இலங்கை இனமோதல்

மொழி தொடர்பில் கட்சிகளின் செல்வாக்கு

இலங்கையின் இனமோதலுக்கு பல்வேறு காரணிகள் காணப்படுகின்றன. இதனை வேறு விதத்தில் கூறினால் இவ்வின மோதலானது பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு காணப்படுகின்றது எனலாம். இவை பெரும்பாலும் மொழி, கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் காணிப் பகிர்வு என்பவற்றை உள்ளடக்கியதாகும். அத்துடன் வன்முறை என்பதும் முக்கியத்தவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. இவ்விடயங்களில் 1948 ஆம் ஆண்டில் இலங்கையின் விடுதலைக்குப் பின்பு ஆட்சி செய்த இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன எவ்விதமான கொள்கைகளை பின்பற்றின என்பதுடன் இவைகளினால் எவ்வாறு இனமோதலுக்கான அடித்தளம் இடப்பட்டது என்பது தொடர்பாக இதில் ஆராயப்பட்டுள்ளது.

இதன் மீதான கட்சிகளின் தாக்கத்தினை நோக்கும் போது முதலில் 1943 ஜனவரி மாதத்தில் ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசாங்க சபைக்கு சிங்கள மொழி தனிச்சட்டம் தொடர்பான முன்மொழிவினை முன்வைத்தார். இதில் சிங்களம் அரச கரும, நிர்வாக, கல்வி மொழியாக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் அரசாங்க பாடசாலைகளில் கல்வி மொழியாக தமிழ் மொழி மற்றும் சுதேச மொழிகளால் போதிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்து. இதற்கு ஆதரவாக சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா, வீ. நல்லையன், டி. பி. ஜாயா போன்றோர் ஆதரவான கருத்துக்களை தெரிவித்தார்கள். ஜே.ஆர். ஜெயவர்தன இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மொழி உத்தியோகப்பூர்வ மொழியாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். எனினும், சிங்கள மொழி அழிந்து போகக்கூடிய மொழி என்ற ரீதியில் அதற்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார். இவ்வாறு அரசியல் ரீதியாக ஒன்றுதிரட்டி செயற்படுத்துவதற்கு சிங்கள மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இதன் பின்பு அரசியல் வாதிகள் தமது சுய நலன்களுக்காக மொழியை உபயோகிக்க முற்பட்டனர்.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா

பண்டார நாயக்காவின் சிங்களம் மட்டும்

தனிச் சிங்கள மொழியை எடுத்துக் கொண்டால் அனைத்து மக்களுடைய ஞாபத்துக்கு வரும் விடயம் 1956 ஆம் ஆண்டு எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவினால் கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் என்ற சட்டமே ஆகும். இச்சட்டத்திற்கு முன்னர் நாட்டின் நீதிமன்ற மொழியாக, தந்திச் செயன்முறைகளிலும் ஆங்கில மொழியே உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தப்பட்டது. பாராளுமன்ற விவாதங்கள் கூட ஆங்கில மொழியில் நடத்தப்பட்ட போது தமிழ் அல்லது சிங்களத்தில் உரையாற்ற சபாநாயகரின் விசேட அனுமதியை பெறவேண்டி இருந்தது.

