அழுத்தி
அழுத்தி அல்லது அமுக்கி (compressor) என்பது வளிமம், ஆவி அல்லது இவ்விரண்டின் கலவையின் அழுத்தத்தை உயர்த்தும் எந்திரம் அமுக்க எந்திரம் என்றோ, அமுக்கி என்றோ, அழுத்தி என்றோ அழைக்கப் படுகிறது. அமுக்கியில் வளிமம் செல்லும்போது, அது வளிமத்தின் சுய பருமனைக் (specific volume) குறைத்து, அதற்கு அழுத்தத்தை ஊட்டுகிறது. மைய விலகு விசிறி, அச்சுவழிப் பாய்வு விசிறிகளோடு ஒப்பிடும்போது, இவ்வாறு செயற்படும் அமுக்கிகள் உயர் அழுத்த எந்திரங்கள் ஆக மாறுகின்றன. இதில் செயற்படும் எந்திர விசிறிகள், குறைந்த அழுத்த எந்திரங்கள் ஆக செயல் படுகின்றன.


பல தேவைகளுக்காக வளிமம், ஆவி ஆகியவற்றின் அழுத்தத்தை அதிகரிக்க, பல வகை அமுக்கிகள் பயன்படுத்தப் படுகின்றன.[1] இவை பொருள்களைச் சுமந்து செல்லவும், வண்ணப் பூச்சைத் தெளிக்கவும், வட்டைக்குக் (tyre) காற்றடிக்கவும், தூய்மை செய்யவும் பயனாகின்றன. அமுக்கிக் காற்றுக்கருவிகளை இயக்கிப் பாறைகளைத் துளைக்கவும் தேவையான உயரழுத்தக் காற்றைத் தருகின்றன. ஆவியாக்கக் கலனில் (evaporator) உருவாக்கப்பட்ட வளிமத்தைக் குளிர்பதனாக்க அமுக்கி அமுக்குகிறது. அமுக்கிகள் வேதியியல் செயல்முறைகள், வளிமச் செலுத்தம், வளிமச்சுழலிகள் ஆகியவற்றிலும் பிற கட்டுமானப் பணிகளிலும் பயன்படுகின்றன.
கோட்பாடு
சிறப்பியல்புகள். அமுக்கியின் இடப்பெயர்ச்சி (displacement) என்பது, ஓரலகு நேரத்தில் அமுக்கும் உறுப்பு இடம்பெயரச் செய்யும் பருமனாகும். இது ஒரு நிமிடத்தில் அமுக்கப்படும் பருமனடிகளால் (கன அடிகளால்) குறிப்பிடப்படும். அமுக்கப்படும் வளிமம் அடுத்தடுத்துப் பல அமுக்கும் உறுப்புகளுக்கு இடையே செலுத்தப்படும் போது, அமுக்கியின் இடப்பெயர்ச்சி முதல் உறுப்பினுடைய இடப் பெயர்ச்சிக்குக் சமமாகும். அமுக்கியின் கொள்ளளவு அல்லது கொண்மை (capacity) என்பது ஓரலகு நேரத்தில் நடைமுறையில் அமுக்கப்பட்டு, வெளியேற்றப்படும் வளிமப்பருமன் அளவைக் குறிப்பிடுகிறது. இது அமுக்கியின் நுழைவாய்ப் புறத்தில் உள்ள வளிமக் கலவை, மொத்த வெப்பநிலை, மொத்த அழுத்தம் ஆகிய நிலைமைகளின் கீழ், ஒரு நிமிடத்தில் வெளியேற்றப்படும் பருமன் அடிகளால் குறிப்பிடப்படுகிறது. இதன் கொள்ளளவு எப்போதும் நுழைவாய்ப் புற வளிமத்தாலோ, காற்றின் நிலைமைகளிலோ வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட செந்தர நிலைமைகளின் கீழ் குறிப்பிடப் படுவதில்லை.
காற்றழுத்திகள்
காற்றமுக்கிகளின்(Gas compressor) இடப்பெயர்ச்சி வளிமண்டலக் காற்று நிலைமைகளில் குறிப்பிடப்படும். வளிமண்டலக் காற்றுநிலை என்பது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் வளிமண்டலத்தில் உள்ள காற்றின் நிலைமையைக் குறிக்கிறது. ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு மாறும்போது, இவ்விடத்தின் உயரமும், அழுத்தமும் வெப்பநிலையும் மாறுவதால் கொள்ளளவு சீரான அல்லது செந்தர நிலைமையின் கீழ் குறிப்பிடவேண்டி தேவை ஏதும் இல்லை. செந்தரக்காற்று என்பது 68 °F 13.7 psig வளிமண்டல அழுத்தம், 36% சார்பு ஈரப்பதம் உள்ள காற்றாகும். வளிமத் தொழிலகங்கள் 60 °F வெப்பநிலைக் காற்றைச் செந்தரக் காற்றாகக் கொள்கின்றன. காற்றமுக்கிகள் பல இடங்களில் மிகப் பரவலாகப் பயன்படுகின்றன.[2]
அழுத்தியின் வகைகள்
அமுக்கத்தை/அழுத்தத்தை ஏற்படுத்தும் இயக்க முறைகளைப் பொறுத்து அமுக்கிகள் ஊடாட்ட, சுழல் தாரை, மையவிலகு, அச்சுப்பாய்வு அமுக்கிகள் என பலவகைப் படுத்தப்படுகின்றன. அமுக்கப்படும் வளிமத்தின்மேல் எந்திர உறுப்புகள் செயல்படும் முறையைப் பொறுத்து அமுக்கிகள் நேரிடப்பெயர்ச்சி (positive displacement) அல்லது இயங்குநிலை (dynamic) அமுக்கிகள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன. நேரிடப்பெயர்ச்சி அமுக்கிகளில் தொடர்ந்து பாயும் வளிமப்பருமன் ஒரு மூடிய கலனில் கட்டுப்படுத்தப்படுகின்றது. மூடிய கலனில் பருமன் குறையக் குறைய வளிமத்தின் அழுத்தம் உயர்ந்து கொண்டே போகும் இயங்குநிலை அமுக்கிகளில் சுழலும் இதழ்கள் (vanes) அல்லது வாளிகள் (buckets) பாய்மத்துக்கு அழுத்தத்தையும் விரைவையும் (velocity) ஊட்டுகின்றன.
மேற்கோள்கள்
- https://www.daikinapplied.uk/features/single-screw-compressor
- Screw Compressor Archived 2008-01-10 at the வந்தவழி இயந்திரம். Describes how screw compressors work and include photographs.