நீர்த்தடம்

நீர்த்தடம் அல்லது ஈரநிலம் (ஆங்கிலம்:Wetland) என்பது, ஆண்டுக்கு குறைந்தது ஆறு மாதம், ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் இயற்கையாகவோ, செயற்கையாகவோ நீர் நிற்கும், நீர்சார் நிலப்பகுதியைக் குறிக்கிறது.[1]. மிக முக்கியமாக தண்ணீர்த்தடங்களில் காணப்படும் தனித்துவமான உயிச்சூழல்களும், நீர் தாவரங்களும் மற்ற நிலங்களிலிருந்து தண்ணீர்த்தடங்களை வேறுபடுத்திக் காட்டுகின்றன.[2] அதிகம் ஆழமில்லாத நிலப்பகுதிகளில் தொடர்ச்சியாகவோ, ஆண்டில் ஒரு சில காலப் பகுதிகளோ தண்ணீர் நிற்கின்ற கரையோரங்களும் தண்ணீர்த்தடங்கள் என அறியப்படுகின்றன. தண்ணீர்த்தடங்களில் காணப்படுகின்ற நீரானது கடல் நீராகவோ, நன்னீராகவோ இருக்கலாம். தண்ணீர்த்தடங்கள் பல்லுயிரினங்களுக்கு வசிப்பிடமாகவும் விளங்குகின்றது. அண்டார்ட்டிக்காவைத் தவிர உலகில் மற்றுமுள்ள அனைத்துக் கண்டங்களிலும் தண்ணீர்த்தடங்கள் அமைந்திருக்கின்றன[3]. அமேசான் ஆற்றுப் படுகைகளிலும், மேற்கு சைபீரிய சமவெளிகளிலும், தென்னமெரிக்காவின் பந்தனால் பகுதிகளிலுமே மிகப் பெரிய தண்ணீர்த்தடங்கள் காணப்படுகின்றன[4].

வேம்பநாடு காயல் - ஒரு நீர்த்தடம்

சிறியதும் பெரியதுமான தடாகங்கள், ஆறுகள், அருவிகள், அழிமுகங்கள், கழிமுகத்து நிலங்கள், கண்டல் பகுதிகள், பவளப்பாறைகள் நிறைந்த பகுதிகள், சதுப்பு நிலங்கள், தாழ்ந்த பரப்பில்லுள்ள நெல்வயல்கள், அணைக்கட்டுகள், வெள்ளப்பெருக்கினால் நீரினால் மூடப்பட்டுக் கிடக்கும் சமதளப் பகுதிகள், நீர் சூழ்ந்த காட்டுப்பகுதிகள், அலையாத்திக் காட்டுப் பகுதிகள் என அனைத்துமே தண்ணீர்த்தடங்கள் என்ற பகுப்பில் அடங்கும்.

ஐநாவின் ஆயிரமாண்டு சூழலமைப்பு மதிப்பீட்டின் படி புவியின் மற்ற உயிர்ச்சூழல் பகுதிகளை விட தண்ணீர்த்தடங்களில் தான் மிக அதிகமான அளவில் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் தென்படுவதாக அறிவித்திருக்கின்றது[5].

தண்ணீர்த்தட உயிரிகள்

சிறுத்தைத் தவளை Lithobates pipiens

இருவாழ்விகளான தவளையினங்களில் பல, ஈரநிலங்களில் தான் வாழ்கின்றன. ஈரநிலத்தை விட்டு விலகி வாழும் தவளை இனங்கள் கூட, தங்கள் முட்டைகளை இட, இந்த ஈரநிலங்களையே நாடி வந்து, தங்கள் இனத்தைப் பெருக்குகின்றன.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.