காஸ்ட் அவே

காஸ்ட் அவே (Cast Away) என்பது 2000 ஆம் ஆண்டில் டொம் ஹாங்ஸூம், ஹெலன் ஹன்ட்- உம் நடித்து வெளி வந்த ஆங்கிலத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை இயக்கிவர் ராபர்ட் ஜெமேகிஸ். இத்திரைப்படத்தில் டொம் ஹாங்க்ஸ் பெட்எக்ஸ் என்னும் தனியார் அஞ்சல் துறையின் பணியாளராக நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்ததற்காக டொம் ஹாங்க்ஸ்-இன் பெயர் 73 ஆம் ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது.

Cast Away
இயக்கம்ராபர்ட் ஜெமேகிஸ்
தயாரிப்புஜாக் ரப்கி ஸ்டீவ்
ராபர்ட் ஜெமேகிஸ்
ஸ்டீவ் ஸ்டார்கி
டொம் ஹாங்க்ஸ்
கதைவில்லியம் பிரோயல் ஜூனியர்
இசைஆலன் சில்வஸ்ட்ரீ
நடிப்புடொம் ஹாங்க்ஸ்
ஹெலன் ஹன்ட்
ஒளிப்பதிவுடான் பர்ஜெஸ்
படத்தொகுப்புஆர்தர் சுமித்
கலையகம்இமேஜ் மூவர்ஸ்
ப்ளேடோன்
விநியோகம்அமெரிக்கா
20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்
சர்வதேசம்
DreamWorks
வெளியீடு7-திசம்பர்-2000
ஓட்டம்143 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$90,000,000
மொத்த வருவாய்$429,632,142

கதை சுருக்கம்

இந்த திரைப்படம் 1995 ஆம் ஆண்டு பின்னணியில் நடப்பதாக ஆரம்பிக்கிறது. சக் நோலன்டு (டொம் ஹாங்க்ஸ்) என்ற பெட்-எக்ஸ் பணியாளர், இவரின் பணி உலகம் முழுவதும் உள்ள பெட்-எக்ஸ் நிறுவன அலுவலகங்களுக்கு பயணித்து அங்குள்ள பணி நிமித்தமான இடையூறுகளை களைவது ஆகும். இவரது துணைவியாக கெல்லி பிரீர்ஸ் என்ற கதாபாத்திரத்தில் ஹெலன் ஹன்டு வருகிறார். இவரது இடையறாத பணிகளுக்கிடையே வரபோகும் புத்தாண்டு தினத்தில் கெல்லி பிரீர்ஸ்'உடன் தனது காதலை வெளிப்படுத்தும் எண்ணத்தில் இருக்கிறார். பயங்கர புயலுக்கிடையே இவரது பயணம் தொடங்குகிறது. பசிபிக் பெருங்கடலின் மீது பயணித்து கொண்டிருக்கையில் புயலின் வீரியம் அதிகமாகி இவர் பயணிக்கும் விமானம் விபத்திற்குள்ளாகிறது. இந்த விபத்தில் சக் நோலண்டு பயணிக்கும் விமானம் பசிபிக் பெருங்கடலில் வீழ்கிறது. இந்த விபத்தில் விமானத்திலும் தன்னுடன் இருந்த அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாத நிலையில் சக் நோலண்டு உயிர்காக்கும் படகின் உதவியோடு ஒரு தீவில் கரை ஒதுங்குகிறார். பின்பு கண்விழித்து பார்கின்ற பொழுது தான் ஒரு ஆள் அரவமற்ற தீவில் இருப்பதை உணர்கிறார்.

பின்னர் தான் ஒதுங்கிய கடற்கரையெங்கும் இரைந்து கிடக்கும் பெட்-எக்ஸ் நிறுவன விமானத்தில் தன்னுடன் வந்த அஞ்சல்களை சேகரித்து வைக்கிறார். ஆரம்பத்தில் நெருப்பு உண்டாக்கி கடல் வழியே செல்லும் கப்பல்களுக்கு சமிஞைகளை அனுப்பி உதவியை பெற முயல்கிறார். இந்த முயற்சியில் நெருப்பை உண்டாக்கும்போது முன்னனுபவம் இல்லாத காரணத்தினால் அவருக்கு காயங்கள் ஏற்படுகின்றன. அதனால் ஏற்படும் கோபத்தில் கையில் கிடைத்த பொருள்களையெல்லாம் எறிகிறார். அப்படி எரியும் பொழுது கதையில் பின்பகுதியில் அவர் தனது நண்பராக பாவிக்கும் கைப்பந்து விளையாட்டில் பயன்படுத்தும் பந்தும் அடங்கும். அந்த கைப்பந்தை எறிந்த பொழுது அவரது கையில் இருந்து வழியும் உதிரத்தின் சுவடு அந்த பந்தின் மீது படிகின்றது. அது பார்பதற்கு ஒரு முகம் போன்று தொற்றமளிக்கவே அதற்கு வில்சன் என்று பெயரிட்டு தனது கற்பனை நண்பனாக பாவித்து தன்னுடனே வைத்துகொள்கிறார். அவரது அனைத்து நிலையிலும் அவருடன் பிரியாத நண்பனாக அந்த வில்சனை நினைக்கிறார். இப்படியே அந்த தனி தீவில் நான்கு வருடங்கள் கழிகிறது. இந்த காலகட்டத்தில் அந்த தீவில் விளையும் தேங்காய்களை தனது முதன்மை உணவாக உட்கொள்கிறார். மேலும் இந்த நான்கு வருடங்களில் சக் நோலண்டு உடல் இளைத்து, மீன் பிடிப்பதிலும் வேட்டையாடுவதிலும் கைதேர்ந்தவராகிறார்.

