கணினி நச்சுநிரல்

கணினி நச்சுநிரல் (computer virus, கணினி வைரஸ்) கணினி பாதுகாப்புத் தொழில் நுட்பத்தில் பயனரின் அனுமதியின்றி தானாகவே நகலெடுக்கும் இயங்கிகளையும் ஏனைய கோப்புக்களையும் பாதிக்கும் ஒரு நிரலாகும். இவை கணினி வலையமைப்பூடாகவும் (இணையம் மற்றும் அகக்கணினி வலையமைப்பு) காவிச்செல்லக்கூடிய சேமிப்பு ஊடகங்கள் போன்றவற்றாலும் பரவுகின்றது.

பெரும்பாலான கணினிகள் இன்று இணையத்துடனும் அகக்கணினி வலையமைப்புடனும் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான கணினிகள் நச்சுநிரல்களைப் பரப்புவதற்கும் உதவுகின்றன. இன்றைய நச்சுநிரல்கள் உலகாளவிய வலையமைப்பு, மின்னஞ்சல் மற்றும் கோப்புக்களைப் பகிரும் வலையமைப்புக்களூடாகவும் பரவுகின்றன.

கணினி வைரஸ் ஆனது இயற்கையான நச்சு நிரல் போன்றே செயற்பாட்டில் ஒத்திருக்கும். நச்சுநிரலானது பலவாறு பரப்பப்படும். இவ்வகைச் செயற்பாடானது தீப்பொருள் என்றும் அழைக்கப்படலாம். பொதுவான பயன்பாட்டில் கணினி வைரஸ், கணினிப் புழுக்கள் (Computer worm), நல்ல நிரல்கள்போல் நடிக்கும் வைரஸ்கள் (Trojan horse) எல்லாமே வைரஸ் என்றே அழைக்கப்படினும் அவை தொழில் நுட்பத்தில் சற்றே மாறுபட்டவை. இவை நச்சுநிரல்களை ஒவ்வொரு கணினிக்கும் கொண்டு செல்லும் வேலையைச் செய்கின்றன. இதில் எடுத்துச்செல்லப்படும் நச்சுநிரல்கள் அந்தந்த கணினிகளில் தங்கி அவர் அக்கணினியில் செய்யும் வேலைகளைக் கவனித்துவருகின்றன. அவர் எப்போதாவது கடன் அட்டை இலக்கங்களைத் தரும்போது அவற்றைக் குறிப்பெடுத்துக் கொள்கின்றன. சில நேரங்களில் இணைய வங்கியத்தில் பயன்படுத்தும் கடவுச்சீட்டுகளையும் எடுத்துவைத்துக்கொள்கின்றன. பின்னர் அவற்றைத் தமது முதலாளிக்கு இணையத்தின் வாயிலாக அனுப்பி விடுகின்றன.

சில நச்சுநிரல்கள் நிரல்களில் பாதிப்பினை ஏற்படுத்தி கணினிக்குப் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. இவற்றில் கோப்புக்களை அழித்தல், கோப்புக்களின் குணாதிசயங்களை மாற்றுதல் (எடுத்துக்காட்டாக சிஸ்டம் கோப்பாகவோ, மறைக்கப்பட்ட கோப்பாகவோ மாற்றுதல்) போன்றவற்றைச் செய்யும். இவை கணினியின் நினைவகத்தை பயன்படுத்துவதால் பயனர் இயல்பாகப் பயன்படத்தும் நிரல்களுடன் குழப்பத்தை உண்டு பண்ணிக் கணினியை நிலைகுலையச் செய்துவிடும். இவ்வாறான தவறான நிரல்களினால் கணினியில் தேவையான தரவுகளிற்கு அழிவுகள் ஏற்படலாம்.

கணினி நச்சுநிரல்கள் கணினியில் அழித்தலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப் பட்டவை. சில நச்சுநிரல்கள் கணினியின் தொடக்க செயல்பாட்டை நேரந்தாழ்த்தவோ கணினி வேலை செய்யும் வேகத்தைக் குறைக்கவோ செய்யும். சில நச்சுநிரல்கள் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் குண்டுகள் போன்று குறிப்பிட்ட நாளில் மட்டும் செயற்படும். பொதுவாக விண்டோஸ் கணினிகள் 30 வினாடிகளில் தொடங்கும். ஆனால் நச்சுநிரலினால் கணினி இயக்கம் நேரந்தாழ்த்தப்படலாம். மாறாக ஒரு கணினி விண்டோஸ் இயங்குதளத்தை தொடங்க 1 நிமிடமளவில் எடுத்தால் முதலில் நச்சுநிரலைச் சந்தேகிக்கலாம்.

நச்சுநிரல் தன்னைத்தானே நகலெடுத்துப் பெருக்கிக்கோள்ளும். உங்கள் கணிப்பொறியில் சேமித்து வைத்துள்ள தரவுகளுக்கும் கோப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது. பிறர் உடைமைகளுக்கு அழிவை ஏற்படுத்த வேண்டும் என்கிற தூண்டுதல் உள்ள, திறன்மிக்க மாபெரும் நிரலாக்கத் திறன்கொண்ட நிரலர்கள் எழுதுகின்ற நிரல்களே இவை. அறியப்பட்ட நச்சுநிரல்கள் 5,700 இக்கும் அதிகமானவை. ஒவ்வொரு நாளும் 6 புதிய நச்சுநிரல்கள் கண்டறியப்படுகின்றன.

முதல் நச்சு நிரல்

கணினியை செயலிழ்க்க செய்யும் நச்சு நிரல்கள் முதன் முதலில் 2004-ஆம் ஆண்டிலேயே பரப்பப்பட்டன.’காபிர் ஏ’ என்பதே முதல் நச்சு நிரலாகும்.[1]

வந்தபின் காப்பு

மேலும் இத்தகைய நச்சுநிரல்களை அழிக்க அல்லது தடை செய்வதற்கு என்று நச்சுநிரல்தடுப்பி கிடைக்கின்றன. இந்த நச்சுநிரல்தடுப்பியை நாம் நமது கணினியில் பதிந்து வைத்து அவற்றை பயன்படுத்தலாம். ஆனாலும் இங்கு பல விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். அவைகளாவன

ஒரு நச்சுநிரல்தடுப்பி அனைத்து நச்சுநிரல்களையும் அழித்துவிடுவதில்லை, காரணம் ஏற்கனவே வந்த ஒரு கிருமி நிரலுக்குத்தான் அதை அழிக்ககூடிய நிரல்களை எழுதமுடியும். இன்று புதிதாக வரும் கிருமி நிரல்களுக்கு நாளைதான் மருந்து கண்டுபிடிக்க முடியும். அதற்கு காரணம் ஒவ்வொரு நச்சுநிரல்தடுப்பி எழுத்தாளர்களும் புதுப்புதுவிதமான முறைகளைக்கடைபிடிப்பதால் தான். அந்தமுறைகளை நன்கு ஆராய்ந்து அந்த புதிய கிருமி எவ்வாறு செயல்படுகிறது என்பனை பகுத்தாய்ந்துதான் அதற்கு அழிப்பான்கள் எழுதப்படுகின்றன. ஆதலால் நேற்றைய கிருமி அழிப்பான்கள் நாளய கிருமிகளை அழிக்கப்போவதில்லை. எனவே அடிக்கடி உங்களது நச்சுநிரல்தடுப்பி மென்பொருளை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

மேற்கோள்கள்

  1. 25-12-2013 அன்று வெளிவந்த கல்கண்டு வார இதழ்.பக்கம்-02

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.