கருடாழ்வார்

கருடாழ்வார் என்ற கருடன்[1] இந்து சமயப் புராணங்களில் கடவுளாகவும், பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் ஏற்று இந்துக்களால் வணங்கப்படுகிறார். பெருமாள் கருடனை ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்’ என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இவர் பெருமாளின் கொடியாகவும் விளங்குகிற காரணத்தால் பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இவருக்கு பெரிய திருவடி என்ற பெயரும் உண்டு.

கருடாழ்வார்
கருடாழ்வார், பேளூர், கர்நாடகா

பெயர்க் காரணம்

கருடனுக்கு கருடாழ்வார் என்ற பெயருண்டு. கிருத யுகத்தில் அஹோபிலததை கொடுங்கோலனாக ஆண்டு கொண்டிருந்த ஹிரண்ய கசிபுவைi வதம் செய்து தன் பக்தனான பிரகலாதனைக் காப்பாற்ற பெருமாள் எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். இந்த நிகழ்வுகள் அஹோபிலத்தில் தான் நிகழ்ந்தன. பிரஹலாதனைக் காக்க பெருமாள் நரசிம்ம மூர்த்தியாக ஹிரண்யனின் அரண்மணை தூணில் அவதாரம் செய்ததால் அவர் கருடன் மேல் எழுந்தருளி வராமல், கருடனை விடுத்து தனியாக வரவேண்டியதாயிற்று. இதுபற்றி அறிந்த கருடன் மிகவும் துயருற்று பெருமாளிடம் நரசிம்ம அவதார காட்சியை தனக்கும் காட்டி அருள வேண்டினார். பெருமாள் கருடனை அஹோபிலம் சென்று தவமியற்றும் படி கூறி தான் அங்கேயே நரசிம்ம அவதார காட்சி தருவதாகவும் உறுதியளித்தார். அவ்வாறே பல இன்னல்களுக்கிடையே கருடன் தவமியர்றினார். கருடனுக்கு உறுதியளித்த படி பெருமாள் மலைக்குகையில் உக்ர நரசிம்மராய் காட்சியளித்தார். மாறாத பக்தி கொண்டு பெருமாள் சேவையே பெரிது என்று அவரிடம் பூரண சரணாகதி அடைந்ததால் கருடன், கருடாழ்வார் என்று போற்றி அழைக்கப்படுகின்றார்.[2]

கருடன் பறவை

தமிழில் கருடன் என்ற சொல் செம்மண் நிற இறக்கைகளைக் கொண்டு உடலின் நடுப்பகுதியை வெண்ணிறமாக உடைய செம்பருந்து[3] (Brahminy Kite, Haliastur indus) என்ற பறவையைக் குறிக்கும். கருடன் பறவை மங்களம் நிறைந்ததாகக் கருதப் படுகிறது. இப்பறவை வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் இந்துக்களால் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கோவிலில் குடமுழுக்கு, வேள்வி மற்றும் பிற சிறப்பு வழிபாடுகள் நடைபெரும்போது போது, கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவது நல்ல சகுனம் என்று நம்பப்படுகிறது. சபரிமலை ஆண்டுதோறும் நடைபெறும் மகரஜோதி தரிசனத்துக்காக கேரளா மாநிலம் பந்தளம் எனும் ஊரில் உள்ள அரண்மனையிலிருந்து திருவாபரணப் பெட்டிகள் ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்து வரும்போது கூடவே கருடன் பறவை நேர் மேலே வட்டமிட்டபடி தொடர்ந்து வருவதை இன்றும் காணலாம்.[4]

