கலியுகப் பெருங்காவியம்

கலியுகப் பெருங்காவியம் அல்லது கலியுகப் பெருங்காப்பியம் என்பது வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றியும் அவருக்கும் ஆங்கிலேயருக்கும் நடந்த போர்பற்றியும் காவிய முறையில் விரிவாக பாடப்பட்ட ஒரு நூலாகும். இது நாலாயிரம் செய்யுள்களுக்குமேல் கொண்டது. புராண முறையில் ஆற்றுப்படலம், நாட்டுப்படலம், நகரப்படலம் ஆகியவற்றுடன் இயற்றப்பட்டது. இந்நூல் கட்டபொம்மன் காலத்திலேயே பஞ்சாட்சரக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் நமச்சிவாயக் கவிராயர் என்றும் குறிக்கப்படுவார்.

நூல் அமைப்பு

இந்நூலின் அமைப்பு புராணம் போல் துவங்குகிறது. உலகத்தின் படைப்புத் தொழில் செய்யும் பிரம்மன் ஆணவமடைந்த பொழுதில் அவனுக்கு புத்திபுகட்ட அவனிடம் முருகன் பிரணவத்திற்கு பொருள் கேட்க, பொருள் கூற இயலாமல் பிரம்மன் தவிக்க, அவரை தலையில் கொட்டி சிறையிலிட்டான். பின் முருகனே படைப்புத் தொழிலை மேற்கொண்டான். இவ்வாறு சிலகாலம் சென்ற நிலையில் முருகனின் ஆட்சி எவ்விதம் உள்ளது என்று தேவர்களும் ரிசிகளும் அண்டத்தின் நாற்புறமும் சென்று பார்த்தனர். பூலோகத்திற்கு வந்தபோது அங்கு ஏற்பட்ட பீரங்கி ஒலியைக் கேட்டு நடுநடுங்கி குமரனின் கால்களில் சரணடைந்து காப்பாற்ற வேண்டினர். இவ்வாறு இவர்கள் பயந்து நிற்கையில் நாரதர் வந்து முருகனிடம் பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டியக் கட்டபொம்மனின் பெருமை மிக்க வரலாற்றைக் கூறும் முறையில் துவங்குகிறது. இந்நூல் எளிய நடையில் சாமான்யரும் புரிந்து கொள்ளக் கூடிய முறையில் எழுதப்பட்டுள்ளது. [1] இந்நூல் பதிப்பிக்கப்பட்டதாகத் தெரியவில்லை இந்நூல் பற்றியும் இந்நூலின் சில பாடல்கள் கட்டபொம்மன் வரலாற்றைக்கூறும் சில நூல்களில் எடுத்தாளப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

  1. "கலியுகப் பெருங்காப்பியம்". tamilvu. பார்த்த நாள் 24 மார்ச் 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.