கடவுச்சொல்

கடவுச்சொல் ஒலிப்பு ) (Password) எனப்படுவது இடம் அல்லது தகவலுக்கு அணுக்க ஒப்புதல் அளிக்கும் மறைசொல்லாகும். பொதுவாக ஒரு பயனர் பெயர் அல்லது பயனர் எண்ணுடன் இணைந்து இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது. கடவுச் சொற்கள் எண், எழுத்து, குறியீடுகள் என்பனவற்றை உள்ளடக்கி இருக்கலாம்.

விக்கிப்பீடியா இணையத்தளத்தில் புகுபதிகை செய்வதற்காகக் கடவுச் சொல்லை இடும்போது கடவுச் சொல்லானது உடுக் குறியீடுகளாகத் தோன்றும் விதம்

கருவிகள்

கடவுச்சொல்லானது இயங்குதளங்கள், அலைபேசிகள், தன்னியக்கக் காசளிப்புப் பொறிகள் போன்ற கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றன. இணையத்தில் மின்னஞ்சற்சேவை, சமூக வலைத் தளங்கள் போன்றவற்றுள் நுழைவதற்கு, பயனர் பெயரும் கடவுச் சொல்லும் கட்டாயமாகும்.

பாதுகாப்பு

கடவுச்சொல்லானது பாதுகாப்பானதாகவும் நினைவுபடுத்தக் கூடியதாகவும் அமைக்கப்பட்டிருத்தல் நன்று. வலுவான கடவுச் சொற்களை உருவாக்குவதற்கு அவை நீளமானதாக இருத்தல் வேண்டும். எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட வரியுருக்களைக் கடவுச் சொல் கொண்டிருத்தல் பாதுகாப்பானதாகும்.[1]அதே போல, கடவுச் சொல்லானது எழுத்துகள், குறியீடுகள், எண்கள் என்பனவற்றைக் கொண்டிருத்தல், கடவுச் சொற்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மாற்றி அமைத்தல், ஒவ்வொரு கணக்குக்கும் வேறு வேறு கடவுச் சொற்களைப் பயன்படுத்தல் என்பனவற்றின் மூலம் கடவுச் சொல்லின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

கடவுச்சொல் நினைவு

கடவுச்சொற்களை இணைய உலாவி மென்பொருட்களே நினைவில் வைத்துக் கொள்ளும் வண்ணம் விருப்பத்தேர்வுகளை அமைத்துக்கொள்ள இயலும். பல்வேறுபட்ட வலைத்தளங்களைக் கையாளும் ஒரு பயனருக்குப் புகுபதிகை செய்ய வேண்டிய கடவுச் சொற்களை நினைவிற்கொண்டு அடுத்த முறை அந்த வலைத் தளங்களுக்குச் செல்லும்போது, தானாகவே உள்நுழையும் வசதி உள்ளது. ஆனால், இந்த வசதி வீட்டில் வைத்துப் பயன்படுத்தும் தனியாட்கணினிகளுக்கு மட்டுமே பொருத்தமானதாக இருக்கும். பணியிடங்களில் பலர் பயன்படுத்தும் கணினிகளிலோ தனியார் இணைய உலாவு மையங்களிலோ இந்த வசதியை பயன்படுத்துவது பாதுகாப்பற்றது.

தவிர்க்க வேண்டியவை

அகரமுதலிகளில் (எந்த மொழியிலாயினும்) உள்ள சொற்களைப் பயன்படுத்தல், அகரமுதலிகளில் உள்ள சொற்களைப் பின்புறமிருந்து எழுதுதல், சொற்களை எழுதும்போது பொதுவாக விடப்படும் தவறுகள், பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுருக்கக் குறியீடுகள், தொடரிகள், தொடர்ந்து வரும் வரியுருக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் பெயர், பிறந்த நாள், வலவ ஒப்புதல் ஆவண இலக்கம், நாட்டு அடையாள அட்டை இலக்கம் போன்ற தனிப்பட்ட விபரங்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். 12345678, 222222, abcdefg போன்ற தொடரிகளையும் விசைப்பலகையில் அருகருகே உள்ள எழுத்துகளையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். [2]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.