உரல்

உரல் ( ஒலிப்பு) என்பது அரிசி முதலான தானியங்களைக் குற்ற, இடிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது மூன்று அடி வரை உயரமுள்ள ஏறத்தாழ ஓர் அடி விட்டமுள்ள மரத்தினால் அல்லது கருங்கல்லினால் ஆக்கப்பட்டிருக்கும். இதன் ஒரு பக்கத்தில் அரை அடி முதல் ஓர் அடிவரையான ஆழத்தில் ஒரு குழி போன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்தக்குழிக்குள் அரிசி முதலான தானியங்களை இட்டு உலக்கையைப் பாவித்து குற்றுவார்கள். இப்படிச் செய்வதால் அதற்குள் இடப்பட்ட தானியம் துகள்களாக்கப்பட்டுப் பின்னர் பொடியாக்கப்படும்.

உரலும் உலக்கையும்

உரலில் தானியங்களைப் பொடியாக்குவதுபோல் சில தானியங்களின் வெளிப்புற உமியை நீக்குவதற்கும் பயன்படுத்துவார்கள். எடுத்துக்காட்டாக, நெல் மணிகளை உரலில் இட்டு சிறிதுநேரம் குற்றுவதன் மூலம் அரிசியும் உமியும் வெவ்வேறாகப் பிரிக்கப்படும். அதன் பின்னர் சுளகு (முறம்) பயன்படுத்தி புடைப்பதன் மூலம் அரிசியையும் உமியையும் வேறாக்குவர்.

பண்டைய தமிழர் வாழ்க்கையில், இயந்திரங்களின் வரவின் முன்னர் உரல் வீடுகளில் அன்றாடம் பாவிக்கப்படும் ஒரு பொருளாக இருந்து வந்தது. இன்றும் சிற்றூர்களில் சிறு அளவில் நெல் குற்றவும் பலகாரங்கள் செய்வதற்காகத் தானியங்களை இடிப்பதற்கும் உரல் பயன்படுத்தப்படுகிறது. இப்படி உரலில் இடித்து உருவாக்கப்படும் மாவு கைப்பக்குவம் மிகுந்து சுவையான பலகாரங்களைச் செய்வதற்கு உதவுவதாகக் கருதுகின்றனர்.

குறிப்பு

பாவித்தல் (இலங்கைப் பயன்பாடு) = பயன்படுத்துதல்

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.