கத்தரி

கத்தரி (ஒலிப்பு ) சமையலிற் பயன்படும் கத்தரிக் காய்களைத் தரும் செடியினமாகும். கத்தரிக்காய்ச் செடியின் உயிரியற் பெயர் சொலனும் மெலோங்கெனா (Solanum melongena) என்பதாகும். கத்தரிச் செடிகள் பூக்கும் செடிகொடிகளைச் சேர்ந்த சொலானனேசியே (Solanaceae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடிவகை. சொலான்னேசியேக் குடும்பத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற பிறவும் அடங்கும். தென்னிந்தியாவும் இலங்கையுமே இதன் தாயக விளைநிலங்களாகும். ஆங்கிலேயரும் ஐரோப்பியரும் இதனை 16-17 ஆவது நூற்றாண்டில்தான் அறிந்து கொண்டார்கள்[1]. கத்த்ரிக்காய்ச் செடி 40 முதல் 150 செ.மீ உயரமாக வளர்கிறது. கத்தரிக் காய்கள் ஊதா அல்லது வெள்ளை நிறமானவை. தெற்கு, கிழக்காசியப்பகுதிகளில் வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்து பயிரிடப்பட்டதாகத் தெரிகிறது, இடைக்காலத்தில் அராபியர்களால் நடுநிலக்கடற் பகுதியில் அறிமுகமானது. இக்காயைத் தமிழர்கள் கறியாகவோ பொரித்தோ, வதக்கியோ, மசித்தோ உண்பார்கள்.

கத்தரி
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: பூக்கும் தாவரம்
வகுப்பு: மெய்யிருவித்திலையி
துணைவகுப்பு: Asteridae
வரிசை: கத்தரி வரிசை
குடும்பம்: கத்தரிக் குடும்பம்
பேரினம்: கத்தரிப் பேரினம்
இனம்: S. melongena
இருசொற் பெயரீடு
Solanum melongena
லி.
பச்சைக் கத்தரிக்காய்

தமிழ்நாட்டில் விளையும் கத்தரிக்காயின் இனங்களில் பன்மியம் (diversity) உள்ளது. இவை தமிழ்நாட்டில் பயிரிடப்படும் இடங்களிலும், பயிரிடும் முறைகளிலும் வேறுபாடுகள் நிலவுகின்றன. எடுத்துக்காட்டாக நாகை மாவட்டத்தில் பொய்யூர் கத்தரிக்காய், திருச்செங்கோட்டில் பூனைத்தலை கத்தரிக்காய், வேலூரில் முள்ளுக் கத்தரிக்காய், தஞ்சாவூரில் தூக்கானம்பாளையம் கத்தரிக்காய், கல்லணை வட்டாரத்தில் சுக்காம்பார் கத்தரிக்காய் திருச்சியில் அய்யம்பாளையம் கத்தரிக்காய் நெல்லையில் வெள்ளைக் கத்தரிக்காய், தேனி சின்னமனூர் அருகே சிம்ரன் கத்தரிக்காய் எனத் தமிழ் நாட்டில் 9 வகைகள் உள்ளன. [2] [3]

கத்தரி வித்து பிரித்தெடுக்கும் முறை

நன்கு முதிர்ந்த பழுப்பதற்கு முந்திய நிலையில் உள்ள கத்தரிக் காய் அறுவடை செய்யப்படும். இவற்றினை தடி ஒன்றின் மூலம் நசிப்பதனால் வித்துக்கள் வேறாக்கப்படும். பின் வித்துக்கள் கழுவப்பட்டு நீர் வடிய விடப்படும். பின் சுத்தமான துணியின் மீது ஈரலிப்பு வடியும் வரையில் வைக்கப்படும். அதன் பின் சில மணி நேரம் வரையில் வெயிலில் உலரவிடப்படும். பின் நிழலான இடத்தில் உலர்த்தி குளிரான சூழலில் சேமிக்க வேண்டும்.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. ஆங்கிலத்தில் brinjal என்னும் சொல் 1611 இல் இருந்தும், eggplant என்னும் சொல் 1767 இல் இருந்தும் வழக்கில் உள்ளது. இச்சொற்களின் வழக்குகளை ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகரமுதலியில் காணலாம்
  2. லாபம் தரும் ‘சிம்ரன் கத்தரி' ரகம் தி இந்து தமிழ் ஜூன் 4 2016
  3. முனைவர் நம்மாழ்வார் கட்டுரை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.