இதய நிறுத்தம்

இதய நிறுத்தம் என்பது இதயத்தின் சுருங்கி விரியும் தொழிற்பாடு திடீரெனத் தடைப்பட்டு குருதிச்சுற்றோட்டம் நிறுத்தப்படுவது ஆகும்.[1] இதய நிறுத்தத்திற்குரிய காரணிகளுள் முக்கியமானது கீழ் இதயவறைக் குறுநடுக்கம் (ventricular fibrillation) ஆகும்.[2]

இதய நிறுத்தம்
இதய நிறுத்தத்தின் போது இதயச்சுவாச மீளவுயிர்ப்பிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஇதயவியல், அவசர மருத்துவம்
ஐ.சி.டி.-10I46.
ஐ.சி.டி.-9427.5
MeSHD006323

இதய நிறுத்தம் மாரடைப்பில் இருந்து வேறுபட்டது; மாரடைப்பு என்பது இதயத்தசைக்குச் செல்லும் குருதி வழங்கல் (விநியோகம்) தடைபடுவதால் ஏற்படுவது. மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு கீழ் இதயவறைக் குறுநடுக்கம் தோன்றி இதய நிறுத்தம் ஏற்படலாம்.

சுற்றோட்டம் நிறுத்தப்படுவதால் உடலெங்கும் ஆக்சிசன் (ஒட்சிசன்), ஊட்டச்சத்துகள் கொண்டு செல்லப்படுவது தடைபடுகின்றது. மூளைக்கு குருதியோட்டம் தடைபடுவதால் நினைவிழப்பு ஏற்படுகின்றது, அத்துடன் மூச்சுவிடுவதிலும் (சுவாசிப்பதிலும்) சிக்கல் ஏற்படுகின்றது. இதய நிறுத்தம் ஏற்பட்டு ஐந்து நிமிடங்களாக சிகிச்சை இல்லாதவிடத்து ஆக்சிசன் இல்லாத காரணத்தால் மூளை இறக்கின்றது (செயலிழந்து இறந்துவிடுகின்றது); உயிரிய இறப்பு உண்டாகின்றது. இக்காரணங்களால் உயிர் பிழைப்பதற்கு உடனடிச் சிகிச்சை இன்றியமையாதது.

இதய நிறுத்தம் ஒரு மருத்துவ நெருக்கடி நிகழ்வு, தொடக்கவேளையிலேயே உரிய சிகிச்சை வழங்கப்படின் இதயம் பழைய நிலைக்கு மீளும், அன்றேல் இதய இறப்பு நிகழும் தீங்கு உண்டு. சிலவேளைகளில் திடீரென நிகழும் இதய நிறுத்தத்தால் இதயம் முற்றிலும் தன் தொழிற்பாட்டை இழக்கும் சூழல்கள் உண்டு, இது திடீர் இதய இறப்பு எனப்படும், இத்தகைய நேரத்தில் இதயம் பழைய நிலைக்கு மீளமாட்டாது.

இதய நிறுத்தத்துக்குரிய சிகிச்சையின் நோக்கம் இதயத்தை மீளத் துடிக்கவைத்து, குருதிச் சுற்றோட்டத்தைச் சீர் செய்தல், மூச்சுவிடுதலை மீளக் கொணருதல் ஆகும். இதற்கு இதய-மூச்சு மீளுயிர்விப்பு (cardiopulmonary resuscitation) வழங்கப்படுகின்றது, தேவையேற்படின் குறுநடுக்க அகற்றலும் (defibrillation ) செய்யப்படுகின்றது.

உசாத்துணைகள்

  1. Jameson, J. N. St C.; Dennis L. Kasper; Harrison, Tinsley Randolph; Braunwald, Eugene; Fauci, Anthony S.; Hauser, Stephen L; Longo, Dan L. (2005). Harrison's principles of internal medicine. New York: McGraw-Hill Medical Publishing Division. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-07-140235-7.
  2. "Sudden Cardiac Arrest Causes". பார்த்த நாள் July 2, 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.