ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (Eelam People's Revolutionary Liberation Front - EPRLF) ஈழ இயக்கங்களில் ஒன்றாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு இயக்கமாகும். இதன் தோற்றுவிப்பாளரும் தலைவரும் செயலாளர் நாயகம் க பத்மநாபா என்பவர் ஆவார். இவ்வியக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் கலைக்கும் படி தடைசெய்யப்பட்டு, மீண்டும் இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்குப் பின்னர் இந்திய அமைதி காக்கும் படையுடன் வந்து மீண்டும் இந்திய இராணுவத்தின் உதவியுடன் புலிகளுக்கு எதிராக இயங்கியது. இந்திய-இலங்கை ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட வட-கிழக்கு மாகாண சபையில் இந்த இயக்கம் முதன்மையானதாக இயங்கியது அல்லது இந்தியாவால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்திய இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக அ. வரதராஜப் பெருமாள் ஆக்கப்பட்டார். இவர் பெயரளவிலான ஒரு முதலமைச்சராக மட்டுமே இருந்தாரே தவிர, முதலமைச்சர் எனும் வகையிலான செயல்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. ஏறக்குறைய ஓராண்டு காலம் இந்த இயக்கம் வட-கிழக்கு நிர்வாகத்தில் இந்திய இராணுவ முகாம்கள் உள்ள பகுதிகளில் செல்வாக்கு கொண்டிருந்தது. இந்திய இராணுவம் வெளியேறியவுடன் இந்த இயக்கத்தின் முகாம்களும் மறைந்தன. இயக்க உறுப்பினர்களில் அதிகமானோர் இந்தியாவுக்கும் மற்றும் ஏனைய நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தனர். மிகுதியானோர் இந்திய-இலங்கை ஒருங்கிணைவின் படி இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயல்படத் தொடங்கினர்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

2001 ஆம் ஆண்டு முதல் இக்கட்சியின் சுரேஷ் அணி என அழைக்கப்படும் குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து செயற்படுகின்றனர்.

இவ்வியக்கத்தினைச் சேர்ந்தவரானா புஸ்பராஜா எழுதிய ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூல் ஈழப் போராட்ட வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஆவணப் பதிவாக கருதப்படுகிறது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.