இவைகளை இல்லாமற் செய்யவும் தனது தேர்தலில் கீழ்மட்ட கிராமப்புற சிங்கள மக்களின் ஆதரவினை பெற்றுக்கொள்ளவூம் தாம் பதவிக்கு வந்தால் சிங்களத்தை 24 மணிநேரத்திற்குள் நாட்டின் தேசிய மொழியாக பிரகடனப்படுத்துவதாக பண்டாரநாயக்க 1954 தேர்தல் பிரசாரங்களின் போது குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தான் இக்கொள்கையை ஆரம்பத்தில் முன்வைத்தாலும், ஜே.ஆர் ஜயவர்தனாவும் அற்கு முன்னரே தனிச்சிங்கம் மட்டும் என்ற கொள்கையினை உடையவராக காணப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோன்று, 1954, 1955களில் ஐக்கிய தேசியக் கட்சி தலைவரும் பிரதமருமான சேர் ஜோன் கொத்தலாவலயும் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கு முக்கிய அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என அவருடைய யாழ்ப்பாண விஜயத்தின் போது குறிப்பிட்டார். எனினும், இவருடைய இக்கொள்கைக்கு பௌத்த குருமார்கள், சிங்கள தேசிய வாதிகள் ஆகியோரின் எதிர்ப்பு காண்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பண்டாரநாயக்க முயற்சி செய்தார். இதனால், அவருடைய தேர்தல் கொள்கை உள்நாட்டு பௌத்த தேசியவாதத்தை மையமாக கொண்டதாக காணப்பட்டது. விசேடமாக பௌத்த பிக்குகள், ஆசிரியர்கள், சுதேச வைத்தியர்கள், விவசாயிகள் மற்றும் நகர்புற தொழிலாளர் என்ற ஐம்பெரும் பிரிவினரை உள்ளடக்கி, ஐம்பெரும் சக்திகளை கொண்ட தாரகை மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.

1955 ஆம் ஆண்டு டிசம்பர் தேர்தலுக்கு முன்னரே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது கொள்கையின் சிங்களம் மட்டும் என்பதனை ஏற்றுக் கொண்டதுடன் ஐக்கிய தேசியக் கட்சியூடன் இணைந்த முஸ்லிம்களும் குறிப்பாக முஸ்லிம் லீக், அகில இலங்கை சோனகர் இயக்கம் என்பன இதனை ஒத்த வகையில் சிங்களம் மட்டும் என்பதனை ஏற்றுக் கொண்டிருந்தது. எனினும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இது தொடர்பாக எதிர்ப்புக்கள் காணப்பட்டன.

1956 தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவாக சிங்கள தேசியவாதக் கட்சியான மக்கள் ஐக்கிய முன்னணியின் ஆதரவூ பண்டாரநாயக்காவூக்கு கிடைத்தது. அத்துடன் 1956ஆம் ஆண்டானது புத்த பெருமானின் 2500ஆம் ஆண்டு ஜனன தினமாகவூம் (புத்த ஜயன்தி) காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதனால், சிங்கள பௌத்த பிக்குகளின் ஆதரவினை பண்டாரநாயக்க பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளின் ஒன்றாகவே தனிச்சிங்கள மொழி என்பது காணப்பட்டது எனலாம். அத்துடன், இத்தேர்தல் பிரசாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாத்திரமன்றி ஐக்கிய தேசியக் கட்சியூம் தாம் தேர்தலில் வெற்றி பெற்றால் சிங்களம் உத்தியோக பூர்வ மொழியாக்க வேண்டும் என்று உறுதியளித்தனர். ஆகவே பண்டாரநாயக்க சிங்கள மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்குவதற்கு முந்திக் கொண்டதில் ஆச்சரியமில்லை.

எனவே தமது சுய அரசியல் இலாபத்திற்காக எந்தவொரு சமூகத்தை பாதித்தாலும் அதனை முந்திக் கொண்டு செயற்படுத்துகின்ற போக்கு அரசியல் கட்சிகளிடம் காணப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் பெரும்பான்மை சிங்கள இனத்தவரின் வாக்குகளை மையமாக கொண்டு மற்றுமொரு சிறுபான்மையினமாகிய தமிழ் சிறுபான்மை இனத்தவர்களது உரிமைகளை மறுக்கின்றமையையூம் அவதானிக்கலாம். இவ்வாறு, கட்சிகள் செயற்படுவதன் மூலம் இரு பிரதான விடயங்கள் தெளிவாகின்றன. அதாவது தேர்தலில் வெற்றி பெறுதல் மற்றும் இனவாதம் என்பனவாகும். பண்டாரநாயக்கா நாடுபூராகவூம் சிங்கள மக்களது ஆதரவினை பெற்று வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து இவருடைய வாக்குறுதிப்படி 1956 ஜூலை 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் சிங்களம் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக ஆக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியூம் வாக்களித்தது. இதன் பிரகாரம் முழு நாட்டினதும் நிருவாக, நீதி மொழியாக சிங்களம் ஆக்கப்பட்டது. இதனை தமிழ் மக்கள் எதிர்த்தனர். இதற்கு எதிராக சமஷ்டி கட்சி பல எதிர்ப்பு ஊர்வலங்கைளை நடாத்தியது.

