ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்

ஆறாம் ஜார்ஜ் ( George VI ஆல்பெர்ட் ஃபெரடரிக் அர்துர் ஜார்ஜ்; 14 டிசம்பர் 1895- 6 பிப்ரவரி 1952) என்பவர் ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரித்தானியப் பேரரசின் நிலப்பரப்புகளின் அரசராக 11 டிசம்பர் 1936 முதல் தனது இறப்பு வரை இருந்தார். இந்தியாவின் கடைசி பேரரசராகவும் (1947 வரை), அயர்லாந்தின் கடைசி அரசராகவும் (1949 வரை), பொதுநலவாய நாடுகளின் முதல் தலைவராகவும் இருந்தார்.

ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்

ஐந்தாம் ஜார்ஜின் இரண்டாவது மகனாக இருந்ததால் அரசராக முடிசூடுவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை. தனது இளமைக்காலத்தை அவருடைய அண்ணனான எட்வார்டின் நிழலிலேயே கழித்தார். முதலாம் உலகப்போரின் போது கடற்படையில் பணியாற்றினார். போருக்குப் பின்னர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 1923ம் வருடம் பெருமாட்டி எலிசபெத் போவஸ்-லயான் (Lady Elizabeth Bowes-Lyon) என்பவரை மணந்தார். அவர்களுக்கு எலிசபெத் (பின்னர் இரண்டாம் எலிசபெத்), மார்கரேத் என்று இரண்டு மகள்கள் பிறந்தனர்.

1936ம் ஆண்டு தந்தையின் மறைவுக்குப் பின்னர், ஜார்ஜின் அண்ணன் எட்வார்ட் VIII என்ற பெயரில் அரியணை ஏறினார். எனினும், ஒரு வருடத்திற்குள் வாலிஸ் சிம்ப்ஸன் என்னும் இருமுறை விவாகரத்துப் பெற்ற அமெரிக்கப் பெண்மணியை மணப்பதாக எட்வார்ட் தன் ஆசையை வெளிப்படுத்தினார். ஆனால் பிரிட்டனின் பிரதமராக இருந்த ஸ்டான்லி பால்ட்வின் அப்பெண்ணை மணந்தபின் அரசராக இருக்க முடியாது என்று எட்வார்டிடம் அறிவுறுத்தினார். அதனால் அப்பெண்ணை மணப்பதற்காக தனது தம்பியிடம் அரசாட்சியை ஒப்படைத்தார். ஆகவே, விண்ட்ஸர் குடியின் மூன்றாம் மன்னராக ஆறாம் ஜார்ஜ் அரியணை ஏறினார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.