கடல்புரத்தில் (புதினம்)

கடல்புரத்தில் எழுத்தாளர் வண்ணநிலவன் எழுதப்பட்ட புதினம் ஆகும். கடல்புறத்து மக்களின் வாழ்வின் பகுதியை குரூஸ் மிக்கேல், மரியம்மை, அமலோற்பவம், செபஸ்தி, பிலோமி ஆகிய கதாப்பாத்திரங்களின் வழியாகப் பதிவு செய்கிறார். 128 பக்கங்கள் கொண்ட இப்புதினம் கிழக்குப் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.

கடல்புரத்தில்
நூலாசிரியர்வண்ணநிலவன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைபுதினம்
வெளியீட்டாளர்கிழக்கு பதிப்பகம்
வெளியிடப்பட்ட திகதி
2008
பக்கங்கள்128
ISBN978-81-8368-932-8


இக்கதையைப் பற்றி எனும் தலைப்பில் இப்புதினத்திற்கு வண்ணநிலவன் முன்னுரை எழுதியுள்ளார். அதில்,

சொல்லுகிறதுக்கு எவ்வளவோ இருக்கிறது. ஓரத்தில் ஒதுங்கி நின்று எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துப்
பார்த்து இன்னும் அலுக்கவில்லை. எல்லோரையும் போலத்தான், 'இந்த வாழ்க்கையில்  
ஏதோ இருக்கிறது' என்று தேடிப்போய்க் கொண்டிருக்கிறேன். நான் எழுதவென்று ஆரம்பித்து
'இவனும் ஏதோ சொல்லுகிறானே' என்ற ஒரு நிலையும் ஏற்பட்டுப் போயிருக்கிறது. 

என்கிறார்.

பின்னட்டைக் குறிப்புகள்

இப்புதினத்தின் பின்னட்டையில் காணப்படும் குறிப்புகள்:

கடல்புரத்தில் பரபூட்டும் சம்பவங்களும் கிளர்ச்சி தரும் காட்சிகளும் கொண்ட நாவல் அல்ல. ஆனால், இது ஒரு நல்ல நாவல். கலைத்தன்மை நிறைந்த உயர்வான நாவல். படித்தவர்கள் மனதில் பல காலத்துக்கு அழுத்தமாக நிற்கக்கூடியது. இதன் கதாப்பாத்திரங்கள் இயல்பாக வளர்ந்து இயல்பாகவே நம்மனதில் இடம் பிடிக்கிறார்கள். ஒரு தேர்ந்த சிறுகதையைப் போல போராட்டத்துடன் தொடங்குகிறது நாவல். அனாதி காலமாகத் தந்தைகளுக்கும் மகன்களுக்கும் இடையில் நிலவிவரும் நெருடல், உள்ளார்ந்த இணக்கமின்மை என்ற இழைகளோடு மின்னல் வெட்டுப் போன்ற சம்பவத்துடன் முழு வீச்சோடு ஆரம்பமாகிறது. ஆனால் போகப்போக நெருடல்களும் கோபங்களும் அமிழ்ந்து போக, கடல்புரத்து மக்களின் ஜீவ சரித்திரம்- குரூஸ் மிக்கேல், அவன் மனைவி மரியம்மை, மகன் செபஸ்தி, இளைய மகள் பிலோமி, பணியாள் சிலுவை, பக்கத்து வீட்டுக்கார ஐசக், பிலோமியின் சிநேகிதி ரஞ்சி, பிலோமிக்குப் பிரியமான சாமிதாஸ், மரியம்மையின் பிரிய வாத்தி, எல்லோருக்கும் பிரியமான பவுலுப் பாட்டா இவர்களின் கதையாகி மனிதர்களின் இதயங்களில் இயல்பாகக் குடிகொண்டுள்ள மூர்கக்குணமும் வெறித்தன்மைபோடு, ஆனால் களங்கமின்றி விவரிக்கப்படுகிறது. வாழ்க்கையின் முரண்பாடான அம்சங்களை மிகவும் யதார்த்தமாகவும் தீவிரமாக எதிர்க்க வேண்டிய அம்சங்களை மென்மையாகவும் சாத்தியமே என ஏற்றுக்கொள்ளும்படி சொல்கிறது இந்த நாவல். விஷயத்தைவிட ,சொல்லும் முறையில் அபூர்வ கலைத்தன்மை பூரணம் பெறுகிறது. இந்த நாவலின் சிறப்பு அம்சமே இதன் பாஷைதான். எதையும் சாதிக்கவல்ல பாஷை, இந்த நாவலையும் ஸ்தாபிக்கிறது. இன்னும் பல காலத்துக்குக் கடல்புரத்தில் சிறந்த நாவலாகவே இருக்கும்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.