கற்கோளம்

கற்கோளம் (lithosphere)[1] புவிக் கோளின் திட ஓடு ஆகும். இது புவியோடும், நெடுங்கால அளவையில் மீட்சிப்பண்புடன் காணப்படும் மூடகத்தின் மேற்பாகமும் அடங்கியதாகும்.

புவியின் குறுக்குவெட்டுத் தோற்றம்
கற்கோளத்தின் தட்டுப் புவிப்பொறைகள்.

கற்கோளத்தின் அடியில் மென்மையான, சூடான, மேல் மூடகத்தின் ஆழப்பகுதியான மென்பாறைக் கோளம் அமைந்துள்ளது. மென்பாறைப் பகுதி ஓடவல்லது.

வெப்பச் சலனமுள்ள மூடகத்திற்கு மேலே கடத்தக்கூடிய மூடியாக கற்கோளம் அமைந்துள்ளது.

கற்கோள வகைகள்

கற்கோளம் இருவகைப்படும்:

  1. பெருங்கடல்சார் கற்கோளம் - இது பெருங்கடல் அடித்தளத்தில் உள்ள புவியோடாகும். பெருங்கடல் கற்கோளம் பொதுவாக 50–100 கிமீ தடித்துள்ளது.
  2. பெருநிலப்பகுதி கற்கோளம் - இது கண்டப் பரப்பில் உள்ள புவியோடு. இதன் அடர்த்தி 40 கிமீ முதல் 200 கிமீ வரை உள்ளது.

கற்கோளம் தட்டுப் புவிப்பொறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது; இவை ஒன்றுக்கொன்று நகரும் தன்மையுடையவை.

பெருங்கடல்சார் கற்கோளம் காலப்போக்கில் தடிக்கின்றது; தவிரவும் நடுப் பெருங்கடல் முகட்டிலிருந்து விலகிச் செல்கின்றது. குளிர்ந்த நீரின் வெப்பக் கடத்தலால் கீழுள்ள சூடான மென்பாறைக் கோளத்தின் மேற்புறம் குளிர்ந்து கற்கோள மூடகமாக மாறுவதால் இவ்வாறு காலப்போக்கில் தடிக்கின்றது. பெருங்கடல்சார் கற்கோளம் முதல் சில மில்லியன் ஆண்டுகளுக்கு மென்பாறைக் கோளத்தை விட அடர்த்தி குறைவாக இருந்து பின்னர் காலப்போக்கில் அடர்த்தி மிகுந்ததாக ஆகின்றது.

தட்டுப் புவிப்பொறையும் பெருங்கடல்சார் தட்டும் கீழமிழ்தல் மண்டலங்களில் இணையும் இடத்தில் பெருங்கடல் கற்கோளம் பெருநிலப்பகுதி கற்கோளத்திற்கு கீழே அமிழ்கின்றது.

நடு பெருங்கடல் முகட்டில் எப்போதும் தொடர்ந்து புதிய பெருங்கடல் கற்கோளம் உருவாகின்றது. இது கீழமிழ்தல் மண்டலங்களில் புவியோட்டுடன் மீளவும் கலக்கின்றது. இதனால் பெருநிலப்பகுதி கற்கோளத்தை விட பெருங்கடல்சார் கற்கோளம் இளமையாக இருக்கின்றது. மிகப் பழமையான பெருங்கடல்சார் கற்கோளம் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது; பெருநிலப் பகுதி கற்கோளங்கள் பில்லியன் ஆண்டுகள் பழமையானவை.

மற்றுமொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் கற்கோளத்தின் ஓட்டமாகும். குறைந்த வலுவுள்ள நீண்டகால தகைவுகளால் புவிப்பொறை நகர்வுகளின் தாக்கத்தால் கற்கோளம் திண்மையான ஓடாக காணப்படுகின்றது. இது உடைவதாலேயே மாறுகின்றது. கீழுள்ள மென்பாறைக் கோளம் வெப்பத்தால் மென்மையாக இருப்பதால் மீட்சிப் பண்பினால் உருமாறி சரிசெய்து கொள்கின்றது.

தொடர்புடைய பக்கங்கள்

மேற்சான்றுகள்

  1. IPA: lith'usfēr, கிரேக்கத்தில் "பாறை" கோளம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.