ஓணம்பாக்கம்

ஓணம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஓணம்பாக்கம் ஊராட்சியில் அமைந்திருக்கும் ஒரு கிராமம். 2011 வருட கணக்கெடுப்பின்படி, இங்கு 4000 மக்கள் வசிக்கின்றனர்[1].

சிறப்புகள்

ஓணம்பாக்கம், வரலாற்றுச் சிறப்புகளை உடைய ஊர். 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறை உடையது. ஊருக்கு கிழக்கே குறத்திமலை, கூசாமலை, பட்டிமலை, வெண்மணிமலை என நான்கு மலைக்குன்றுகள் காணப்படுகின்றன. இவற்றில் குறத்திமலையும், கூசமலையும் சமண முனிவர்களால் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மலைகளைக் குடைந்து கற்கள் எடுக்கும் தொழில்களால், இம்மலைகளில் உள்ள சமணச் சின்னங்கள் சேதமாக அதிக வாய்ப்பு இருப்பதாக இவ்வூர் மக்கள் கருதுகின்றனர்.[2]

ஓணம்பாக்கம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது.

அமைவிடம்

குறத்திமலை

ஓணம்பாக்கம் செய்யூருக்கு கிழக்கே 6 கி மீ தொலைவில், செய்யூர்-மேல்மருவத்தூர் சாலையில் அமைந்திருக்கிறது. மதுராந்தகத்தில் இருந்து தென்கிழக்காக 18 கி மீ தொலைவில் அமைந்திருக்கிறது.

போக்குவரத்து

செய்யூரில் இருந்து மேல்மருவத்தூர், மதுராந்தகம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் ஒணம்பாக்கம் வழி செல்கின்றன. சமணகுன்றுகளை அடைவதற்கு அய்யனார் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வடக்கே 1 கி மீ தூரம் செல்ல வேண்டும்.

குறத்திமலை

குறத்திமலை, ஓணம்பாக்கம் L. N புரம் கிராமத்திற்கு அருகில் உள்ளது. இந்த மலையில் கோட்டம் போன்ற அமைப்பில், ஒரு பாறையில் பார்சுவநாதர் சிற்பம் காணப்படுகிறது. பார்சுவநாதர் தலைக்கு பின்புறம் ஐந்து தலை நாகம் விரிந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. இருபுறமும் யக்ஷன், யக்ஷி சாமரம் வீசியபடி சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. பாறையின் மேற்பகுதியில் கோபுரம் போன்ற அமைப்பு காணப்படுகிறது. வலப்புறம், கி.பி. எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த கிரந்த கல்வெட்டு காணப்படுகிறது. இதில், "இருபத்து இரண்டு" என்ற சமணப்பிரிவை நிர்வகிக்கும் வாசுதேவ சித்தாந்த படாரர் என்ற சமண முனிவர், இக்கோயிலை செய்வித்த செய்தி வடிக்கப்பட்டுள்ளது[3].

சற்று தள்ளி உள்ள பாறையில் ஆதிநாதர் புடைப்பு சிற்பமும், மகாவீரர் புடைப்பு சிற்பமும் காணப்படுகின்றன. மலைக்கு கிழக்கே, ஐந்து சமண கற்படுக்கைகள், வடக்கு நோக்கி காணப்படுகின்றன. மலை உச்சியில் உள்ள ஒரு பாறையில், கிழக்கு நோக்கி ஐந்து சமண கற்படுக்கைகள் காணப்படுகின்றன. மழை நீர் உட்புகாமல் இருக்க, படுக்கை இருக்கும் பாறையின் மேல் உள்ள பாறையில் விளிம்பு வெட்டப்பட்டுள்ளது. வறண்ட நிலையில் ஒரு சுனையும் காணப்படுகிறது.

கூசாமலை

கூசாமலை

கூசாமலை, குறத்திமலைக்கு மேற்கில் அமைந்திருக்கிறது. இங்கு "பந்தக்கல்" என்னும் இடத்தில், மேற்கு நோக்கி ஐந்து சமணப்படுக்கைகள் காணப்படுகின்றன. இவ்விடத்திற்கு அருகில் இரண்டு சுனைகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று வறண்டு விட்டது. இம்மலையின் தெற்குப் பகுதியில் குறுகலான குகை ஒன்று காணப்படுகிறது. இக்குகையின் நுழைவாயிலில், கங்கை அம்மன் என்று ஊர் மக்களால் வணங்கப்படும் தெய்வம் அமைந்திருக்கிறது. இவ்விடத்திற்கு சற்று மேலே ஒரு வறண்ட சுனை உள்ளது.

கல்வட்டங்கள்

ஓணம்பாக்கத்திற்கு வடகிழக்கே அமைந்துள்ள நாகமலைக்கு அருகில் கல்வட்டங்கள் காணப்படுகிறது. இதன் மூலம் ஓணம்பாக்கத்தின் வரலாறு ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆண்டுகள் பின்னோக்கி செல்கிறது.

படங்கள்

உசாத்துணைகள்

  1. http://www.indiamapped.com/tamilnadu/kancheepuram/maduranthakam/kattudevadur/
  2. 8thC artefacts threatened by granite mining
  3. முனைவர். சீதாராம் குருமூர்த்தி, காஞ்சிபுரம் மாவட்ட தொல்லியல் கையேடு 2008, பக்கம் 69 , தமிழ்நாடு தொல்லியல் துறை, சென்னை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.