எஸ். எம். கார்மேகம்

எஸ். எம். கார்மேகம் (நவம்பர் 19, 1939 - ஜனவரி 18, 2005) இலங்கையைச் சேர்ந்த ஒரு மலையக எழுத்தாளர். மலையக மேம்பாட்டிற்காக, எழுத்து மூலமும், பத்திரிகைத்துறை மூலமும் சேவையாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர்.

எஸ். எம். கார்மேகம்
பிறப்புநவம்பர் 19, 1939
கொட்டக்கலை கல்மதுரை
இறப்புஜனவரி 18, 2005
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

வாழ்க்கைச் சுருக்கம்

கொட்டக்கலை கல்மதுரை தோட்டத்தில் 19 நவம்பர், 1939 பிறந்த எஸ். எம். கார்மேகம் அட்டன் புனித பொஸ்கோ கல்லூரியில் கல்வி பயின்றவர். பின்னாளில் புலம்பெயர்ந்து தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்.

எழுத்துலக வாழ்வு

வீரகேசரி, தமிழக தினமணி போன்ற பத்திரிகைகளில் துணை ஆசிரியராக கடமையாற்றியவர். தினமணி நாளிதழின் சென்னை பதிப்பில் 1988 முதல் 1997வரை தலைமை துணையாசிரியர் தொடங்கி, வார வெளியீடுகளின் ஆசிரியர் பணிவரை பல்வேறு பொறுப்புகளுடன் பணியாற்றினார்.

பின்னர் அவரது மகன்களான முரளிதரன், சிறீதரன் ஆகியோரின் உதவியுடன் சென்னை வீரகேசரி என்ற இதழை வெளிக் கொணர்ந்தார். இரு இதழ்கள் வெளிவந்த சென்னை வீரகேசரி பல்வேறு காரணங்களால் தொடர்ந்து வெளிவரவில்லை.

கண்டி மன்னன், ஈழத்தமிழரின் எழுச்சி போன்ற நூல்களின் ஆசிரியர். மலையக சிறுகதைகள் அடங்கிய கதைக் கனிகளின் தொகுப்பாசிரியர். வீரகேசரி தோட்ட மஞ்சரி மூலம் மலையக எழுத்தாளர்களை எழுதத்தூண்டி மலையக எழுத்தாளன் என தனது சக எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியவர்.

வீரகேசரியில் இணைந்த பிறகு கல்மதுரையான் எனும் புனைபெயரில் தேயிலையின் கதை எனும் கட்டுரையை தொடராக எழுதினார். ஜெயதேவன் எனும் புனை பெயரில் நான் பிறந்து வளர்ந்த இடம் எனும் கட்டுரையைஎழுதினார். மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தை ஆரம்பித்து மலையக எழுத்தாளர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த பெருமைக்குரியவர். ஆறு சிறுகதைப் போட்டிகளை நடத்திய சிறப்புக்குரியவர்.

ஐரோப்பிய நாடுகளில் வெளிவரும் சஞ்சிகைகள், பத்திரிகைகள் இவரது மலையகம், சார்ந்த கட்டுரைகளை மறு பிரசுரம் செய்தன. பாரிசிலிருந்து வெளிவரும் ஈழநாடு இவரது கட்டுரைகளை தொடர்ந்து மறுபிரசுரம் செய்தது. வீரகேசரி தோட்ட மஞ்சரி மூலம் நடத்தப்பட்ட முதல் நான்கு சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்ற 12 சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளிவர உதவினார். வீரகேசரியில் இருந்து நூல் வடிவில் வெளிவந்த முதல் நூல் கதைக்கனிகள் என்பது குறிப்பிடத்தக்கது. சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்தாகி இந்நாட்டை விட்டு மலையக மக்கள் வெளியேறியபோது வீரகேசரியில் அவர்கள் புறப்பட்டு விட்டார்கள் எனும் இவருடைய கட்டுரை இம்மக்களின் கண்ணீர் காவியமாகும்.

மித்திரன் வாரமலரில் தந்தையின் காதலி அழைக்காதே நெருங்காதே, ஆகிய நாவல்களை தொடராக எழுதினார். 23 வருடங்கள் வீரகேசரியில் சிறந்த முறையில் பணியாற்றினார்.

மறைவு

மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்த இவர் 2005 ஜனவரி 18ம் தேதி இயற்கை எய்தினார்.

வெளிவந்த நூல்கள்

  • ஒரு நாளிதழின் நெடும்பயணம்
  • கண்டி மன்னன்
  • ஈழத்தமிழரின் எழுச்சி

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.