கம்பர் வீட்டு வெள்ளாட்டி பாடல்

கம்பர் வீட்டு வெள்ளாட்டி என்பவர் பாடியதாக ஒரு பாடல் உள்ளது.[1] நெல்மலி என்னும் ஊரில் வாழ்ந்த தச்சன் ஒருவனைப் பற்றிய பாடல் அது.

பாடல் செய்தி

அந்தத் தச்சனின் வீடு நெல் வளர்ந்து மடிந்து விளையும் நிலத்துக்கு நடுவில் இருந்ததாம். அவன் மலைக்கல் போன்ற தோளை உடையவனாம். அவன் பெயர் கங்கணகண கணவன். அவன் மனைவி வில் போன்ற புருவம் படிந்த நெற்றி கொண்டவளாம். அவள் பெயர் மின்மினி மினிமி. அவர்களுக்கு ஒரு வேலைக்காரி. வேலைக்காரி பெயர் துந்துமி துரிதுரிதி.

பெயர் விளக்கம்

வெள்ளாட்டி என்னும் சொல் கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை உள்ளம் படைத்த [2], வெட்டிப் பேச்சு பேசும் [3] பெண்மணியைக் குறிக்கும். இயற்பெயர் ஒன்று இருக்க ஊர்மக்கள் சிலருக்கு வேறு பெயரிட்டுப் பலரும் அறியும்படிச் செய்யும் வழக்கம் உண்டு. இந்த வகையில் தச்சனுக்கும், அவன் மனைவிக்கும், வேலைக்காரிக்கும் பெயர் சூட்டினர் போலும். இவை 12 ஆம் நூற்றாண்டுக் காலத்துப் புனைபெயர்கள்.

பாடல்

நெற்படி விளைகழனி புடைசூழ் நென்மலி வாழ்தச்சன்
கற்படி பனைதோளான் பெயரோ கங் கண கண கணவன்
விற்படி வாணுதலாண் மனைவிமின் மினிமினி மினிமி
சொற்படி வேலைசெயும் மவளோதுந் துமி துரி துரிதி. (62)

அடிக்குறிப்பு

  1. தனிப்பாடல் திரட்டு நூல் பக்கம் 45-54 பாடல் எண் 62
  2. வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை உடையம் யாம் என்னும் செருக்கு. – திருக்குறள் 884
  3. வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின் சிலப்பதிகாரம் 30 வரந்தரு காதை – அடி எண் 198
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.