இன ஒப்பாய்வியல்

இன ஒப்பாய்வியல் (Ethnology) என்பது மானிடவியல் ஆய்வுமுறைகளில் ஒன்றாகும். இது வெவ்வேறு சமூகத்தவரின் நாட்டார் வழக்காறுகள், நம்பிக்கைகள், செயற்பாடுகள் என்பவை பற்றிய முறையான ஒப்பீட்டு ஆய்வு ஆகும். இது, இனம் நாட்டினம் ஆகியவை சார்ந்த மனிதப் பிரிவுகளின் தோற்றம், பரவல், தொழில்நுட்பம், மதம், மொழி, சமுதாய அமைப்புப் போன்றவற்றை ஒப்பிட்டுப் பகுப்பாய்வு செய்கின்றது.[1]

அறிவியல் துறை

குறித்த ஒரு பண்பாட்டுக் குழுவுடன் நேரடியான தொடர்புகொண்டு அந்த ஒரு குழுவைப்பற்றி ஆய்வு செய்வது இனவரைவியல் எனப்படுகிறது. இன ஒப்பாய்வியலின் நோக்கம், இவ்வாறு இனவரைவியலாளர்கள் பல்வேறு இனக்குழுக்களைப் பற்றித் தொகுத்த தகவல்களை ஒப்பிட்டு வேறுபடுத்திப் பார்ப்பது ஆகும். மனித வரலாற்றை மீட்டுருவாக்கல், இன ஒப்பாய்வியலின், பண்பாடுகளின் பொது அம்சங்களைக் கண்டறிதல், "மனித இயற்கை" தொடர்பில் பொதுமையாக்கங்களை உருவாக்குதல், என்பவற்றையும் இன ஒப்பாய்வியல் நோக்கமாகக் கொண்டுள்ளது. சில நாடுகளில் இன ஒப்பாய்வியல், வெவ்வேறான ஆய்வு முறைகளையும் கற்பித்தல் முறைகளையும் கொண்டு வளர்ச்சியுற்றது. ஐக்கிய அமெரிக்காவில் பண்பாட்டு மானிடவியலும், ஐக்கிய இராச்சியத்தில் சமூக மானிடவியலும் முதன்மைநிலைகளைப் பெற்றன. காலப்போக்கில் இம் மூன்று சொற்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் தெளிவற்றவை ஆகிவிட்டன. சிறப்பாக ஐரோப்பாவில், 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து இன ஒப்பாய்வியல் ஒரு தனியான கல்வித்துறையாகக் கருதப்பட்டு வருகிறது.

குறிப்புகள்

  1. Newman, Garfield, et al. (2001). Echoes from the past: world history to the 16th century. Toronto: McGraw-Hill Ryerson Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-07-088739-X.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.