  2. "Folkmängd i riket, län och kommuner 31 December 2008 och befolkningsförändringar 2008" (xls) (Swedish). Statistics Sweden (2009-02-14). பார்த்த நாள் 2009-03-08.
  3. "IRF Kiruna". பார்த்த நாள் 2009-02-03.
  4. "Welcome to the Department of Space Science". பார்த்த நாள் 2009-02-03.
  5. உமா மகேசுவரன் (2018 மே 19). "ஊரை நகர்த்த முடியுமா?". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 6 சூன் 2018.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.