ஈழநாடு (பத்திரிகை)

ஈழநாடு இலங்கை, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஒரு செய்தி நாளிதழ் ஆகும். 1959 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இப்பத்திரிகை பல இடையீடுகளுக்கும், பாதிப்புகளுக்கும் நடுவே தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்து 1990களின் ஆரம்பத்தில் நிறுத்தப்பட்டது.[1]

ஈழநாடு
வகைநாளிதழ்
வடிவம்சிறுபக்க செய்தித்தாள்
நிறுவியதுபெப்ரவரி 1959 (1959-02)
மொழிதமிழ்
வெளியீட்டு முடிவு1990
தலைமையகம்யாழ்ப்பாணம்

வரலாறு

அக்காலத்தில் இலங்கையில் வெளியிடப்பட்ட தமிழ்ப் பத்திரிகைகள் உட்பட்ட எல்லாப் பத்திரிகைகளும் இலங்கையின் தலைநகரமான கொழும்பிலிருந்தே வெளியிடப்பட்டன. இலங்கைத் தமிழரின் பண்பாட்டு மையமாகக் கருதப்பட்ட யாழ்ப்பாணத்திலிருந்து அவர்களின் குரலைப் பிரதிபலிக்கும் நோக்கத்துடன் பத்திரிகைகள் எதுவும் இல்லாத குறையைப் போக்க 1958 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் "கலாநிலையம்" என்ற பதிப்பகத்தை கே. சி. தங்கராஜா (20.6.1907- 20.7.1987), கே.சி.சண்முகரத்தினம் ஆகிய இரு சகோதரர்கள் ஆரம்பித்தனர். 1959 பெப்ரவரியில் “ஈழநாடு” என்ற பெயரில் செய்திப் பத்திரிகையை ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் வாரம் இரு முறையாக வெளிவந்தது. 1961 முதல் நாளிதழாக வெளிவர ஆரம்பித்தது. கொழும்பு தவிர்ந்த இலங்கை நகரமொன்றிலிருந்து வெளிவந்த முதல் நாளிதழ் இதுவே. ஈழநாட்டின் பிரதம ஆசிரியர்களாக எஸ். எம். கோபாலரத்தினம்[2], கே. பி. ஹரன் ஆகியோர் பணியாற்றினார்கள். ஈழநாடு ஞாயிறு வாரமலர் பதிப்பிற்கு ஆசிரியர்களாக சு. சபாரத்தினம், ம. பார்வதிநாதசிவம் ஆகியோர் இருந்தனர்.

தாக்குதல்கள்

1981 சூன் மாதத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்ட போது ஈழநாடு அலுவலகமும் அதே கும்பலால் எரிக்கப்பட்டது.[3] 1987 ஆம் ஆண்டில் இந்திய அமைதிப் படையினரால் தாக்கப்பட்டு பயன்படுத்த முடியாத அளவு சேமடைந்தது. 1988 பெப்ரவரியில் போராளிகளின் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானது.[1] ஒவ்வொரு தடவையும் சிறு இடைவெளியின் பின் மீண்டும் வெளிவந்தது. தொடர்ச்சியான பத்திரிகைச் செய்தித் தணிக்கைகள், அச்சுறுத்தல்கள், பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்ட நிலையில் 90களின் ஆரம்பத்தில் பத்திரிகை வெளிவருவது நிறுத்தப்பட்டது.[1]

ஆண்டு நிறைவு மலர்

ஈழநாட்டின் 25வது ஆண்டு நிறைவுமலர் 1984 பெப்ரவரி 11 இல் 56 பக்கங்களுடன் பத்திரிகையின் அளவில் வெளியிடப்பட்டது. இம்மலரில் பத்திரிகையின் வரலாறு, பத்திரிகையாளர்களின் அனுபவக் கட்டுரைகள், மற்றும் பல கட்டுரைகள் வெளியிடப்பட்டன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.