கருட சன்னதிகள்

பெருமாள் கோவில்களில் கருடனுக்கு தனி சன்னதிகள் உள்ளன. ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாதசுவாமி கோவிலில் செப்புச் சிலை வடிவில் மிகப்பெரிய உயரமான கருடன் தனி சன்னதி கொண்டுள்ளார். இதுபோன்ற சிலை வேறு எங்கும் இல்லை என்று நம்பப்படுகிறது. கருடாழ்வார் சந்நிதிச் சுவர்களின் சிற்பங்கள் வேலைப்பாடுமிக்கவை. இக்கோவிலில் கருடன் சன்னதி அமைந்துள்ள மண்டபங்கள் கருட மண்டபம் என்று அழைக்கப் படுகின்றன. இந்த கருட மண்டபம் ஒரு பிரம்மாண்டமான படைப்பு ஆகும். இம்மண்டத்தில் 212 தூண்கள் உள்ளன[5]. கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் நறையூர் நம்பி கோவிலில் அமைந்துள்ள கல் கருடன் புகழ் பெற்றது. சென்னை சவுகார்பேட்டை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் பெண் வடிவில் கருடன் அருள்பாலிக்கிறார்[6]. தெய்வ பக்தி நிறைந்த சிற்பி ஒருவன் சிற்ப கலை அம்சம் பொருந்திய கருடனின் திருவுருவம் ஒன்றை உருவாக்கினான். சிற்பம் முழுமை பெற்றவுடன் கருடன் உயிர் வரப்பெற்று பறக்கத் துவங்கியது.

பல்வேறு விஷ்ணு ஆலயங்களை தரிசித்தவாறு குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள பறக்கை என்ற இடத்தை சென்றடைந்தது. அங்கு கோயில் தேர் செப்பனிடும்

பணியிலிருந்த தச்சன் தான் செதுக்கி, உயிர்பெற்றுப் பறந்த அந்த கருடனைப் பார்த்தான். உடனே தனது உளியை எடுத்து கருடனை நோக்கி வீசி, வலது இறக்கையில் காயம் ஏற்படுத்தினான்.

‘‘மதுசூதனா’’ என்று அலறியவாறு கோயிலின் தென்மேற்கு மூலையில் போய் வீழ்ந்தது கருடன். அது விழுந்த இடத்தில் அதன் திருவுருவத்தை பிரதிஷ்டை செய்து தனி சந்நதி அமைத்தார்கள். பறக்கை

ஊரில், மதுசூதன பெருமாள் திருக்கோயிலில் அந்த சந்நதியை இன்றும் காணலாம். - See more at: http://m.dinakaran.com/aDetail.asp?Nid=491#sthash.GNKIkTCK.dpuf திருவள்ளூர் மாவட்டம் கோயில்பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் அமர்ந்த நிலையில் தவம் செய்வது போல் அமர்ந்த நிலையில் பெருமாள் எதிரே உள்ளார். இது தவிர நின்ற நிலையிலும் ஒரு கருடாழ்வார் கருவறையின் பின்பக்கம் உள்ளார். [7]

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை தாலுக்கா தேரழுந்தூர் தேவாதிராஜன் கோவிலில் மூலவர் தேவராஜன் கருட விமானத்தின் கீழிருந்தவாறு அருள்பாலிக்கிறார். இந்தக் கருடவிமானம் தேரெழுந்தூர் ஆமருவியப்பனுக்கு கருடனால் வழங்கப்பட்டதாகும். இது போல கர்னாடகா மாநிலத்தில், மாண்டியா மாவட்டத்தில் மைசூர் அருகே அமைந்துள்ள மேல்கோட்டை என்ற திருநாராயணபுரத்தில் உள்ள பெருமாளுக்கு அணிவிக்கப்படும் வைரமுடி கருடனால் வழங்கப்பட்டதாகும்.

கருட வாகனம்

கருட வாகனம் இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல உருக்கொண்டு, கருடன் போன்ற வளைந்த மூக்குடன் கூடிய முக தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில் தான் காட்சி தருவார். முகத்தில் பெரிய மீசை, அலகு இருக்கும். தன உடலில் அட்ட நாகங்கள் என்னும் எட்டு பாம்புகளை அணிகலனாக அணிந்திருப்பார் பெருமாளை வாகனங்களில் சுமந்து வரும் போது அமர்ந்த நிலையில் ஒரு காலை மண்டியிட்டு, ஒரு காலை சற்று உயர்த்தியிருப்பார். இரு பெரும் கரங்களை பெருமாளின் பாதங்களை ஏந்துவதற்காக முன் புறம் நீட்டியவாறு இருப்பார்.

கருட சேவை

பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது வைணவர்களின் நம்பிக்கை . பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது. பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், “பிரம்மோற்சவம்’ என்பர். பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாக பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் கருடவாகன சேவை நடைபெறுகிறது.