இந்த தமிழ் மொழி சிங்கள சட்டத்திற்கு எதிராக சத்தியாக்கிரக நடவடிக்கைகளை சமஷ்டி கட்சியினர் வடக்கு மற்றும் கிழக்கில் மேற்கொண்டனர். வடக்கு, கிழக்கிலிருந்து கொழும்பு நோக்கிய இந்த சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட போது, இதனை தடுப்பதற்காக சிங்கள மொழி பாதுகாப்புச் சபை தலைவர் எல்.எச் மேதானந்தா போன்ற நாட்டின் உயர் மதிப்பை பெற்றோரும் அமைச்சரான கே.பி.எம் ராஜரத்தின ஆகியோர் 1956 ஜூன் ஐந்தாம் திகதி காலி முகத்திடலில் நடந்த சத்தியாக்கிரக போராட்டத்தினை வன்முறைக் கொண்டு தடுத்தனர். இதில் அமைச்சர் ராஜரத்னாவின் ஆதரவாளர்களால் தமிழர்கள் தாக்கப்பட்டனர். இவ்வன்முறையில் பல தமிழர்கள் தாக்கப்பட்டதுடன் சில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருந்த போதிலும், பண்டாரநாயக்கா தான் பலம் உள்ளவர் என்பதனை எடுத்துக்காட்டுவதற்காக இவ்வாறான பல எதிர்ப்புக்கள் மத்தியிலும், 1956 ஜூலை 6 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளின் உதவியூடன் பாராளுமன்றத்தில் சட்டமாக்கியது. இதன் பிறகு மேலும் பல கலவரங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்டது. இதனை இராணுவம், பொலிஸ் கொண்டு அரசாங்கம் தடுத்தது. இதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இனத்துவ ரீதியாக கூட்டுச் சேர்ந்து செயற்படும் அதேவேளை, சிங்கள மக்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுவதிலும் ஈடுபட்டனர்.

பண்டா – செல்வா ஒப்பந்தம்

இவ்வாறு தமிழ் மக்களின் போராட்டம் தொடரும் வேளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள பண்டாரநாயக்கா இணங்கினார். இதனால் சமஷ்டிக் கட்சி தலைவர் எஸ்.ஜே.வி செல்வநாயகத்துடன் பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்தி 1956 ஜூலை 26ஆம் திகதி பண்டா – செல்வா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இவ் ஒப்பந்தத்தில் தமிழ் மொழிக்குரிய அந்தஸ்த்தும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு உரிய அதிகாரப் பண்முகவாக்கம் மேற்கொள்ளப்படுவதற்கான ஏற்பாடுகள் குறிப்பிடப்பட்டிருந்தன. இவ்வூடன்படிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்ததுடன், பண்டாரநாயக்காவூக்கு ஆதரவூ வழங்கிய பௌத்த பிக்குகள் கடுமையாக எதிர்த்தனர். பத்தேகம விமலவம்ச தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் பண்டாரநாயக்காவின் வீட்டுக்கு முன்னாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.

ஜே.ஆர் ஜயவர்த்தன

ஜே.ஆர் ஜயவர்த்தன கண்டி பாதை யாத்திரை

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே.ஆர் ஜயவர்த்தன கண்டி பாதை யாத்திரையை மேற்கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமை பதவியை எதிர்பார்க்கும் ஜே.ஆர் ஜயவர்தன பண்டா – செல்வா ஓப்பந்தத்திற்கு எதிராக இவ்விதம் கண்டியில் இருந்து கொழும்புக்கான யாத்திரையினை மேற்கொண்டமையானது, கட்சிக்குள் காணப்பட்ட தலைமை பதவிக்கான போட்டியாகவூம் கட்சிகளுக்கு இடையே சதிகளை ஏற்படுத்தும் ஒன்றாகவூம் செயற்படுத்தப்பட்டது. இவ்வாறான எதிர்ப்புக்ள் காரணமாக இவ் ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது.

