என்றி அட்சன்
ஹென்றி ஹட்ஸன் (Henry Hudson) ஆசிய நாடுகளுக்குப் புதுவழி கண்டுபிடிக்க முயன்ற இங்கிலாந்தைச் சார்ந்த மாலுமி ஆவார்.
ஹென்றி ஹட்ஸன் | |
---|---|
![]() | |
பிறப்பு | c. 1565–1570 இங்கிலாந்து |
இறப்பு | 1611 (அனுமானம்) |
பணி | நாடாய்வாளர், கப்பலோட்டி, எழுத்தாளர் |
1607ல் கடற்பயணம்
வட துருவத்தின் வழியாக சப்பானுக்கும் சீனாவுக்கும் செல்ல முடியுமென்று ஹட்ஸன் கருதினார். இதற்காக 1607-ல் இவர் ஒரு கப்பலில் புறப்பட்டார். கிரீன்லாந்தைத் தாண்டிச் சென்றபோது, கடல் உறைந்து இவருடைய வழியை மறைத்தது. எனவே இவர் திரும்பிவிட்டார். அடுத்த ஆண்டும் இவர் புறப்பட்டுச் சென்றபோது, இவ்விதமே தோல்வியுற்றுத் திரும்பினார்.
1609ல் கடற்பயணம்
ஆலந்து டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவனத்திற்காக ஹட்ஸன் 1609-ல் தம் மூன்றாவது பயணத்தை மேற்கொண்டார். முன்போலவே, கடல் உறைந்து இவருடைய பாதையை மறைத்தது. இவர் தாயகம் திரும்பாமல், மேற்குத்திசை வழியாகச் சீனாவுக்குச் செல்ல நினைத்து, வட அமெரிக்கக் கரையோரமாகச் சென்றார். அங்கு, இப்போது நியூயார்க் நகரம் உள்ள விரிகுடாவை அடைந்து, ஆற்றின் வழியாக உட்பிரதேசத்திற்குச் சென்றார். அப்பிரதேசத்தைத் தாம் கண்டுபிடித்ததால், அது தம்மை அனுப்பிவைத்த டச்சுக்காரர்களுக்குச் சொந்தமென அறிவித்தார். டச்சக்காரர்கள் பிறகு அங்குக் குடியேறினர். அதுவே பின்னர் நியூயார்க் நகரமாக வளர்ச்சி அடைந்தது.
1610ல் கடற்பயணம்
ஹாலந்துக்கு ஹட்ஸன் திரும்பிச் செல்லும்போது லண்டனில் இவருடைய கப்பலை ஆங்கிலேயர் பறிமுதல் செய்தனர். இங்கிலாந்துக்கே இனி சேவை செய்வதாக ஹட்ஸன் வாக்குறுதி அளித்து, தம் நான்காவது கடல் பயணத்தை ஆங்கிலக் கப்பலொன்றில் 1610ல் மேற்கொண்டார். கிரீன்லாந்தைக் கடந்து செல்லும்போது கடல் உறைந்துவிட்டது. கப்பலும் சிக்கிக்கொண்டது. உணவும் தீர்ந்துபோனதால் ஹட்ஸனும் அவருடன் சென்றவர்களும் மிகுந்த துன்பம் அடைந்தனர்.
1611ல் கடற்பயணம்
1611ல் கோடைக்காலம் வந்து கப்பல் புறப்பட்டபோது, கப்பலிலிருந்த சிலர் ஹட்ஸனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். ஹட்ஸனையும் அவருடைய இளம் மகனையும் மற்றும் ஏழுபேர்களையும் பாதுகாப்பற்ற ஒரு சிறு படகில் ஏற்றி அனுப்பிவிட்டார்கள். படகு எங்கு சென்றதோ, தெரியவில்லை. ஹட்ஸனைப் பற்றிய விவரமும் கிடைக்கவில்லை. ஹென்றி ஹட்ஸன் 1611-ல் மறைந்தார்.
புகழ்
மறைவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்தான் ஹென்றி ஹட்ஸனுடைய புகழ் பரவியது. அதற்கு இவர் மேற்கொண்ட கடல் பயணங்களே காரணம். வட அமெரிக்காவிலுள்ள அட்சன் ஆறு, அட்சன் விரிகுடா, ஹட்ஸன் ஜலசந்தி ஆகியவை இவர் பெயரால் அழைக்கப்படுபவை.
மேற்கோள்கள்
- "குழந்தைகள் கலைக் களஞ்சியம்",1993, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.
வெளி இணைப்புகள்
- http://www.biographi.ca/009004-119.01-e.php?&id_nbr=343
- http://www.gutenberg.net/etext/13442
- http://www.hudsonriver.com/halfmoonpress/stories/hudson.htm
- http://www.elizabethan-era.org.uk/henry-hudson.htm
- http://www.u-s-history.com/pages/h1146.html
- https://www.findagrave.com/cgi-bin/fg.cgi?page=gr&GRid=6621707
- http://www.henryhudson.info/
- http://www.mcny.org/exhibition/amsterdam-new-amsterdam
- http://www.nfb.ca/film/last_voyage_of_henry_hudson
- http://www.chass.utoronto.ca/~cpercy/hell/anthology/travel/Travel1625Pricket.htm