இராஜகேசரி பெருவழி

இராசகேசரி பெருவழி என்பது பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய ஒரு தமிழகப் பெருவழியாகும்.[1][2] தற்காலத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் இருப்பதைப் போல பழங்காலத்தில் வணிகம், போக்குவரத்து, படையெடுப்பு உள்ளிட்ட பயன்பாட்டுகளுக்காக மன்னர்கள் பெருவழிகளை அமைத்தார்கள். அப்படி அமைக்கப்பட்டதில் கொங்கு மண்டலத்தில் மட்டும் ராஜகேசரி பெருவழி, அசுர மலைப் பெருவழி, சோழமாதேவி பெருவழி, அதியமான் பெருவழி உள்ளிட்ட இருபது பெருவழிகள் இருந்ததாக வரலாறு சொல்கிறது. ஆனால் இப்போது இவற்றில் ஒன்றுகூட பயன்பாட்டில் இல்லை.

இராசகேசரி பெருவழியானது கோவையில் உள்ள மதுக்கரை மலைக்காட்டு மலைச் சரிவின் வழியாக பேரூர் செட்டிபாளையத்திலிருந்து, சுண்டக்காமுத்தூர், அறிவொளி நகர் வழியாக அய்யாசாமி மலைகளை கடந்து எட்டிமடை, மாவூத்தம்பதி சென்று வாளையாறு, பாலக்காடு வழியாகச் சென்றுள்ளது, இது சோழ நாட்டையும், சேர நாட்டையும் இணைக்கும் முக்கிய வழித்தடமாக, மேற்குக் கடற்கரையையும் பூம்புகாரையும் இணைக்கும் விதத்தில் இருந்துள்ளது. இந்தப் பெருவழி வழியாகவே ரோமானியரும், கிரேக்கர்களும் தமிழகத்தில் வாணிபத் தொடர்புகள் வைத்திருந்தார்கள். ராஜகேசரி பெருவழியானது கி.பி 871 - 907 கால கட்டத்தில் ஆதித்த சோழன் காலத்தில் முப்பது அடி அகலத்துக்கு செப்பனிடப்பட்டதாக கல்வெட்டுத் தகவல் உள்ளது. [3]

மேற்கோள்கள்

  1. "சோழர்களின் நீர் மேலாண்மையும், நதி நீர் இணைப்பு திட்டமும்...!". கட்டுரை. விகடன். பார்த்த நாள் 16 சூன் 2017.
  2. "கருவூலம்: கோயம்புத்தூர் மாவட்டம்!". கட்டுரை. தினமணி. பார்த்த நாள் 16 சூன் 2017.
  3. கா.சு.வேலாயுதன் (2017 சூன் 16). "தூர்ந்து கிடக்கும் ராஜகேசரி பெருவழி". செய்திக் கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 16 சூன் 2017.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.