மொழி என்பது எழுத்து வடிவமாக பிரயோகிக்கப்பட்ட மற்றுமொரு பிரச்சினையாக “ஸ்ரீ” எழுத்து பிரச்சினையை குறிப்பிடலாம். 1958 ஏப்ரல், மார்ச் மாதங்களில் இலங்கை போக்குவரத்து சபை, தமக்கு சொந்தமான பஸ் வண்டிகளில் சிங்கள ஸ்ரீ எழுத்தை பொதித்து, வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்ட போது அதற்கு எதிராக தமிழ் மக்கள் கிளர்ந்து எழுந்ததுடன், அச்சிங்கள எழுத்துக்கு பதிலாக தமிழ் ஸ்ரீ எழுத்தை பொதித்தனர். இதற்கு பதிலடியாக கொழும்பிலுள்ள தமிழ் வீடுகளில், கடைகளில் சிங்களவர்களால் ஸ்ரீ எழுத்து எழுதப்பட்டன. இதனால் 1958இல் மீண்டும்; கலவரம் ஏற்பட்டதுடன் இக்கலவரத்திலிருந்து இத்தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் தவறியது. இங்கு ஏற்பட்ட கலவரங்களினால் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்;டமையினை இட்டு, பண்டாரநாயக்கா கவலைப்பட்டதுடன் தேசிய விடுதலை முன்னணியூம் தடை செய்யப்பட்டது. 1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ் மொழி விசேட சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை சகித்துக் கொள்ள முடியாத பௌத்த பிக்கு ஒருவரினால் 1959 செப்டம்பர் 29ஆம் திகதி பண்டாரநாயக்கா கொலை செய்யப்பட்டார்.

இதன் பின்பு 1960 ஜூன் தேர்தலில் வெற்றியீட்டிய சிறிமாவோ பண்டாரநாயக்க நாடுபூராகவூம் நீதிமன்ற மொழியாக சிங்கள மொழி சட்டத்தினை அமுல்ப்படுத்தினார். இதன்மூலம் மீண்டும் ஒரு முறை சமஷ்டி கட்சியினர் பாரியளவில் ஆர்ப்பாட்டங்களை, சத்தியாகிரகங்களை ஏற்படுத்தினர். எனினும் நாட்டில் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டு இராணுவத்தைக் கொண்டு இவ் எதிர்ப்பு நடவடிக்கைகள் தடுக்கப்பட்டன.

1972,1978 ஆம் ஆண்டு யாப்பில் இலங்கையின் மொழிக் கொள்கை

1972ஆம் ஆண்டு யாப்பின் மூலம் உத்தியோகபூர்வமாக இலங்கையின் மொழிக் கொள்கை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி அரசியல் யாப்பின் மூலம் சிங்கள மொழி நாட்டின் உத்தியோக பூர்வ மொழியாக ஆக்கப்பட்டது. தொடர்ந்து 1978 ஆம் ஆண்டு யாப்பில் அத்தியாயம் 4, உறுப்புரை 18 இல் இலங்கையின் அரச கரும மொழி சிங்களமாக வேண்டும் என்பதுடன்இ உறுப்புரை 19 இல் இலங்கையின் தேசிய மொழியாக சிங்களமும் தமிழும் காணப்படுகின்றது எனவூம் குறிப்பிடப்பட்டுள்ளது. 21(1) உறுப்புரையில் அரச கரும மொழியே இலங்கையின் நிருவாக மொழியாதல் வேண்டும் எனவூம் குறிப்பிடப்பட்டுள்ளது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.