ஓவியர் ஜீவன்

ஓவியர் ஜீவன் போரும் வன்முறையும் ஏற்படுத்தும் தீவிர உணர்வுப் பதிவுகளைப் பிரதிபலிக்கும் ஓவியங்களை வரைபவர். இவர் இலங்கையிலும் கனடாவிலும் பல ஓவியக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.

கனேடிய நிறுவனமொன்றில் 'வரைகலை நிபுண'ராகப் பணிபுரியும் ஜீவன் இலங்கையில் இருந்த காலத்தில் மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கட்டடக் கலைத்துறையில் பட்டப்படிப்பினைக் கற்றுக் கொண்டிருந்தவர். நாட்டு நிலைமைகள் காரணமாகக் கனடாவுக்குப் புலம் பெயர்ந்த இவர் புலம் பெயர்ந்ததிலிருந்து ஓவியக் கண்காட்சிகள் பலவற்றை நடத்தி வருபவர். இலக்கியத்தின் கவிதை போன்ற ஏனைய துறைகளிலும் ஆர்வம் மிகுந்து ஈடுபட்டு வருபவர். இவரது ஓவியங்கள் நவீன பாணியிலமைந்தவை. ஓவியம் தவிர சிற்பத் துறையிலும் நாட்டம் மிக்க இவர் அத்துறையிலும் தன் முயற்சிகளைத் தொடர்பவர். இவரது ஓவியங்கள் மானுட துயரங்களைச் சித்திரிப்பவை.

ரொறன்ரோவில் Funcky Raat அமைப்பினரின் 'தெற்காசியக் கலை இரவு' மற்றும் Desh Pardesh அமைப்பினரின் 'Desh Pardesh 94' ஆகிய நிகழ்வுகளில் இவரது ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கனடா நோவா ஸ்காசியா (Nova Scotia)வில் தொலைக்காட்சியில் சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்த ஜாக்குலீன் வார்லோ (Jacqueline Warlow) The Strongest Voice is Yours என்னும் நிகழ்வில் இவரது ஓவியங்களைப் பற்றி அறிமுகப்படுத்தியிருக்கின்றார்.

'உயிர் நிழல் (பிரான்ஸ்)', 'தூண்டில் (ஜேர்மனி)', 'மனிதம்(சுவிஸ்)', 'கனவு(இந்தியா)', 'சுவர் (இலங்கை)', 'தோழி (இலங்கை)', 'சமர்(பாரிஸ்)' உட்படப் பல கலை இலக்கிய சஞ்சிகைகளும் இவரது ஓவியங்களைப் பிரசுரித்துள்ளன.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.