இரவில் வந்த நண்பன் உவமை

இரவில் வந்த நண்பன் இயேசு கூறிய உவமான கதையாகும். இது லூக்கா நற்செய்தி லூக்கா 11:5-13இல் எழுதப்பட்டுள்ளது. மத்தேயு 7:9–11 இல் இக்கதையோடு ஒப்பிடக்கூடிய ஒரு வசனம் காணப்படுகிறது.

உவமை

ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு, என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை என்றான். அதற்கு உள்ளே இருப்பவர், எனக்குத் தொல்லை கொடுக்காதே. ஏற்கனவே கதவு பூட்டியாயிற்று. என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது என்றார். எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்ததால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுத்தார்.

பின்னுரை

பின்னர் இயேசு இவ்வுவமையுடன் கூட இன்னுமொரு சிறிய உவமையைக் கூறி மேலுள்ள உவமையை தெளிவாக்குகிறார். இயேசு மக்களை நோக்கி: பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி என்றார்.

பொருள்

இயேசுவின் காலத்தில் யூதாவில் காணப்பட்ட வீடுகளில் இரவில் உறங்கும்போது முன்கதவை மூடி அதன் பின்னால் உறங்குவது வழக்கமாகும். ஆகவே இரவில் யாரும் கதவைத் திறக்க வேண்டுமாயின் எல்லோரும் தூக்கம் விட்டு எழ வேண்டும். இது இந்த கதையை விளங்குவதற்கு முக்கியமான ஒரு பின்னணியாகும்.

இவ்வுவமை இடைவிடாத செபத்தை வலியுறுத்துகிறது. இதன் பின்னுரை உவமையின் பொருளை விளக்குகிறது. இதன் மைய நோக்காக பின்வரும் இயேசுவின் வாய்மொழியைக் குறிப்பிடலாம்.

கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள். உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர். தேடுவோர் கண்டடைகின்றனர். தட்டுவோருக்குத் திறக்கப்படும்.

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணைகள்

வெளியிணப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.