கர்ப்பூரி தாக்கூர்
கர்ப்பூரி தாக்கூர் (சனவரி 24, 1924--பிப்பிரவரி 17, 1988) பிகார் மாநிலத்து முன்னாள் முதல்வர் ஆவார். சம்யுக்த சோசலிசுட் கட்சியின் தலைவராக இருந்தவர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காகவும் தாழ்த்தப்பட்டோருக்காகவும் அரசு அலுவல்கள், கல்வி ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிச் செயல்பட்டவர்.
கர்ப்பூரி தாக்கூர் | |
---|---|
பிகார் முதலமைச்சர்களின் பட்டியல் | |
முதல்முறை | |
பதவியில் திசம்பர், 1970 – ஜூன், 1971 | |
முன்னவர் | தரோகா பிரசாத் ராய் |
பின்வந்தவர் | போலா பாஸ்வான் சாஸ்திரி |
இரண்டாவது முறை | |
பதவியில் திசம்பர், 1977 – ஏப்ரல், 1979 | |
முன்னவர் | ஜகநாத் மிஸ்ரா |
பின்வந்தவர் | ராம் சுந்தர் தாஸ் |
துணை முதலமைச்சர், பிகார் | |
பதவியில் மார்ச் 5, 1967 – ஜனவரி 31, 1968 | |
முதலமைச்சர் | மகாமயா பிரசாத் சின்ஹா |
முன்னவர் | இல்லை |
பின்வந்தவர் | இல்லை |
பிகார் கல்வி அமைச்சர் | |
பதவியில் மார்ச் 5, 1967 – ஜனவரி 31, 1968 | |
முன்னவர் | சத்யேந்திர நாரயண் சின்ஹா |
பின்வந்தவர் | சதீஷ் பிரசாத் சிங் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஜனவரி 24, 1924 பிட்டௌன்ஜியா, (தற்பொழுது கர்ப்பூரி கிராமம்), சமஸ்திபுரி மாவட்டம். பிகார், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | பெப்ரவரி 17, 1988 |
அரசியல் கட்சி | சோசியலிசக் கட்சி, பாரதிய கிராந்தி தளம், ஜனதாக் கட்சி |
பணி | அரசியல்வாதி |
இளமைக் காலம்
கர்ப்பூரி தாக்கூர் பிகார் மாநிலத்தில் சமசுதிப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றுரில் பிறந்தார். மாணவப் பருவத்திலேயே 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்து கொண்டார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் 26 மாதங்கள் சிறையில் இருந்தார். கல்விக்குப் பின் ஒரு சிற்றுர்ப் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார்.
போராட்டங்கள்
1960 ஆம் ஆண்டில் அஞ்சல் தொலைவரித் துறை ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தில் முன்னின்று போராடியதால் சிறைக்குச் சென்றார். டெல்கோ குழுமத் தொழிலாளர் போராட்டத்தில் 28 நாள்கள் உண்ணா நோன்பு இருந்து கலந்து கொண்டார்.
அரசியல் பணி
1970 ஆம் ஆண்டின் இறுதியில் கர்ப்பூரி தாக்கூர் பிகார் முதல் அமைச்சர் ஆனார். இரண்டாம் முறையாக 1977 இல் மீண்டும் பிகார் முதலமைச்சர் ஆனார். பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்குக் கல்வியில் 12 விழுக்காடு ஒதுக்கீடு செய்தார். கட்டாய ஆங்கில வழிக் கல்வியை அகற்றி மாநில மொழியான இந்தியைக் கொண்டு வந்தார். லோகத் தளக் கட்சியின் சார்பில் மண்டல்குழுப் பரிந்துரைகளை நடை முறைப்படுத்துவதற்குத் தொடர்ந்து போராடினார். மது விலக்கை அமுல் படுத்தினார். நெருக்கடிக் காலத்தில் செயப்பிரகாசு நாராயணன் தலைமையில் நடந்த முழுப் புரட்சி இயக்கத்தில் இணைந்து வினையாற்றினார். பிகார் அரசியல் தலைவர்களான லாலு பிரசாத் யாதவ், ராம் விலாசு பாசுவான், நிதிசு குமார் போன்றோரின் ஆசானாக கர்ப்பூரி தாக்கூர் மதிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.1991 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் நாளில் ஒன்றிய அரசு இவர் நினைவைப் போற்றும் வகையில் சிறப்பு அஞ்சல்தலையை வெளியிட்டது.
மேற்கோள்கள்
- Battle for Karpoori Thakur's legacy on in Bihar, நாளிதழ்: தி இந்து, நாள்: ஜனவரி 25, 2015
- Former chief minister of Bihar Shri Karpoori Thakur
- UP declares holiday on Karpoori Thakur's birth anniversary, Business Standard, ஜனவரி 31, 2015