ஒங்கோல் மாடு
ஒங்கோல் மாடு (Ongole) என்பது இந்தியாவைச் சேர்ந்த ஒரு நாட்டு மாட்டு இனமாகும். இவை ஆந்திரப்பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் காணப்படுகின்றன. இதன் பெயர் ஒங்கோல் என்ற ஊரின் பெயரில் இருந்து வந்ததாகும், சிலர் இதை நெல்லூர் மாடு என்றும் அழைக்கின்றனர், ஏனென்றால் இந்தப் பகுதி ஒரு காலத்தில் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்ததாக இருந்ததால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்த மாடுகள் கால் மற்றும் வாய் நோய் மற்றும் விசர் மாட்டு நோய் ஆகியவற்றை எதிர்க்கும் திறன் உடையவை என்று கூறப்படுவதால் இவற்றிற்கு மக்கள் மத்தியில் பெரும் தேவை உள்ளது. [1] இந்த காளைகளின் வலிமை மற்றும் தீவிரத்தன்மையின் காரணமாக இவை மெக்சிக்கோ மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காளைச் சண்டைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் காளை தமிழகம், ஆந்திராவில் பாரம்பரிய சல்லிக்கட்டு விளையாட்டில் பயன்படுத்துப்படுகிறது. இந்த மாடுகளைச் சல்லிக்கட்டு போன்றவற்றிற்காக வளர்ப்பவர்கள் இவற்றின் இனப்பெருக்கத்தின்போது இனத்தூய்மையைப் பாதுகாத்து வளர்த்து வருகின்றனர்.
