ஈழத்து வன்னியர்

ஆரியச்சக்கரவர்த்திகளின் யாழ்ப்பாண அரசுக் காலத்துக்கு முன்னரே தமிழ் நாட்டிலிருந்து வன்னியர்கள் இலங்கைக்கு வந்தமை பற்றிய குறிப்புகள் யாழ்ப்பாண வரலாற்று நூல்களிலும், கோணேசர் கல்வெட்டு என்னும் நூலிலும் காணப்படுகின்றன. வையாபாடலிலே வன்னியர் குடியேற்றம் பற்றி விரிவாகப் பேசப்படுகின்றது. இவ்வாறு வந்த வன்னியர்களின் பரம்பரையினர், ஈழத்து வரலாற்றிலே, சிறப்பாக ஈழத்தமிழர் வரலாற்றிலே முக்கியமான பங்களிப்புகளைச் செய்துள்ளார்கள். இந்த ஈழத்து வன்னியர் பற்றியே இக்கட்டுரையில் எடுத்தாளப்படுகிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே இவர்களால் ஆளப்பட்டுவந்த தலைநிலப்பகுதி வன்னி என்னும் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் வன்னியர் குடியேற்றம்

தன்னைப் பீடித்திருந்த நோயொன்றைத் தீர்ப்பதற்காக இலங்கையின் வடபகுதிக்குத் தமிழ் நாட்டிலிருந்து வந்த மாருதப்பிரவை என்னும் இளவரசி, நோய் தீர்ந்தபின், உக்கிர சிங்கசேனன் என்பவனை மணந்து இங்கேயே தங்கிவிட்டதாகவும், இன்று வன்னி என அழைக்கப்படும் அடங்காப்பற்றுப் பகுதியை ஆண்டுவந்த உக்கிரசேனனுக்கும், மாருதப்பிரவைக்கும் பிறந்த மகனின் திருமணத்துக்காக, மதுராபுரியில் இருந்து பெண் அழைத்துவந்தபோது அவளுடன் 60 வன்னியர்கள் வந்ததாகவும், வையாபாடல் கூறுகின்றது. அடங்காப்பற்றுக்கு அனுப்பப்பட்ட அவர்கள் அப்பகுதிக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் மேலும் பல வன்னியர்களை இலங்கைக்கு அழைத்து வந்ததாகவும் தெரிகிறது. இவர்களுள், முல்லைத்தீவில் குடியேறிய முல்லைமாலாணன், சிவலை மாலாணன், சருகி மாலாணன், வாட்சிங்கராட்சி ஆகிய வன்னியர்களின் பெயர்கள் வையாபாடலில் தரப்பட்டுள்ளன.

அடங்காப்பற்றிலே வாழ்ந்த பூர்வகுடிகளினால் ஏற்பட்டு வந்த தொல்லைகளின் காரணமாக, அவர்களை அடக்குவதற்காகவும், பல வன்னியர்கள் அங்கு வரவழைக்கப்பட்டார்கள். இவ்வாறு வந்தவர்களில், கறுத்தவராயசிங்கம், தில்லி, திடவீரசிங்கன், குடைகாத்தான், முடிகாத்தான், வாகுதேவன், மாதேவன், இராசசிங்கன், இளஞ்சிங்கவாகு, சோதையன், அங்கசிங்கன், கட்டையர், காலிங்கராசன், சுபதிட்டன், கேப்பையினார், யாப்பையினார், ஊமைச்சியார், சோதிவீரன், சொக்கநாதன், இளஞ்சிங்கமாப்பாணன், நல்லதேவன், மாப்பாணதேவன், வீரவாகு, தானத்தார், வரிப்பத்தார் ஆகிய 24 பேர் வையாபாடலில் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். இவர்களிற் சிலர் கணுக்கேணி, முல்லைத்தீவு, தனிக்கல்லு, கிழக்குமூலை, மேற்குமூலை ஆகிய இடங்களில் ஆட்சிசெலுத்திவந்த பல்வேறு பூர்வகுடிச் சாதியினரைத் தோற்கடித்து, அப்பகுதிகளைத் தாங்களே ஆண்டுவந்தனர். இவை தவிர, கச்சாய், பழை, கரைப்பற்று, கருவாட்டுக்கேணி, கட்டுக்குளம், போன்ற இடங்களிலும், பல வன்னியர் குடியேறியதாகத் தெரிகிறது. வேறு சிலர், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டப் பகுதிகளிலும் குடியேறினர். சிலர் யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்தனர்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.