உலகத் தர நிர்ணய நாள்

உலகத் தர நிர்ணய நாள் (World Standards Day) என்பது ஆண்டு தோறும் அக்டோபர் 14ம் நாளன்று உலகளாவிய முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (ஐ.எஸ்.ஓ.), அனைத்துலக மின் தொழில்நுட்ப ஆணையம் (ஐ.ஈ.சி.), அனைத்துலகத் தொலைத்தொடர்பு ஒன்றியம் (ஐ.டி.யூ.) ஆகிய நிறுவனங்களின் வழிமுறைகளுக்கு உட்பட்டு உலகத் தரங்களை உருவாக்கப் பாடுபடும் தொழில்துறை வல்லுநர்களின் சேவையைப் பாராட்டவும் பொருள்கள் மற்றும் சேவைகளில் விளங்க வேண்டிய சீர்மைத் தன்மையின் அவசியத்தை உலகளாவிய ரீதியில் வலியுறுத்தவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகத் தர நிர்ணய நாள், 2007

ஒவ்வோர் ஆண்டும் ஐ.எஸ்.ஓ. மாநாட்டில், பல்லாயிரக்கணக்கான நிபுணர்கள் பங்கேற்கின்றனர். பல தொழில்நுட்பக் குழுக்களும், துணைக் குழுக்களும், பணிக் குழுக்களும் அமைக்கப்பட்டுப் பல்வேறு தொழில்களுக்கான தர நிர்ணயங்களை அந்நிபுணர்கள் வகுத்தளிக்கின்றனர் அல்லது மேம்படுத்துகின்றனர். IEC, ISO மற்றும் ITU என்பன சந்தைகளை உருவாக்கல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், பணக்கார மற்றும் வறிய நாடுகளுக்கிடையேயான வேறுபாடுகளைக் களைவது, போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த 3 அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து 1969ம் ஆண்டிலிருந்து, அக்டோபர் 14-ஆம் தேதியை உலகத் தர நிர்ணய நாளாக அனுசரிக்கின்றன. 2007ம் ஆண்டில் கொண்டாடப்படும் 38-ஆவது உலகத் தர நிர்ணய நாளின் மையக் கருத்து, "தரங்களும் மக்களும்: சமூகத்துக்கான சேவை" (Standards and the citizen: Contributing to society) என்பதாகும்.

இந்தியாவில் ஒரே சீரான தர முறைகளை வகுப்பதிலும், சான்றளிப்பதிலும் இந்தியத் தர நிர்ணய அமைப்பு (Bureau of Indian Standards - BIS) ஈடுபட்டுள்ளது. ஐ.எஸ்.ஓ-வில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைப்பு இதுவாகும்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.