இணைய நெறிமுறை

இணைய நெறிமுறை (இ.நெறி) (Internet Protocol - IP) பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இணைய செயல்பாட்டு புரிந்துணர்வு நெறிமுறைகள் ஆகும். கணினி இணையங்களின் இணைந்த செயல்பாடுகளை இலகுவாக்குவதே இவ்விதிமுறைகளின் நோக்கமாகும். தமிழில் இணைய விதிமுறைகளை இணைய நெறிமுறைகள் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு.

இணைய விதிமுறைகள் நான்கு பின்வரும் அம்சங்களை வரையறை செய்கின்றன.

  • அடுக்கு உருவரை
  • முகவரியிடல் விதிமுறைகள்
  • முகவரி கண்டறி விதிமுறைகள்
  • துண்டங்கள் அல்லது பொதிகள் உருவரை

இணைய விதிமுறைகள் பொதுவாக மென்பொருள் சார்ந்த விதிமுறைகள்தான். பருநிலை சார்ந்த விதிமுறைகள் இவற்றுள் அடங்காது.

தரவுப் பரிமாற்றமும் ஐப்பி முகவரியும்

உலகெங்கும் உள்ள கணினிகளை இணைக்கும் வலையாகிய இணையத்தின் செயலாற்றலுக்கு முக்கியமான ஒரு நுட்பம் ஐப்'தடித்த எழுத்துக்கள்'பி எனப்படும் இணைய நெறிமுறை. ஐப்பி என்பது Internet Protocol என்பதன் சுருக்கமான IP என்பதே. TCP/IP என்பதன் ஒரு அங்கம். இது இணையத்தில் உள்ள கணினிகளுக்குள்ளான தரவுப் பரிமாற்றத்திற்கான (data transfer) பொதுவில் ஏற்படுத்தப்பட்ட ஒரு தரம் (standard). தரவுகளை எங்கு அனுப்புவது, எப்படி அனுப்புவது, என்பது போன்றவற்றிற்கான ஒரு வகை ஒப்பந்தம். இன்றைய இணையச் செயல்பாட்டிற்கு அடிப்படையான ஒரு நுட்பம்.

உதாரணத்திற்கு நம்முடைய அன்றாடப் பாவனையில் இருக்கும் இணைய உலாவியோ, மின்னஞ்சலோ, அரட்டையரங்குகளோ, இப்படி எந்த ஒரு சேவையாக இருந்தாலும், அவையனைத்திலும் ஆழத்தில் இருப்பது தரவுப் பரிமாற்றம். ஒருவர் அனுப்புகிற செய்தி, அஞ்சல், பதிவு, படம், பாட்டு, ஒலிக்கோப்பு, ஒளிக்கோப்பு, எதுவாக இருந்தாலும் அவரின் கணினிக்கும் பிறிதோர் கணினிக்கும் இடையே அந்தத் தரவுகள் செல்ல வேண்டும். அப்படிச் செல்ல வேண்டுமாயின் ஒவ்வொரு கணினிக்கும் தனித்து இனங்காட்டும் ஒரு அடையாளம் வேண்டும். அந்த முகவரியை நிர்ணயிப்பதும், தரவுகளை எப்படிச் சிறு சிறு பொட்டலங்களாகப் பிரித்து வரிசைப்படுத்தி அனுப்புவது, கிடைத்த தரவுப் பொட்டலங்களை மீண்டும் சேர்த்து மூல ஆவணத்தை எப்படி மீட்டெடுப்பது போன்ற நடைமுறைகளை விவரிப்பது இந்த வரையறை. அதனால், இதனை ஒரு நடைவரை (Protocol) என்றும் கூறுவர்.

இணைய நடைவரை முகவரி

நிகழ் உலகில் நாம் இருக்கிற வீடு அலுவம் இவற்றிற்கெல்லாம் அடையாளப்படுத்தும் முகவரி இருப்பது போல, இணையத்தில் ஒரு வலைப்பின்னலாய்க் கிடக்கிற கணினிகளுக்கும் ஒரு முகவரி அவசியமாகிறது. அப்படிப் பட்ட முகவரியைத் தான் இந்த இணைய நடைவரை (Internet protocol) விவரிக்கிறது. கணினிகளுக்கு எண்களே புரியும் என்பதால், இந்த முகவரியானது வெறும் எண்களால் மட்டுமே ஆனது.

ஐ.பி, இந்தக் கணினியின் வலை முகவரியை (புள்ளிகளால் பிரிக்கப்பட்ட) நான்கு எண்களால் குறிக்கிறது. உதாரணத்திற்கு 216.24.72.101. இதில் இருக்கிற ஒவ்வொரு எண்ணும் கணிப்பேச்சில் சொன்னால் ‘எட்டும எண்’ (எட்டு பிட் அளவு) எனலாம். எளிமையாகச் சொன்னால், இந்த எண்கள் ஒவ்வொன்றிற்கும் உயரெல்லை மதிப்பு = 255. உலகெங்கும் இருக்கிற (இணையத்தில் இணைந்த) கணினிகளில் ஒரே எண் தொகுப்பை இரண்டு கணினிகள் கொண்டிரா. இவ்வாறு இம்முகவரிகள் தனித்துவமாய் இருப்பதைச் சில சர்வதேச அமைப்புக்கள் பார்த்துக் கொள்கின்றன.

இந்த எண்களின் வீச்சை வைத்து வலையமைப்பு Class A, Class B, Class C என்று மூன்று வகுப்புக்களாக வகைப்படும். இணையத்தில் சேராத தனிவலைகளுக்கென்று ஒரு எண் சாரை இருக்கிறது. எந்த ஒரு தரவுப் பரிமாற்றத்தின் போதும், இந்த நடைவரை முகவரி எண் கலந்தே செல்லும். உதாரணத்திற்கு உலாவி வழியாய் எந்த ஒரு வலைமுகவரிக்குச் சென்றாலும், அங்கே ஐ.பி எண் உடன் செல்லும். ஐ.பி முகவரி இணையத்தில் இணைந்த கணினியையே சுட்டும். அது இருக்கும் இடத்தையே காட்டும். சில நிறுவனங்களில் இருக்கும் கணினிகள் எல்லாம் ஒரு வலையாக இருந்தாலும், அவை யாவும் நேரடியாக இணையத்தில் இணைந்திரா. சில வழிப்படுத்திகள் (routers) மூலம் மட்டுமே அவை இணையத்தை அடையும். அப்படி இருக்கையில் ஐ.பி முகவரி அந்த வழிப்படுத்திகளின் இருப்பிடத்தையே காட்டும்; அதன் பின்னிருக்கும் தனிக்கணினிகளை அல்ல.

மேலும் காண்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.