காளமேகம்

காளமேகம் 15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். வைணவ சமயத்தில் பிறந்த இவர், திருவானைக்கா கோவிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறினார். இவர் சைவப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்று கூறப்படுகின்றது. ஆனாலும் இவர் பல சிறந்த நயம் மிகுந்த பாடல்களையும் பாடியுள்ளார். இவர் பாடிய சிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும் பல உள்ளன. சமயம் சார்ந்த நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். இவர் ஒரு ஆசு கவி ஆவார்.

திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல் முதலியவை இவர் இயற்றிய நூல்களாகும்.

பெயர்க் காரணம்

திருவரங்கத்து கோவிலில் பரிசாரகர் (சமையல் செய்பவர்) இருந்தார். திருவானைக்காவில் சிவத் தொண்டு செய்து வந்த மோகனாங்கி என்ற பெண் மீது மாளாக்காதல் கொண்டு இருந்தார். அவள் பொருட்டு ஒரு நாள் அங்குச்சென்று கோவிலின் உட்புற பிராகாரத்தில் அவள் வரவுக்காகக் காத்திருக்கையில் தூக்கம் வர படுத்து உறங்கிப்போனார். அப்பெண்ணும் இவரைத் தேடிக் காணாமல் திரும்பிச்சென்றுவிட்டாள். கோவிலும் திருக்காப்பிடப்பட்டது. அக்கோவிலின் மற்றொரு பக்கத்தில் ஓர் அந்தணன் சரசுவதி தேவியை நோக்கி தவங்கிடந்தான். சரசுவதிதேவி அதற்கிணங்கி அவன் முன்தோன்றித் தமது வாயில் இருந்த தாம்பூலத்தை அவ்வந்தணன் வாயிலுமிழப் போக அதை அவன் வாங்க மறுத்ததால் சினந்து அத்தாம்பூலத்தை வரதன் (காளமேகத்தின் இயற்பெயர்) வாயில் உமிழ்ந்துச் சென்றாள். வரதனும் தன் அன்புக் காதலி தான் அதைத் தந்ததாகக் கருதி அதனை ஏற்றுக்கொண்டான். அது முதல் தேவி அனுக்கிரகத்தால் கல்லாமலே கவி மழை பொழியத்தொடங்கினான். அதனாலேயே வரதன் என்ற பெயர் மாறி காளமேகம் என மாறிற்று.

சிலேடைப் பாடல்

நஞ்சிருக்கும் தோலுரிக்கும்

நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதன் முடிமேலிருக்கும்
வெஞ்சினத்துப் பற்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்
தேம்பாயுஞ் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பாகும் வாழைப்பழம்

என்கிற காளமேகப் புலவரின் பாடல் பாம்பிற்கும் வாழைப்பழத்திற்கும் சிலேடையாக அமைக்கப்பட்டிருக்கிறது.

வெங்காயம் சுக்கானால்

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத,
சீரகத்தை தந்தீரேல் வேண்டேன் [1] பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே

இது சொக்கநாதப் புலவர் பாடலாகவும் காணப்படுகிறது.

ஆடிக்குடத்தடையும்

ஆடிக்குடத்தடையும், ஆடும்போதே இரையும்
மூடித்திறக்கின் முகங்காட்டும் - ஓடி மண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற் பிண்ணாக்கு முண்டாம்
உற்றிடும் பாம்பெள்ளெனவே ஓது

என்கிற மேற்காணும் காளமேகப் புலவர் பாடல் பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடையாக அமைந்துள்ளது.

மேலும் ஒரு பாடல்

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி..
துத்தித் துதைதி துதைத்தத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது

இன்னும் ஒரு பாடல் கழியும் பிழை பொருள் தள்ளி நன்னூலாங் கடலின் உண்டு வழியும் பொதிகை வரையினிஙல் கால்கொண்டு மொழியும் புலவர் மனத்தே இடித்து முழங்கிமின்னி பொழியும் படிக்குக் கவி காளமேகம் புறப்பட்டதே

மேலும் பார்க்க

  1. வேண்டேன் என்னும் சொல்லுக்கு வேறு பாடமாகத் ‘தேடல்’ என்னும் சொல்-பதிவும் உண்டு
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.