இடுப்பு வளையம்

மனித உடற்கூற்றியலில், இடுப்பு வளையம் (Pelvic girdle) அல்லது இடுப்பு (Pelvis) அல்லது இடுப்பாக்கு எலும்புகள் (Pelvic bones / Bony pelvis) எனப்படுவது உடம்பின் கீழ்ப்பகுதியாகவும், வயிற்றுக்குக் கீழாகவும், பின்பக்கமாகவும் அமைந்திருந்து, உடம்புப் பகுதியை கால்களுடன் இணைக்கும் பகுதியாகும்[1]. இந்த சொல்லானது பல அமைப்புக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது[1].

  • முள்ளந்தண்டு நிரல் பகுதியை, தொடையெலும்புடன் இணைக்கும் பகுதி.
  • இடுப்பு வளையத்தால் சூழப்பட்டிருக்கும் இடுப்புக்குழி: இது மேலும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
    • வயிற்றுக்குழியின் உள் பகுதி, இது பொய்யான இடுப்பு எனவும் அழைக்கப்படும்.
    • அடிவயிற்றுக்கும், மலவாசலுக்கும் இடைப்பட்ட பகுதியையும் (perineum), இடுப்புக்குழியையும் சூழ்ந்திருக்கும் உண்மையான இடுப்பெலும்பு.
  • இடுப்புப் பகுதி
எலும்பு: இடுப்பு வளையம்
பெண்ணின் இடுப்பு வளையம்
ஆணின் இடுப்பு வளையம்
Gray's subject #57 236

இடுப்பு வளையமானது உடலின் சமநிலையையும், உறுதிநிலையையும் பேணுவதில் முக்கிய பங்கெடுக்கும். இந்த இடுப்பு வளையமானது முள்ளந்தண்டு நிரலையும், தொடையெலும்பையும் இணைக்கும் எலும்புகளைக் கொண்டிருக்கும்.

இடுப்பு வளையத்தின் எலும்புகள்

மனிதரின் இடுப்பு வளையமானது வெவ்வேறு எலும்புகளின் தொகுதியாக உள்ளது. அவையாவன:

  • பின் பக்கம், முதுகுப்புறமாக, முள்ளந்தண்டு நிரலின் வால்ப்பகுதியில் திருவெலும்பும் (sacrum), குயிலலகெலும்பும் (coccyx) (வாலெலும்பும்) காணப்படும்.
  • இரு பக்கங்களிலும், முன்புறமாகவும் இடுப்பெலும்புகள் (hip bones) அமைந்திருக்கும். இந்த எலும்பானது ஆரம்பத்தில், பூப்படைவதற்கு முன்னர் புடைதாங்கி (ilium), நாரியம் (ischium), பூப்பென்பு (pubic bone) என்ற மூன்று எலும்புகளால் ஆக்கப்பட்டிருக்கும். பின்னர் முதிர்ச்சியடைகையில் மூன்றும் இணைந்து ஒரு தனியெலும்பாக மாற்றமடையும்.

இரு பக்கங்களிலுமுள்ள இடுப்பெலும்புகள் இரண்டும் முன்புறமாக ஒரு கசியிழையத்துடன் ஒட்டிக் காணப்படும். இடுப்பெலும்பின் ஒட்டும்பகுதி பூப்பென்புப் பகுதியாக இருப்பதனால் இந்தக் கசியிழையம் பூப்பென்பொட்டு (Pubic symphysis) என அழைக்கப்படுகின்றது. இடுப்பெலும்புகள் பின் புறமாகவும் திருவெலும்புடன் இணைந்திருப்பதனால், இந்த எலும்புகள் அனைத்தும் இணைந்து ஒரு முழுமையான வளையத்தை (Pelviv ring) உருவாக்கும். இதனால் இடுப்புப் பகுதியில் ஒரு வாயகன்ற, ஆழமற்ற கொள்கலன் (பாத்திரம்) வடிவில் இந்த இடுப்புப்பகுதி அமைந்திருக்கும். இங்கு ஏற்படும் குழி இடுப்புக்குழி எனப்படும்.

இடுப்பு வளையத்தின் இரு புறங்களிலும் இரு குழி போன்ற அமைப்புக்கள் காணப்படும். இவை தொடையெலும்பின் மூட்டு பொருந்துவதற்கான கிண்ணக்குழியாக இருக்கும். இதனால் இது இடுப்பெலும்பு கிண்ணக்குழி (Acetabulum) எனப்படும். மேலும் நாரியமும், பூப்பென்பும் தமது இரு முடிவுகளிலும் இணைவதனால், நடுவில் ஒரு துளையை உருவாக்கும். இந்தத் துளை நெருங்கற்குடையம் அல்லது இடுப்புக்குழி துளை (Obturator foramen) எனப்படும்.

இடுப்புக்குழி

மனிதரில் உள்ள உடற்குழிகளில் ஒன்றான இடுப்புக்குழியானது இடுப்பு வளைய எலும்புகளால் சூழப்பட்டிருக்கும் குழியாகும். இந்தக் குழிக்குள் இனப்பெருக்க உறுப்புகளும், சமிபாட்டுத் தொகுதியின் முடிவுப் பகுதியான மலவாசல் அல்லது குதம் என்ற பகுதியும் காணப்படும். இந்த உள்ளுறுப்புகளை, இடுப்பு வளையமானது இடுப்புக்குழியினுள் வைத்து பாதுகாப்பளிக்கும்.

படங்கள்

மேற்கோள்கள்

  1. Moore (1992), pp 357-358
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.