இணையக் கழகம்

இணையக் கழகம் (Internet Society (ISoc)), இணையம் தொடர்பான செந்தரங்கள், கொள்கை, கல்வியில் தலைமைத்துவம் வழங்குவதற்காக 1992 ஆம் ஆண்டு வின்டு செர்ப்பும் பாபு கானும் நிறுவிய பன்னாட்டு இலாப நோக்கற்ற அமைப்பு ஆகும். "உலகில் உள்ள அனைவரின் நலன் கருதி, இணையத்தின் பயன்பாடு, கூர்ப்பு, திறந்த மேம்பாட்டை முன்னிறுத்துவதே" தங்கள் நோக்கம் என்று இணையக் கழகம் குறிப்பிடுகிறது". இணையக் கழகத்தின் தலைமையகம் ஐக்கிய அமெரிக்காவின் வெர்சீனியா மாகாணத்தில் இரெசுட்டன் நகரில் அமைந்துள்ளது. அதன் அலுவலகங்கள் சுவிட்சர்லாந்தின் செனீவாவில் அமைந்துள்ளன. இந்த அமைப்பில் 130க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் 55,000க்கும் மேற்பட்ட தனிநபர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்கள் புவிவட்டாரத்தைப் பொருத்தும் சிறப்பு ஈடுபாடுகளைப் பொருத்தும் கிளைகளை நிறுவலாம். உலகெங்கும் இவ்வாறான 90 க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. 2012ஆம் ஆண்டு, இணையக் கழகத்தின் இருபதாம் ஆண்டு நிறைவை ஒட்டி, "உலகளாவிய இணையத்தின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்காகப் பங்களித்த தொலைநோக்காளர்கள், தலைவர்கள், புகழ்பெற்றவர்களைப் பொதுவில் சிறப்பிக்கும் பொருட்டு" இணையப் புகழ்மண்டபத்தை உருவாக்கினார்கள்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.