உள்மூச்சு

உள்மூச்சு (Inhalation) அல்லது உட்சுவாசம் அல்லது மூச்சிழுத்தல் எனும் உடற்றொழிலியல் செயல்முறையில் புதிய காற்று, நுரையீரல்களுக்குள்ளாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது ஓர் செயல்மிகு நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் வெளிப்புற விலா எலும்பிடைத் தசைகள், உதரவிதானம் பங்கு பெறுகின்றன.

உள்மூச்சினைக் காட்டும் வரைபடம்

உள்மூச்சுப் பொறிமுறை

இயல்பான உட்சுவாசத்தின் போது, வெளிப்புற விலா எலும்பிடைத் தசைகள் சுருங்குவதால் விலா எலும்புகள் முன்புறத்தில் சற்று மேல்நோக்கி உயருகின்றன. இச்செயலால் மார்பறை பக்கவாட்டிலும் முதுகு வயிற்றுப்புற வாட்டிலும் பெரிதாகிறது. உதரவிதானத்தின் வட்டத்தசைகள் சுருங்குவதால் மேல்நோக்கி உயர்ந்திருந்த உதரவிதானம் தட்டையாகிறது. இந்நிகழ்ச்சியால் மார்பறையின் மேல் கீழ் வாட்டில் கொள்ளளவு கூடுகிறது. மேற்கூறிய அனைத்துத் தசைச் செயல்களால் மார்பறையின் கனவளவு அதிகரிக்கும். இதனால் பாயிலின் விதிப்படி, நுரையீரலினுள் காற்றின் அழுத்தம் வளிமண்டலத்தின் அழுத்தத்தை விடக் குறையும். இதனை ஈடுசெய்வதற்கென வெளிக்காற்று காற்றுப் பாதைகளின் வழியே நுரையீரலினுள் நுழையும். இந்த காற்று உள்ளிழுத்தல் மூக்கு வழியாகச் சென்று மேல்தொண்டையினூடாகவும், தொடர்ந்து மூச்சுக்குழாய்களினூடாகவும் பயணித்து நுரையீரலில் உள்ள காற்றுச் சிற்றறைகளை அடையும்[1][2].

மேற்கோள்கள்

  1. "Human Physiology, Respiration". பார்த்த நாள் செப்டம்பர் 23, 2015.
  2. "Anatomy and physiology of muscles involved in breathing". HK Rewards. This is an excerpt from Breathe Strong, Perform Better by Alison McConnell.. பார்த்த நாள் செப்டம்பர் 23, 2015.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.