எறும்பியல்

எறும்பியல் (Myrmecology) என்பது, எறும்புகள் பற்றி அறிவியல் அடிப்படையின் ஆய்வு செய்யும் ஒரு துறை. இது பூச்சியியலின் ஒரு கிளைத்துறை. தொடக்ககால எறும்பியலாளர்கள் சிலர், எறும்புகள் சமுதாயத்தை ஒரு உயர்வான சமுதாயமாகக் கருதி அதன் அடிப்படையில் மனித சமுதாயத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அவற்றை ஆய்வு செய்தனர். இவை சிக்கலானதும், வேறுபட்ட வடிவங்களில் அமைந்ததுமான உயர்நிலைச் சமூக அமைப்பைக் கொண்டிருப்பதனால், சமூக முறைமைகளின் படிமலர்ச்சி குறித்து ஆய்வு செய்வதற்காக ஒரு மாதிரியாக இன்றும் எறும்புகள் திகழ்கின்றன. இவற்றின் பல்வகைமைத் தன்மையும், சூழல்மண்டலத்தில் அவற்றின் முன்னிலையும் உயிரியற்பல்வகைமை குறித்தும் அதனைப் பதுகாப்பது குறித்தும் நடைபெறும் ஆய்வுகளில் எறும்புகளுக்கு முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றன.

விலங்கியல்

தொடரின் ஒரு பகுதி


விலங்கியலின் கிளைகள்

மானிடவியல் ·
தேனீயியல் · எட்டுக்காலியியல்
கணுக்காலியியல் · நீர்ப்பாலூட்டியியல்
சிப்பியோட்டியல் · பூச்சியியல்
நடத்தையியல் · ஒண்டுப்புழுவியல்
ஊர்வனவியல் · மீனியல்
நத்தையினவியல் · பாலூட்டியியல்
எறும்பியல் · உருளைப்புழுவியல்
விலங்கு நரம்பு&நடத்தையியல் · பறவையியல்
தொல்விலங்கியல் · மிதவையுயிரியல்}
முதனியியல்

குறிப்பிடத்தக்க விலங்கியலாளர்

ஜார்ஜஸ் கவியர் · சார்லசு டார்வின்
வில்லியம் கிர்பி · கரோலசு லின்னேயசு
கான்ட்ராட் லாரென்சு · தாமசு சே
ஆல்ஃப்ர்ட் ரஸல் வல்லேஸ் · மேலும்...

வரலாறு

டார்வினுக்கு முன்
டார்வினுக்குப் பின்

வரலாறு

எறும்புகளின் வாழ்க்கை பற்றி அறிந்து கொள்வது குறித்த ஆர்வம் நீண்ட காலமாகவே மனிதர்களுக்கு இருந்து வந்துள்ளது. பல சமுதாயங்களில் நாட்டார் ஆக்கங்களில் இவற்றைக் குறித்த செய்திகளைக் காணலாம். உள்ளுணர்வு, கற்றல், சமூகம் போன்ற எண்ணக்கருக்களில் ஆர்வம் கொண்டவரான, உளவியலாளர் அக்சுத்தே ஃபோரெல் (1848–1931)என்பவரே எறும்புகளின் வாழ்க்கையைக் கவனிப்பதன் மூலம் அறிவியல் அடிப்படையில் அவற்றை முதன்முதலில் ஆய்வு செய்தவர் ஆவார். 1874 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் எறும்புகள் என்னும் நூலை எழுதிய இவர் தனது வீட்டுக்கும் எறும்புகள் குடியிருப்பு என்று பெயர் இட்டார். ஃபாரெலின் தொடக்க ஆய்வுகள் ஒரு எறும்புக்குடியிருப்பில் பல்வேறு எறும்பினங்களை கலப்பது தொடர்பிலானவை. ஒரு பரந்த பகுதியில் அமைந்த பல எறும்புக் குடியிருப்புகள் ஒன்றோடொன்று தொடர்புகளைக் கொண்டிருந்ததையும் சில பகுதிகளில் குடியிருப்புக்கள் தனித்தனியாகவே செயல்பட்டதையும் இவர் கவனித்தார். இதனை இவர் நாடுகளின் அமைப்புக்களுடன் ஒப்பிட்டார்.[1]

வில்லியம் மார்ட்டன் வீலர் (1865–1937) என்பவர், எறும்புகளைச் சமூக அமைப்பு என்னும் நோக்கில் இருந்து ஆய்வு செய்தார். 1910 ஆம் ஆண்டில், ஒரு உயிரினமாக எறும்புக் குடியிருப்புக்கள் என்னும் தலைப்பில் விரிவுரை ஒன்று நிகழ்த்தினார். இவ்விரிவுரையே பேருயிரினம் என்னும் எண்ணக்கருவுக்கான முன்னோடியாக விளங்கியது. எறும்புக்குடியிருப்பில், உணவு பகிரப்படுவதை அடிப்படையான அம்சமாக வீலர் கருதினார். உணவுக்குச் சாயம் இடுவதன்மூலம் உணவு எவ்வாறு பரவுகிறது என்பதை அவர் ஆராய்ந்தார்.[1] ஓராசு தோனிசுத்தோர்ப் போன்றவர்கள், எறும்புகளின் தொகுதியியல் பற்றி ஆய்வு செய்தனர்.

உயிரியலின் பிற அம்சங்களில் வளர்ச்சி ஏற்படும் வரையில், இந்த மரபு உலகின் பல பாகங்களிலும் தொடர்ந்தது. மரபியலின் அறிமுகம், நடத்தையியல் தொடர்பான எண்ணக்கரு, அதன் வளர்ச்சி என்பன எறும்புகள் தொடர்பான புதிய சிந்தனைகளுக்கு வித்திட்டன. இவ்வாறான ஒரு ஆய்வுப்பாதையில் முன்னோடியாக விளங்கியவர் ஈ. ஓ. வில்சன் என்பவர். சமூக உயிரியல் எனப்படும் துறையை நிறுவியவரும் இவரே.[1]

குறிப்புகள்

  1. Sleigh, Charlotte (2007) Six legs better : a cultural history of myrmecology. The Johns Hopkins University Press. ISBN 0-8018-8445-4

இவற்றையும் பார்க்கவும்

  • எறும்புப் பண்ணை
  • சமூகப் பூச்சிகளின் ஆய்வுக்கான பன்னாட்டு ஒன்றியம்
  • எறும்பு ஆலை

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.