ஆடிக்கிருத்திகை

முருகனுக்கு திதிகளில் சஷ்டியும், கிழமைகளில் வெள்ளிக்கிழமையும், நக்ஷத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

ஆறு என்னும் எண்

முருகன் பிறந்தது விசாக நக்ஷத்திரம் என்று சொல்லப் பட்டாலும், அவனைப் பாலூட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை. கங்கையாகிய ஆறு தாங்கிய ஆறு அக்னிப் பொறிகள் மூலம் ஆறுமுகங்களோடு பிறந்த முருகன் ஆறு பெண்களால் வளர்க்கப் பட்டான். அவன் குழந்தையாய் வளர்ந்ததும், திருவிளையாடல்கள் புரிந்ததும் ஆறு நாட்களே என்று சொல்லப் படுகிறது. இப்படிச் சகலத்திலும் ஆறு என்னும் எண் முக்கியமாய் அமையப் பெற்ற முருகனுக்கான நாமம் “சரவணபவ” என்னும் ஆறெழுத்தே ஆகும். நம் உடலிலும் ஆறு ஆதாரங்களிலும் நிலை பெற்றிருப்பது இந்த முருகனே என்பதே அருணகிரியார் கூற்று.

விரதமுறைகள்

விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப் படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப் படுகிறது.

சிறப்பு

மழைக்காலத் தொடக்கமான தக்ஷிணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், உத்தராயனம் திருமணம், உபநயனம், கிரஹப் பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றதாகவும் சொல்லப் படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப் படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப் படுகிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.