காற்றாலை

காற்றாலை (windmill) என்பது, காற்றால் உந்தப்படும், ஆற்றல் உற்பத்தி செய்யும் பொறி ஆகும். காற்று வீச்சினால் ஏற்படக்கூடிய ஆற்றலைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் பொறி அமைக்கப்பட்டு, காற்று விசைச் சுற்றுக் கலன்களில் இருந்து பெறப்படும் இயந்திர ஆற்றல், மின் ஆற்றலாக மாற்றப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. இதில் இருக்கும் நீளமான தகடுகள்/இறக்கைகள் (Blades) காற்றின் வேகத்தால் சுற்றுவதால், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் மின்னாக்கி (Generator) இயங்குவதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. புதுப்பிக்கக்கூடிய ஆற்றலான காற்றாலை மின்சாரம், சுற்றுச்சூழலை சீரழிக்காத பசுமை ஆற்றலாகக் கருதப்படுகிறது. இந்த வகையில் செய்யப்படும் ஆற்றல் உற்பத்தி சுற்றுச்சூழலைப் பாதிக்காத தூய ஆற்றல் ஆகும். உதாரணமாக, அனல்மின் நிலையங்களின் மூலம் வெளியேற்றப்படும் காற்று மாசுபாடு போன்ற பாதிப்புகள் எதுவும் காற்றாலைகளால் ஏற்படுவதில்லை. பொதுவாக, இது கம்பங்கள் முதலிய பெரிய, உயர்ந்த கட்டிடங்களில் இருக்கும். பழங்காலத்தில், காற்றாலைகளின் ஆற்றல் தானியங்களை அரைக்கவும், நீர் இறைக்கவும், மர அறுவைக்கும் பயன்பட்டது. தற்காலத்தில், இவை மின் உற்பத்திக்கே அதிகம் பயன்படுவதால் காற்றுச் சுழலிகள் (wind turbines) என்றும் அழைக்கப்டுகின்றன.

காற்றாடியின் முழு அளவிலான தோற்றம்

காற்றாலை மின் உற்பத்தியில் சீனா முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. இந்தியாவின் காற்று வழி மின் உற்பத்தியில் தமிழ்நாடு 55% பங்கு வகிக்கித்து முதல் இடத்தில் உள்ளது. இது தமிழ்நாட்டின் மின் தேவைகளில் 20% அளவை (2000 மெகா வாட்) நிறைவு செய்கிறது. மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திலும், குஜராத் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

சூழல் பாதிப்புகள்

பரவலாக காற்றாலை மின்சாரம் பசுமை மின்சாரம் என்று வர்ணிக்கப்பட்டாலும், காற்றாலை மின்சாரம் சுற்றுச்சூழலை குறிப்பிடத்தக்க அளவு பாதிக்கிறது. காற்றாலைகளால் ஒலி மாசுபாடு, உயிரினங்களின் வாழ்விடச் சிதைவு, பறவைகளின் வலசைப் பாதையில் இடர் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒரு காற்றாலைச் சுழலியின் மூலம் ஒரு ஆண்டில் ஒன்றிலிருந்து 64 பறவைகள்வரை இறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணமாக ஸ்பெயின் நாட்டில் எல் பெர்டோன் (El perdon) என்ற இடத்தில் அமைந்துள்ள காற்றாலையில் ஆண்டுக்கு 64 பறவைகள் ஒரு காற்றாலையால் இறக்கின்றன. அதேநேரம் தங்கள் ஆய்வுக் காலத்தில் பறவைகளின் மரணங்களே நிகழாத காற்றாலைகளும் உள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[1]

மேற்கோள்கள்

  1. ரமேஷ் குமார் (2017 சூன் 17). "காற்றாலைகள் கொல்லும் பறவைகள்". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 18 சூன் 2017.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.