  • சித்திரை திருவோண நாளை தீர்த்த நாளாகக் கொண்டு பல்வேறு பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது[8]..
  • வைகாசி விசாக கருட சேவை நாளை தீர்த்த நாளாகக் கொண்டு பல்வேறு பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது
  • ரத சப்தமியன்று திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ கருட வாகன சேவை புகழ் பெற்ற விழாவாகும்[9]
  • புதுச்சேரி ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் கருடசேவை
  • நாச்சியார் கோவில் கல் கருட சேவை[10]
  • காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கருட சேவை[11],
  • ஸ்ரீ பார்த்தசாரதி கருட சேவை[12],
  • ஸ்ரீ ஹயக்ரீவர் ஆனி கருட சேவை[13],
  • திருநாங்கூர் பதினொரு கருட சேவை[14] ,
  • கும்பகோணத்தில் அட்சய திருதியையொட்டி 12 வைணவக் கோவில்களின் பெருமாள் எழுந்தருளி ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் காட்சி தரும் 12 கருட சேவை[15],
  • தஞ்சை மாமணிக் கோவிலில் 23 வைணவக் கோவில்களின் பெருமாள் எழுந்தருளி ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் காட்சி தரும் 23 கருட சேவை[16],
  • காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கூழமந்தல் தலத்தில் வைகாசி மாதம் 15 வைணவக் கோயில்களின் பெருமாள் எழுந்தருளி ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் காட்சி தரும் 15 கருட சேவை[17]

போன்ற கருட சேவைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தனவாகும்

கருடபஞ்சமி

. ஆவணி மாதத்துச் சுக்கிலபட்ச பஞ்சமி பெருமாளின் வாகனமான கருடாழ்வார் அவதரித்த நன்னாளக கருதப்படுகிறது. இந்நாள் கருடபஞ்சமி என்று பெயர் பெற்றுள்ளது. பெருமாள் கோவில்களில் இந்த தினம் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது[18]

ஸ்ரீ கருட புராணம்

பதினெட்டு புராணங்களில் ஸ்ரீ கருட புராணம் மிகவும் பெருமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மனிதனின் பிறப்பு- இறப்பு, வினைகள், பாவ புண்ணிய பலன்கள் பற்றி விவரித்துக் கூறும் ஸ்ரீ கருட புராணம்.பெருமாளால் ஸ்ரீ கருடனுக்குப் போதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது[19]

மேற்கோள்

  1. [http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=கருடன்&matchtype=exact&display=utf8 சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி
  2. கருடாழ்வார்
  3. சாலிம் அலி. "76. Brahminy Kite". The Book of Indian Birds (13 ). Bombay Natural History Society, Oxford University Press. பக். 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:019566523-6.
  4. தோஷங்கள் நீக்கும் கருடாழ்வார்
  5. தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும் V.கந்தசாமி பக்.157
  6. அருள்மிகு பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயில்
  7. மர்ந்த நிலையில் கருடாழ்வார் தினமலர் ஆகஸ்ட் 13,2010
  8. சித்திரை பிரம்மோற்சவ கருட சேவைகள்
  9. நாளை திருப்பதியில் கருட வாகன சேவை-5 லட்சம் பக்தர்கள் திரள்கின்றனர் ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 2, 2011
  10. வஞ்சுளவல்லி தாயர் சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில்
  11. காஞ்சிபுரம் கருட சேவை தினமணி 16 Dec 2011
  12. ஸ்ரீ பார்த்தசாரதி கருட சேவை – 2012
  13. ஸ்ரீ ஹயக்ரீவர் ஆனி கருட சேவை
  14. திருநாங்கூர் பதினொரு கருட சேவை
  15. 12 கருட சேவை
  16. தஞ்சையில் 23வது கருட சேவை பெருவிழாதினமலர், ஜூன் 10,2012
  17. கூழமந்தல் கோயிலில் கருட சேவை தினமணி 04 Jun 2012
  18. கருடபஞ்சமி
  19. ஸ்ரீ கருடப் புராணம்

படக் காட்சிகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.