ஆ. ச. தம்பையா
ஆர்தர் சரவணமுத்து தம்பையா (1924 - மே 11 ,2011) என்பவர் மிகவும் அறியப்பட்ட தோல் மருத்துவர். சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் 32 ஆண்டுகள் சேவையாற்றியவர். 1961 முதல் 1982 வரை 21 ஆண்டுகள் தோல் மருத்துவத் துறைத் தலைவராகப் பதவி வகித்துள்ளார். 60 ஆண்டுகள் தோல் மருத்துவத்திற்கு சேவை செய்துள்ளார்[1][2].
தம்பையாவின் பெற்றோர்கள் இருவரும் மருத்துவர்கள்[2]. அவர்களைப் பின்பற்றி மதராசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பட்டம் பெற்றார்.. தோல் மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பை முடித்து இலண்டன், கேம்பிரிட்ஜ் மற்றும் எடின்பரோவில் பயிற்சி பெற்றார். மீண்டும் தமது மருத்துவக் கல்லூரிக்கே வந்து தோல் மருத்துவப் பிரிவில் பணியாற்றினார். 1961ஆம் ஆண்டு இந்தத்துறையில் முதல் தொழில்முறைப் பதவி ஏற்படுத்தப்பட்டபோது தம்பையா அதன் முதல் பேராசிரியராக விளங்கினார்.
மருத்துவச் சேவைக்கு இடையூறாக இருக்கும் என்பதற்காகத் திருமணம் செய்யவில்லை. டாக்டர் கமலம் என்னும் மற்றொரு தோல் மருத்துவ நிபுணருடன் சேர்ந்து 160 சர்வதேசத் தோல் மருத்துவ ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார். இருவரும் சேர்ந்து கண்டுபிடித்த மூன்று பூஞ்சைக் காளான் நோய்க் கிருமிகள் அமெரிக்க அட்லாண்டாவில் உள்ள நோய்க் கிருமி வளர்ப்பு மையத்தில் இடம்பெற்றுள்ளன. இவர் டாக்டர் பி.சி.ராய் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.