பின்பு ஒரு நாள் பருவகாற்றின் திசை மாறும் பொழுது சக் நோலண்டு வசிக்கும் தீவின் கரையோரத்தில் ஒதுங்கிய பொருள்களை கொண்டு தன் கையாலேயே செய்த கட்டுமரத்தில் கடலில் பயணித்து தப்பி செல்ல நினைத்து அதற்கான முயற்சியிலும் இறங்குகிறார். சக் நோலண்டு பயணிக்க ஆரம்பித்து சிறிது நேரத்தில் எல்லாம் சரியாக இருக்க தனது கற்பனை நண்பன் வில்சனுடன் பயணம் செல்கிறது. சிறிது நேரத்தில் மறுபடியும் புயல் ஒன்று தாக்கி அவர் தனது கட்டு மரத்தை தனக்கு விரும்பும் திசையில் செலுத்துவதற்காக அமைத்திருந்த ஒரு பாய்மரம் போன்ற பிளாஸ்டிக் அமைப்பு புயலில் பிய்த்து எறியப்படுகிறது. இதற்கு பின் கடலின் தயவில் சக் நோலண்டு பயணிக்கிறான். பின்னர் ஒரு தருணத்தில் தனது நண்பன் வில்சனையும் கடலில் இழக்கிறார். இவ்வளவு சோதனைகளுக்கும் இடையில் ஒரு வழியாக பயணத்தின் பொழுது ஒரு சரக்கு கப்பலில் வருபவர்களால் காப்பாற்றப்பட்டு உயிருடன் நாடு திரும்புகிறார். அவர் தனது சொந்த ஊருக்கு செல்லும்போது. அங்கு அவரது உறவினர்களும், நண்பர்களும் சக் நோலண்டு நான்கு வருடங்களுக்கு முன்னரே இறந்து விட்டதாக கருதி இவருக்கு இறுதி சடங்கினையும் முடித்து விடுகின்றனர். மேலும் கெல்லி பிரீர்ஸ்-க்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகி ஒரு பெண்குழந்தையும் இருக்கிறது. இத்தனையும் பார்த்து கலங்கி நிற்கும் சக் நோலண்டு பின்னர் நிலைமையை புரிந்துகொண்டு கெல்லி பிரீர்ஸ்-இடமிருந்து கண்ணீருடன் விடை பெறுகிறார். பின்னர் இந்த நான்காண்டுகளில் தன்னுடனே வைத்திருந்த ஒரு அஞ்சலை அதற்குரிய நபரிடம் சேர்ப்பதாக படம் முடிகின்றது.

நடிகர்கள்

  • சக் நோலண்டாக = டோம் ஹாங்க்ஸ்
  • கெல்லி ப்ரீர்ஸாக = ஹெலன் ஹன்டு
  • ஸ்டானாக = நிக் சீயர்சி
  • பெக்கா ட்விக்காக = ஜெனிபர் லீவிஸ்
  • ஜெர்ரி லாவேட்டாக = க்றிஸ் நோத்
  • பேட்டின பீட்டர்சனாக = லாரி வைட்
  • மெய்னர்ட் கிரஹாமாக - ஜெப்ரி பிளேக்

விருதுகள்

58 ஆவது கோல்டன் குளோப் விருதுகள்
சிறந்த நடிகருக்கான விருது - டோம் ஹாங்க்ஸ்.

பரிந்துரைப்புகள்

73 ஆவது அகாதமி விருதுகள்
சிறந்த முன்னணி நடிகர் - டோம் ஹாங்க்ஸ்.
சிறந்த இசைக்கலப்பு (ராண்டி தோம், டோம் ஜான்சன், டென்னிஸ் சான்ட்ஸ் மற்றும் வில்லியம்.B.கப்லான்)

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.