கட்டுவிரியன்

கட்டுவிரியன் (Common Krait - Bungarus caeruleus) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள காடுகளில் காணப்படும் நச்சுப் பாம்பினம் ஆகும்.[1]கொடிய நஞ்சினையுடைய இப்பாம்பு பெரும் நான்கு என்றழைக்கப்படும் பாம்புகளில் ஒன்று. இப்பாம்பு தமிழில் கட்டு விரியன், எண்ணெய் விரியன், எட்டடி விரியன், பனை விரியன்[2] [3] ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

கட்டுவிரியன்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
துணைத்தொகுதி: முதுகெலும்பிகள்
வகுப்பு: ஊர்வன
வரிசை: Squamata
குடும்பம்: Elapidae
பேரினம்: Bungarus
இனம்: B. caeruleus
இருசொற் பெயரீடு
Bungarus caeruleus
Schneider, 1801

குறிப்பு விளக்கம்

கட்டுவிரியன் பாம்பை,விரியன் பாம்பு என்றும் அழைப்பர். இதன் உடலின் நிறம் கருநீலத்திலிருந்து நீலம் கலந்த சாம்பல் நிறமாக இருக்கும். சராசரியாக 1 மீட்டர் நீளம் வரை வளரும். இதன் முதுகெலும்பு நெடுக அறுகோண வடிவிலான பெரிய செதில்களைக் கொண்டிருக்கும். வால் பகுதியில் வெண்ணிறப்பட்டைகள் பொதுவாகக் காணப்படும்.

ஆண் பாம்பு பெண்ணை விடப் பெரிதாகவும் நீண்ட வாலினைக் கொண்டும் இருக்கும்.

பொதுப் பெயர்கள்

புவியியற் பரம்பல்

பாக்கிசுதானின் சிந்து மாகாணத்தில் இருந்து மேற்கு வங்கச்சமவெளி வரை வாழ்கின்றன. மேலும் தென்னிந்தியா முழுவதும் இலங்கையிலும் இவை உள்ளன.

வாழிடம்

பொதுவாக வயல்களிலும் எலி வளை, கரையான் புற்று, கற்குவியல் போன்ற இடங்களில் இவை காணப்படுகின்றன. மற்றும் நீர்நிலைகளுக்கு அருகிலும் இவை காணப்படுகின்றன.

இயல்பு

இது இரவில் சுறுசுறுப்பாக இருக்கும் பாம்பு. ஆண் பாம்புகள் தங்கள் எல்லைக்குள் மற்றவர்கள் நுழைவதை விரும்பாதவை.

இரை

கட்டுவிரியன் மற்ற பாம்புகளையும் எலிகளையும் இரையாகக் கொள்கிறது. மேலும் பல்லிகளையும், பாம்பரணைகளையும் தின்கின்றன. இவை தங்களுடைய குட்டிகளையே தின்னும் இயல்பு கொண்டவை. இதன் பாம்புக்குட்டிகள் கணுக்காலிகளையும் உண்கின்றன. சில சமயங்களில் இவை சிறு பாலூட்டிகள், தவளை போன்றவற்றையும் தின்கின்றன.

இவை இரவில் திரியும் பாம்புகளாகையால் பகலில் எலி வங்குகளிலோ, கறையான் புற்றுகளிலோ,[4] மண், குப்பை கூளங்களுக்கிடையிலோ பதுங்கிக் கொள்கின்றன. பகலில் சீண்டப்படும் போது, தலை பாதுகாப்பாக இருக்கும் வகையில் தங்கள் உடலை பந்து போல் சுருட்டிக் கொள்கின்றன. எனினும் இரவில் இவை எதிர்க்கும். பங்காரசு இனப்பாம்புகளில் இதுவே மிகவும் ஆபத்தானது.

நஞ்சு

கட்டுவிரியன் பாம்பினுடைய நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்கும் நஞ்சு வகையைச் சேர்ந்தது. தீண்டியவுடன் தசைகளைச் செயலற்றதாக்கி விடும். பாம்பு கடித்தவுடன் ஏறத்தாழ 6-8 மணிநேரத்திற்குள் சாவு ஏற்படலாம். மூச்சு மண்டலம் செயலிழப்பதாலேயே பொதுவாக உயிரிழப்பு ஏற்படுகிறது.

மேற்கோள்கள்

  1. "Clinical Toxinology-Bungarus caeruleus".
  2. "Tamil Lexicon".
  3. "IndiaNetZone".
  4. O'Shea, Mark; Tim Halliday (2010). Reptiles and amphibians. London: Dorling Kindersley. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781405357937.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.