கருவணு
கருவணு அல்லது நுகம் (Zygote) என்பது பாலின இனப்பெருக்கம் மூலம் ஆண் பாலணுவும், பெண் பாலணுவும் இணைந்து உருவாகும் முதலாவது உயிரணு ஆகும். பல்கல உயிரினங்களில் இந்த உயிரணுவே முளைய விருத்தியின் தொடக்க நிலையாகும். ஒருமடிய நிலையில் உள்ள இரு பாலணுக்கள் இணைவதனால், கருவணுவானது இருமடியமாக இருக்கும். அத்துடன் இரு பெற்றோரில் இருந்தும் மரபியல் தகவல்களைப் பெற்றிருக்கும்.

மனிதரில் பெண்ணின் கருப்பைக்குள் குழந்தை உருவாகுவதற்கான ஆரம்ப நிலைத் தோற்றப்பாடே “கருவணு” எனப்படுகின்றது. பெண்ணின் பாலணுவான சூல்முட்டையும், ஆணின் பாலணுவான விந்தும் இணைவதனால் உருவாகும் கருவணு பின்னர் குழந்தையாக விருத்தியடையும். ஒரு பெண்ணின் வயிற்றில் உள்ள ஒரு பை போன்ற உறுப்பிலேயே கருவணு வளர்வதனால் அந்த உறுப்பு கருப்பை என்று அழைக்கப்படுகின்றது. கருவணுவானது உருவாகும்போது, பெண்ணில் கருத்தரிப்பு நிகழ்கின்றது.