இறப்புச் சான்றிதழ்

இந்தியாவில் தமிழ்நாட்டில் வசிக்கும் ஒருவர் இறந்து விட்டதாக அரசு அமைப்புகள் அளிக்கும் சான்றிதழ்களில் ஒன்று இறப்புச் சான்றிதழ். இந்த இறப்புச் சான்றிதழ் இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்குக் கிடைக்க வேண்டிய அரசு சலுகைகள், இறந்தவர் உடைமைகளைப் பெறுதல் போன்ற அவசியத் தேவைகளுக்கு உதவும் சான்றிதழ்களில் ஒன்றாக உள்ளது.

இறப்புப் பதிவு

ஒருவர் இறந்து போகும் நிலையில் அவரது குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் அவருடைய இறப்பு குறித்தத் தகவலை, இறப்பு நடைபெற்ற இடத்திலுள்ள ஊர் உள்ளாட்சி அமைப்பில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி நிலையைப் பெற்றிருந்தால் அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளலாம். ஊராட்சி நிலையிலிருக்கும் ஊர்களில் வருவாய்த்துறையின் கீழான கிராம நிர்வாக அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இறப்பைப் பதிவு செய்ய இறப்பு இயற்கையான ஒன்றாக இருந்தால் உரிய படிவத்தில் சாதாரணமாத் தகவல் அளித்தும், நோய் மற்றும் விபத்து போன்றவைகளால் ஏற்பட்ட இறப்பாக இருந்தால் அந்த இறப்பை உறுதி செய்யும் மருத்துவச் சான்றுகளுடன் அளித்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்தப் படிவத்தில் கூறப்பட்ட இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அந்த இறப்பு பதிவு செய்யப்படுகிறது. இந்த இறப்பு பதிவிற்கு இறந்த நாளிலிருந்து 15 நாட்கள் வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. 15 நாட்களுக்கு மிகுதியான நாட்கள் ஆகும் நிலையில் இறப்பு குறித்த படிவத்துடன் கூடுதல் சான்றுகள் இணைக்கப்பட வேண்டும். ஒரு வருடத்திற்கு மிகும் நிலையில் இறப்பைப் பதிவு செய்ய நீதிமன்றத்தின் வழியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உள்ளாட்சி அலுவலகங்களிலும், கிராம நிர்வாக அலுவலகங்களிலும் இந்த இறப்புச் சான்றிதழை அதற்கான கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பித்துப் பெறலாம்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.